பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனா சமீபத்தில் அரசு தடையை நீக்கச் செய்து டாக்கா திரும்பினார். இடைக்கால அரசு அவர்மேல் லஞ்ச வழக்குகளை தொடுத்துள்ளது. அதிலிருந்து மீளுவாரா, மறுபடியும் ஆட்சியைப்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.எழுபதுகளில் தில்லியில் இருந்தபோது அவரைச்சந்தித்ததும், அதன்பின் தொடர்ந்த நாலாண்டு ஆழ்ந்த நட்பும் என்னைப் பின்னோக்கி அசைபோட வைத்தன.
என் ஐம்பதுவருட தில்லி வாழ்க்கையில் நான் சந்தித்த முக்கியமானவர்களில் ஷேக் ஹஸீனாவும் ஒருவர். ஆகஸ்ட் 15, 1975. நமது சுதந்திரதினம். தில்லியில் திருமதி இந்திரா காந்தி செங்கொட்டையில் கொடியேற்றி சொற்பொழிவாற்றினார். எல்லோருக்கும் விடுமுறை. எனக்குமட்டும் ஆபீசில் வேலை. மற்ற ஊடகங்கள் எதுவுமின்றி செய்திகளுக்கு ஆல் இந்தியா ரேடியோவையே நம்பியிருந்த ‘எமர்ஜென்ஸி‘ நாட்கள். தொலைபேசி மூலமாக லண்டனிலிருந்து வந்த ஒரு செய்தி எங்களைத் திடுக்கிட வைத்தது. ‘வங்கத்தந்தை ஷேக் முஜீபுர் ரஹ்மானும், அவர் மொத்த குடும்பத்தினர், வேலையாட்கள் அனைவரும் அவரது தன்மண்டி ஏரியா வீட்டில் சரமாரியாக சுடப்பட்டு இறந்தார்கள்‘. BBC ரேடியோ சிலமணிக்குள் இந்தச்செய்தியை உறுதிசெய்தது. நமது ரேடியோ மாலை வரை வாயே திறக்கவில்லை. எமர்ஜென்ஸியல்லவா?
மாதமிருமுறை பங்களாதேஷ் போகும் நான் அதற்கு ஒருவாரம் முன்புதான் பங்களா தேஷிலிருந்து, அவரைச் சந்தித்துவிட்டு, திரும்பியிருந்தேன். வங்கபந்து [பெங்காலியில் பொங்கபொந்து] ஷேக் முஜிபுர் குடும்பத்தில், அவர் மகள் ஹஸீனா வாஜேத் தவிர மற்றவர்களெல்லம் ராணுவத்தினரால் சரமாரியாக சுட்டுக்கொலை. ஹஸீனாவும் கணவரும் அச்சமயம் லண்டனில் இருந்தததால் தப்பித்தார்கள். ராணுவம் ஆட்சியைக்கைப்பற்றி, ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் [தற்போது சிறையிலிருக்கும் மூன்னாள் பிரதமர் திருமதி காலிதா ஜியாவின் கணவர்] ஜனாதிபதியாகவும், Chief Martial Law Administrator ஆகவும் பதவியேற்றுக் கொண்டார். அவாமிலீக் தடைசெய்யப்பட்டது. ராணுவம் மக்களாட்சியில் குறுக்கிடுவது, பங்களாதேஷுக்கு, பாகிஸ்தானிடமிருந்து தொற்றிக் கொண்ட சாபம்! அது இன்னும் தொடர்கிறது.
இனி நான் சொல்லப்போவது எமர்ஜென்ஸிகாலத்து அரசாங்க ரகசியம். லண்டனிலிருப்பது ஹஸீனாவுக்கு ஆபத்து என்று கருதிய இந்திராகாந்தி ரகசியமாக ஹஸீனாதம்பதியரை பலத்த பாதுகாப்புடன் தில்லி வரவழைத்தார். இதற்கிடையில் பங்களாதேஷில் ஜியாவுர் ரஹ்மானைக் கொன்று, ஜெனரல் H.M. இர்ஷாத் ஆட்சியைக்கைப்பற்றினார். இருவருமே வங்கத்தந்தையின் மகள் தங்கள் நாட்டுக்கு வருவதை விரும்பவில்லை!
திருமதி இந்திராகாந்தி இவரையும், கணவர் Dr. வாஜேதையும் இந்திய அரசின் ‘Z‘ பிரிவு பலத்த பாதுகாப்புடன், சிலவருடங்கள் தில்லி பண்டாரா பார்க் C-1 அரசாங்கவீட்டில் தங்க வைத்திருந்தார். Dr.வாஜேத் ஓர் அணுசக்தி விஞ்ஞானியாதலால் அவருக்கு இந்திய அணுசக்தி கமிஷனில் வேலையும் கொடுத்திருந்தார். சில RAW/CBIஉயர் அதிகாரிகளைத்தவிர மற்ற யாருக்கும் அவர் யாரென்றே தெரியாது. அவர்கள் பெயர் மாற்றப் பட்டு, அக்கம் பக்கத்தில், Dr.சிக்தர், அவர் மனைவி இருவரும் பெங்காலிகள் என்ற அளவிலேயே அறியப்பட்டனர். பார்வையாளர்கள் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வெளியுலகத் தொடர்பில்லாமலே வாழ்ந்தார்கள். வீட்டுக்குத் தேவையான பாலிலிருந்து மளிகைச்சாமான்கள் வரை, தீவிர பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, இந்திய அரசாங்கமே வழங்கிவந்தது. பங்களாதேஷின் பொருளாதாரம் தரைமட்டமான நிலையில், Balance of Trade-ஐ சமன் செய்யும் நோக்கில், நம் அரசு அங்கிருந்து நியூஸ் பிரிண்ட் காகிதத்தை STCமூலமாக இறக்குமதிசெய்ய ஒப்புக்கொண்டது.
நான் பங்களா தேஷ் அரசின் இந்திய ஏஜண்ட் என்றமுறையில் அடிக்கடி டாக்கா, குல்னா, சிட்டகாங் போன்ற இடங்களுக்குப் போய்வருவேன். சில மாதங்களில் மூன்றுமுறைகூட போகவேண்டிவரும். என் நண்பர்கள் விளையாட்டாக என் மனைவியிடம், ‘இவன் ஏன் அடிக்கடி பங்களாதேஷ் போறான் தெரியுமா? அங்கே இவனுக்கு ஒரு சின்னவீடு இருக்கு!‘ என்பார்கள். என் மனைவி பதிலுக்கு, ‘அப்போ அங்கேயே செளக்யமாக இருக்கவேண்டியதுதானே, இங்கே வந்து என் வயத்தெரிச்சலை ஏன் கொட்டிக்கிறார்?‘ என்று பதிலடி கொடுப்பாள்! ஒருமுறை டாக்காவிலிருந்து அரசு அதிகாரி Dr. Tofail Ahmed தில்லி வந்தார். என்னிடம், ‘மணி, இன்று பத்தரைமணிக்கு நாம் ஓர் இடத்திற்குப் போகிறோம். யாரிடமும் இதுபற்றி பேசக்கூடாது. இது அரசாங்க ரகசியம். உன் வீட்டிலும் ஆபீசிலும் கூட யாருக்கும் தெரியவேண்டாம்‘ என்றார். காரில் ஏறி உட்கார்ந்ததும், விலாசத்தைச் சொன்னார். அது உயரதிகாரிகள் வசிக்கும் பண்டாரா பார்க். தீவிர உடல்சோதனைக்குப்பிறகு, இரு போலீஸ் அதிகாரிகள் உடன் வந்து அவர்களே காலிங் பெல்லை அழுத்தினர். கதவு திறந்தபோது, கணவன் மனைவியாகத் தென்பட்டவர்கள் இருமுறை ‘ok ok‘ என்று சொன்னபிறகுதான் அதிகாரிகள் விலகினர். எங்களுக்கு நடுவிலிருந்த இரும்பு அழிக்கதவிலிருந்த ஒரு பெரிய பூட்டைத்திறந்து, Dr.அஹமதையும், என்னையும் உள்ளே அழைத்தனர். அதற்குப்பிறகு சுமார் மூன்றுமணிநேரம் அவர்கள் மூவருமே பெங்காலியில் பேசிக்கொண்டார்கள். இடையிடையே ‘தார்ப்பொரே‘ [தமிழில் அப்புறம்] என்ற வார்த்தையைத்தவிர எதுவும் எனக்குப்புரியவில்லை. நம் தமிழர்களைப்போலல்லாமல், ஓர் ஆங்கிலச்சொல் கலக்காமல் பேசியது, மருத்துவர் ராமதாசை மகிழவைத்திருக்கும். ஆனாலும், ‘இவன் நம்பிக்கையானவன், அடிக்கடி பங்களாதேஷ் போய்வருபவன், உங்கப்பாவையும் சந்தித்திருக்கிறான்‘ என்பதெல்லாம் புரிந்தது.
அப்போதிருந்த என் தோற்றம் — வகிடில்லாமல் பின்புறமாக வாரப்பட்ட முடி, கறுப்பு பிரேம் போட்ட கண்ணாடி, மீசை, என் நிறம் — எல்லாம் இளவயது ஷேக் முஜிபுரை ஞாபகப்படுத்துகிறது என்பதை ஹஸீனா எனக்கு ஆங்கிலத்தில் சொன்னார். [இது என்னை அப்போது பார்த்த பலரும் சொன்னது. டாக்கா இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் ரிஸப்ஷன் அதிகாரி, என்னை சிறிதுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு, ‘You are just like our Banga Bandhu in his younger days‘ என்று சொல்லியிருக்கிறார்.]
அதற்குப்பிறகு நான் பங்களாதேஷ் போய்த்திரும்பும்போதெல்லம் என்னிடம் ஹஸீனாவுக்கு கொடுக்க ஒரு பார்ஸல் நிச்சயம் இருக்கும். தில்லி ஏர்போர்ட்டிலிருந்து நேராக அவர் வீட்டுக்குப்போய் அதை ஒப்படைத்துவிட்டுத்தான் என் வீட்டுக்கே போவேன். அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. அதுதான் ‘ஹீல்ஸா‘ மீன். அது ஒருவகை நல்ல தண்ணீர் மீன் [Fresh Water Fish]. எல்லா வங்காளிகளுக்கும் அது கிடைத்தற்கரிய தேவாம்ருதம் போல. ஒரு கிலோ ஹீல்ஸாவுக்காக, தன் சொத்தில் பாதியைத்தர தயாராயிருப்பார்கள். அது இந்தியாவில் கிடைக்காதாம். பங்களாதேஷில் பத்மா நதியில் மட்டுமே கிடைக்கும். [சமீபத்தில் CNN-IBN-ல் பார்த்தேன். இப்போது திருட்டுத்தனமாக பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்ட இந்தவகை மீன் கொல்கத்தா மீன்சந்தையில் கிலோ 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்!] தில்லியிலிருந்து வாரமிருமுறைதான் டைரக்ட் ப்ளைட் டாக்காவுக்கு. Thai விமானம் செல்லும். அல்லது கொல்கத்தா போய், அங்கிருந்து பங்களாதேஷ் பிமான் பிடிக்கவேண்டும். டாக்காவிலிருந்து தில்லிக்கு தாய் விமானத்தில் தான் திரும்புவேன். மீன் பார்ஸலை விமானத்தில் Freezer-ல் வைத்துவிடுவார்கள். தில்லி இறங்கும்போது, விமானப்பணிப்பெண்கள் பார்ஸலோடு, என் குழந்தைகளுக்கு [அப்போது இந்தியாவில் கிடைக்காத] Orchidபூக்களும், Coke Tins-ம் இலவசமாகத்தருவார்கள். அவர்களுக்கு நான் ஒரு நிரந்தர வாடிக்கையாளனல்லவா?
திருமதி ஷேக் ஹஸீனா வீட்டுக்கு நான் அடிக்கடி போனதால், போலீஸ் சோதனைகெடுபிடி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. மீன் பார்சலையும், கடுகெண்ணையில் தயாரித்த வங்காள ஊறுகாய் பாட்டில்களையும் சோதனையின்றி அனுமதித்தனர். எனது ‘பால்வடியும் முகம்‘ என்னை நல்லவன், எந்த தப்புத்தண்டாவுக்கும் போகாதவன் என்று அவர்களுக்கு உணர்த்தியிருக்கவேண்டும்! இருந்தும், என் மனைவியுடன் ஹஸீனாவீட்டுக்கு சென்று பார்த்துவர அனுமதி மறுத்துவிட்டனர். தனியாகத்தான் சந்திக்கவேண்டியிருந்தது. ஹஸீனாதம்பதியருடன் பழகியதில் ‘இவர்களுக்கு கோபமே வராதோ‘ என்ற அளவில் எந்த பந்தாவுமின்றிப்பழகுவார்கள். எங்கள் நட்பு நாலாண்டுக்கு மேல் தொடர்ந்தது. என்னை ‘மோனி தாதா‘ என்றே அழைப்பார்.
. ‘நடிகர் அசோக் குமார் எல்லோருக்கும் தாதா மோனி, நீ எங்களுக்கு மோனி தாதா‘ என்பார். அப்போதெல்லாம் அவர் பிற்காலத்தில் ஒரு நாட்டுக்குத் தலைவராக வருவாரென்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இவரைப்போலவே இன்னும் இருவரையும் நான் குறிப்பிட்டாகவேண்டும். அவர்களும் இந்தப்பாமரனுடன் நட்புப்பாராட்டி, பிறகு தமிழ்நாட்டையே ஆண்டவர்கள்!
1963-வாக்கில் நார்த் அவென்யூ கார் ப்ரோக்கர் ஸ்வாமி மூலம் பரிச்சயமான அறிஞர் அண்ணாவும், C.L. காந்தன் மூலமாக அறிமுகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும். அண்ணா அவர்கள் தில்லியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, இரவு பத்துமணிக்காட்சிகளுக்கு ரிவோலி, ஓடியனில் நான் டிக்கெட் வாங்கிவைத்துக் காத்திருப்பேன். எப்போதுமே லேட்டாக, படம் ஆரம்பித்தபின் , ‘பட்பட்டி’யில் அவசரமாக வந்திறங்கும் அண்ணாவுடன், அவர் மூக்குப்பொடி வாசனையை இரண்டுமணிநேரம் பொறுத்துக்கொண்டு, பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த ஆங்கிலப்படங்களில் சில: To Sir, with Love, Solomon and Sheba, School for Scoundrels, Ten Commandments, Ben Hur etc.அப்போது, வருங்கால முதலமைச்சருடன் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே வந்ததில்லை.
எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜெய்ப்பூர் போயிருக்கிறேன், சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். மற்ற நடிகர்களைப் போலல்லாமல், அவருக்காக நான் செலவழித்த பணத்தை கணக்கு வைத்து, சென்னைக்கு திரும்புமுன் இருமடங்காக தன் உதவியாளர் மூலம் என் பாக்கெட்டில் திணிப்பதைப் பார்த்தபிறகே, வண்டியை எடுக்கச்சொல்லும் எம்.ஜி.ஆர். தனியாக இருக்கும்போது என்னிடம் மலையாளத்திலேயே பேசும் எம்.ஜி.ஆர்.! ஷேக் ஹஸீனா, அண்ணா, எம்.ஜி.ஆர். இம்மூவரும் தங்கள் நாட்டுக்குத் தலைவர்களாக வருவார்கள் என் எண்ணிப்பார்க்கும் விவேகம் அல்லது தீர்க்க தரிசனம் என்னிடம் இருந்ததில்லை! அதேபோல இம்மூவரையும், அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! அப்படி அவர்களை பதவியிலிருக்கும்போது, நேரில் பார்க்கப் போயிருந்தால், என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா? எனக்குத் தெரியவில்லை!
பாரதி மணி (Bharati Mani)
bharatimani90 at gmail dot com
உயிர் எழுத்து அக்டோபர் 2007-ல் வெளியானது.
0 comments:
Post a Comment