Thursday, January 21, 2016

நாகர்கோவிலில் பிறந்து புது தில்லியில் 50 ஆண்டுகள் பணியாற்றிய எஸ்.கே.எஸ் மணி அங்கு தமிழ் நாடகக் குழு ஒன்றைத் தொடங்கி இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, சி.சு.செல்லப்பா, சோ உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் நாடகங்களை அரங்கேற்றியவர். ஞான ராஜசேகரன் இயக்கிய பாரதி திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தவர் பாரதி மணி என்ற பெயர்பெற்று சென்னை விருகம்பாக்கத்தில் குடியேறிவிட்டார்.
அண்மையில் தன் சென்னை அரங்கம் சார்பில் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகத்தைச் சென்னையில் அரங்கேற்றிய பாரதி மணியிடம் சென்னை வாழ்க்கை பற்றியும் சென்னையில் நாடகச் சூழல் குறித்தும் பேசியதிலிருந்து…
 சென்னையில் குடியேறுவதற்கு முன், உங்கள் வாழ்க்கைக் கண்ணாடியில் சென்னையின் பிம்பம் பற்றி?
நான் 50 வருட டெல்லி வாழ்க்கைக்கு பிறகு 2000இல் சென்னையில் குடியேறினேன். அதுவும் பாரதி படத்துக்காகதான். அதுக்கு முன்னாடி டெல்லிலருந்து சொந்த ஊருக்குப் போக வருவேன். இங்க இரயில்ல டிக்கட் வியாழக்கிழமை மட்டும்தான் கிடைக்கும். ஜி.டி. எக்ஸ்பிரஸ்ல வந்து இறங்கிட்டு வால்டாக்ஸ் ரோட்ல சந்திரவிலாஸ் ஹோட்டல்ல தங்கிட்டு அடுத்த நாள் திருநெல்வேலி இரயில் பிடிச்சி ஊருக்கு போவேன். குளிச்சிட்டு வந்து நின்னா வியர்வை சொட்டும். அந்த சென்னையதான் எனக்கு தெரியும்.
சென்னைவாசியாக மாறிய பிறகு உங்கள் பார்வை மாறி இருக்கிறதா?
இங்க கடந்த பத்து வருடங்களுக்கு மேல் இருக்கிறேன். ஆனால் இன்னமும் இது என்னுடைய ஊர் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு இன்னும் இங்கு வேர் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் a day out of delhi is a day out of my life என்று சொல்லுமளவுக்கு டெல்லி வாழ்க்கை என் மனதில் பதிந்துவிட்டது. சென்னையிலிருக்கும் நாடகம் கச்சேரி சினிமா இவைதான் நான் இங்கிருக்க முக்கிய காரணங்கள். நடிப்பின் மீதும் சங்கீதத்தின் மீதும் எனக்குள்ள காதல்தான் என்னை இங்கே பிடித்து வைத்திருக்கிறது. மற்றபடி சென்னை என்னை இழுத்தது என்றெல்லாம் சொல்ல முடியாது.
என் பிள்ளங்க அவங்க இருக்கற நாட்டுக்கு கூப்பிடுறாங்க. ஆனால் இங்க எனக்கு பிடிச்சத செஞ்சிகிட்டு இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு. அப்போ சென்னை கிராமம் மாதிரிதான் இருக்கும். டெல்லி எங்கயோ போய்விட்ட நேரத்திலும் சென்னை இன்னும் வளராமல் என்ன இப்படி இருக்கேனு நினைப்பேன். இப்ப சென்னை ஒரு international city மாதிரி மாறிவிட்டது.
நீங்க சென்னையில் இருக்க காரணமாக இருந்த நாடகமும் சினிமாவும் எப்படி உங்களைச் சென்னையோடு பிணைச்சு வச்சிருக்கு?
சிறு வயசில் அப்பா எனக்கு நல்ல புத்தி வரணும்னு நாடகம் போட்ற நவாப் ராஜரத்தினம்நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை கூட கோயம்புத்தூர் அனுப்பி வச்சாரு. அவர் அப்பப்போ சிறுசிறு பாத்திரங்கள்ள நடிக்க வச்சாரு. அப்ப ஆரம்பிச்சது நடிப்பின் மீதான மோகம். அந்த அரிப்புதான் டெல்லில தமிழ் நாடகங்களை அரங்கேற்றவும் இன்று சென்னையில் இருப்பதற்கும் காரணம். அதுமட்டுமில்லாம எல்லா நாடகத்துலயும் ஒரு நல்ல ரோல் எடுத்து பண்ணுவேன். டெல்லில இருக்கும்போதே ஹிண்டு பேப்பர்ல டுடேய்ஸ் என்கேஜ்மெண்ட் பாப்பேன். வர முடியலைனாலும் எங்க கச்சேரி, நாடகம் நடக்குதுனு பாக்கறதுதான் முதல் வேலை. பாரதி படத்துல பாரதியோட அப்பா கேரக்டர் ஒரு ஐயர். டெல்லி கணேஷ், பூர்ணம் விஸ்வநாதன் போன்ற வழக்கமான முகங்களை தவிர்த்து புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது என்னைக் கூப்பிட்டார்கள். ஷாயாஜி ஷிண்டேவிற்கு தமிழ் தெரியாது என்பதாலும் அவருக்கு பாரதியின் வாழ்க்கையை எடுத்து கூறவும் நான் அந்த கேரக்டருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். நாடகம்,சினிமா என்றிருந்ததால் எனக்கு எழுத்தாளர்கள் வட்டத்தில் நிறைய நண்பர்கள் உண்டு.  சுஜாதா, அசோகமித்திரன் இந்திரா பார்த்தசாரதி, நடிகர்களில் சிவாஜி, நாகேஷ் மேஜர் சுந்தர்ராஜன் போன்றோர்.
சென்னையில் உங்களுக்குப் பிடித்தமான இடங்கள்?
இங்க நான் எங்கயும் போனதில்லை. நாடகம், சினிமா பாக்கறதுக்கும் சாப்பிடவும் போவேன் அவ்வளவுதான். இப்ப நடக்க முடியாததால எங்கயும் போகவும் முடியறதில்லை. பிடித்தமான இடங்கள் எதுவுமே இல்லை.
கடற்கரைக்கு போயிருக்கிறீர்களா? அந்த அனுபவம் பற்றி?
2000லயே பீச்சுக்கு நண்பர்கள் கூட போகும்போது கூட்டம் நிறைய வரும். இப்ப சொல்லவே தேவை இல்ல. அவ்ளோ கூட்டம் வருது. எனக்கு கூட்டத்துல மாட்டிக்கிறது பிடிக்காது. அதனால அதிகமா பீச்சுக்கு போனதில்லை.
மறக்க முடியாத படங்கள், தியேட்டர்கள்?
டெல்லியிலிருந்தபோது இங்க வந்தா விழுப்புரத்துல 12 மணி ஷோக்கு போவேன். சிவாஜி படங்கள் எல்லாம் விரும்பி பாப்பேன். இங்க சென்னையில வெலிங்டன்ல ஆயிரத்தில் ஒருவன் பாத்தேன்.அதுதான் நான் முதல்ல பாத்த எம் ஜி ஆர் படம். அப்போ ஏற்கனவே ஒரு படம் பாத்துட்டு வந்ததால தூங்கிட்டேன். பக்கத்துல இருந்தவன் இடிச்சு எழுப்பி “தலைவர் படம் ஓடுது, தூங்காமப் பாரு”ன்னு மெரட்டினான். அப்புறம் தூங்காம படம் பாக்க வேண்டியிருந்தது. தேவி தியேட்டர் போயிருக்கேன்.
சென்னயில் நீங்கள் சென்ற கோவில்கள்?
நான் 24 கேரட் ஹிந்துதான். ஆனாலும் கோவிலுக்கு போயே ஆகணும்னு நான்  நெனச்சதில்லை. எத்தனையோ முறை மதுரை போய்ட்டு மீனாட்சிய பாக்காம வந்திருக்கேன். திருவண்ணாமலைல ஷூட்டிங். 5 நாள் தங்கிருந்தேன். ஒரு நாள்கூட கோவில் போகல. எப்பவாவது யாராவது கார்ல கூப்பிட்டா போய்ட்டு வருவேன். சென்னைல வந்து தங்கும்போது எப்பவாவது காலைல சீக்கிரம் கிளம்பிட்டா கபாலி கோவிலுக்குப் போய்ட்டு வருவேன்.
இங்கு உங்களுக்குப் பிடித்த உணவகங்கள்?
எனக்கு நாக்கு நாலு மொழம். நாக்குக்கு ருசியா தரமா சாப்பிடணும். எனக்கு எங்க அம்மா சொல்லிக் குடுத்தது. எங்க சாப்பிடப் போனாலும் 98 மார்க் வாங்கின சாப்பாட்டுல கூட மீதி 2 மார்க் எங்கன்னு கேப்பேன். காளிகாம்பாள் மெஸ் ரவா தோசை ஆனியன் இல்லாம, ராயர் மெஸ் இட்லி, அப்பறம் மயிலாப்பூர் நடுத்தெருல ஒரு தம்பதியோட ரோட்டுக்கடை இதெல்லாம் என்னோட ஃபேவரேட். இப்ப நானே சமைச்சிதான் சாப்பிடறேன். என்னோட இட்லி பொடி உலக பிரசித்தம்.
ஒரு நாடகக் கலைஞராகச் சென்னயில் நாடகங்களின் நிலை பற்றி உங்கள் கருத்து?
இங்க இப்ப நாடகங்களையும் நாடக அமைப்புகளையும் பார்க்கும்போது கோபம்தான் வருது. இங்க நாடகத்தை சினிமாவுக்குள்ள போறதுக்கு ஒரு கதவாதான் பாக்கறாங்க. இங்க எல்லாமே சினிமாமயம் ஆயிடுச்சி. பல பேர் காசுக்காக நாடகம் போடறாங்க. நான் போட்ட நாடகங்களுக்கு நான் பார்வையாளர்கள்கிட்ட காசு வாங்கினதே கிடையாது. எல்லாமே மனத் திருப்திக்காக போட்டது. நாடகத்துல நான் ஒரு பைசா சம்பாதிச்சது இல்ல. ஆனால் இங்க இருக்கற மக்கள் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு குடுக்குறாங்க. இன்னும் கேட்டா என்கிட்ட தொழில்முறை நடிகர்கள் யாரும் இல்ல. என் நாடகத்துல நடிக்கறவங்க எல்லாருமே பல துறைகள்ள இருக்கறவங்க. அவங்கள நடிக்க வச்சி மக்கள் பாராட்ட வாங்கறதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி. அவங்க யாருமே சம்பளம் மட்டுமில்ல போக்குவரத்துக்கு கூட காசு வாங்கினது இல்ல. அது மட்டுமில்லாம இந்த ட்ரிக் ஷாட்லாம் அழகா லைட்டிங் வச்சி பண்ணுவேன். ஆனால் இங்க திரை விழவச்சிதான் பண்றாங்க.
டெல்லியிலிருந்த உங்களுக்கு சென்னை மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?
இப்ப ரொம்பவே மாறிடுச்சி சென்னை. இப்போ சென்னை ஒரு உலகத் தர சிட்டி மாதிரி ஆயிடுச்சி. இங்க இருக்கற மால்கள், பெரிய கடைகள் மேம்பாலங்கள் இதெல்லாம் இந்த பத்து வருஷத்துல வந்த மாற்றம்தான். நான் எந்த மாலுக்கும் போனதில்ல. எனக்கு என் குழந்தைங்க எடுத்து குடுக்கிறததான் நான் போட்டுக்கறேன்.

முக்கியமா அப்போ இருந்த பேரம்பேசற கல்ச்சர் போய்டுச்சி. எது விலை ஏறினாலும் கவலையே படுவதில்லை. 60-கள்ள பத்தணாவுக்கு பத்து வாழைப்பழம் தருவாங்க. நாங்க பதினஞ்சு கேட்டு கடைசில பன்னிரண்டு வாங்கிட்டு வருவோம். 300 400க்கு கிடைச்ச ஏசி ரூம் இப்போ பத்து மடங்கு அதிகமாயிடுச்சி. அப்போ இங்க துணி எடுக்க கிராமத்துலருந்து கிளம்பி வருவாங்க. 10000, 20000 ரூபாய்ல புடவை எடுப்பாங்க. ஆனா கால்ல பாத்தா பாத்ரூம் செருப்புதான் இருக்கும். இப்போதான் இங்க ஒரே கிரெடிட் கார்ட். அப்போலாம் கிரெடிட் வவுச்சர் குடுப்பாங்க. இங்க எத்தனை நாள் தங்க போறேனு தெரியாது. அதனால போகும்போது காசு இல்லாம போய்ட கூடாதுனு ஹோட்டல்ல மூணு நாளைக்கு 500 வானா இந்தா 5000 வச்சிக்கோன்னு குடுத்துருவேன். திரும்பி போகும்போது அவன் குடுக்கிறது என்னமோ ஃப்ரீயா குடுக்கிற மாதிரி இருக்கும்.  60கள்ள 10 அணாவுக்கு அளவு சாப்பாடும் 12 அணாவுக்கு அளவில்லாத சாப்பாடு தயிரோடயும் கிடைக்கும். அப்போ வெள்ளிக்கிழமை சப்பாத்தி மட்டும்தான். ரைஸ் கிடையாது. அன்னிக்கு நைட்டு 12 மணிக்கு கடை வாசல்ல கூட்டம் தெரு முழுக்க நிக்கும் அரிசிக்கு.
சென்னையின் கட்டமைப்பு மாற்றம் எப்படி இருக்குனு நினைக்குறீங்க?
80க்கு முன்னாடி தெரு எல்லாம் விசாலமா இருந்தது. ஆனா இப்போ ஒரே நேரத்துல இரண்டு பஸ் எதிர் எதிரே போக முடியாது. 1982இல் ஆரம்பமான இந்த மேம்பாலம் கல்ச்சர் தெருவ கோமணம் மாதிரி ஆக்கிடுச்சி. அதுக்கு அப்புறம்தான் இங்க எல்லாத்தையும் ஒன்வே ஆக்கிட்டான். ஆனா டெல்லில இதே மேம்பாலத்த ப்ளாண் நிறைய இடம் விட்டு கட்டியிருக்காங்க. டெல்லில ஒரு இடத்துக்கு போகணும்னா கரெக்டா போயிடலாம். ஆனா இங்க மயிலாப்பூர் நெனச்சி போனா அது சைதாப்பேட்டைல கொண்டு விட்ரும்.
ஆட்டோ பயணங்கள் பற்றி?
இரயில்வே ஸ்டேஷன்ல வந்து இறங்கினதுமே நெஞ்சு படபடனு அடிச்சுக்கும். எனக்கு ஆம்பள புள்ள பொறக்கணும்னு சில பேர் வேண்டற மாதிரி ஒரு நல்ல ஆட்டோக்காரன் கிடைக்க மாட்டானான்னு தோணும். அவன்கிட்ட பேரம்பேசி, அவன் ஏழு பிறப்பையும் திட்டி வீடு போய் சேரறது இருக்கே. டெல்லில மீட்டரைப் போட்டுகிட்டு போய்ட்டே இருப்பானுங்க. எதும் பேசகூட மாட்டானுங்க கரெக்டா மீட்டர் காட்டினத வாங்கிட்டு போவாங்க. இங்கதான் இப்படி.
இங்குள்ள மக்களின் மனநிலை எப்படி மாறியிருக்கு?
இங்க நம்மல பத்தி கவலையில்லை. பக்கத்துல என்ன நடக்குது யாரு வந்தா எப்ப போனாங்க… இப்படி மூக்க நுழைக்கறதுதான் அதிகமா இருக்கு. இங்க எங்கயும் வாங்குற காசுக்கு சரியான சர்விஸ் குடுக்கறதில்ல. சலூன் கடைல ஏசியும் வேல செய்யாது. நல்லா கண்ணாடிப் போட்டு அது மேல ஸ்க்ரீன் போட்டு மூடி வச்சிருப்பாங்க. காத்தும் வரலை இந்த முடி குப்பைனால நாத்தம் அடிக்கிதுடானு சொல்லி திட்டிட்டு வருவேன். முன்னாடி எல்லாம் தேவி தியேட்டர்ல இரண்டாவது மாடிலதான் தண்ணி வச்சிருப்பாங்க. அதுல டம்ளர சங்கிலி போட்டு கட்டி வச்சிருப்பான். கொஞ்ச பேரு குடிக்கறதுக்குள்ள அந்த சங்கிலி சுருட்டிக்கிட்டு அந்த பாத்திரத்து முனையில இருக்கும். அதுக்கப்புறம் யாருமே தண்ணி குடிக்கவே முடியாது. நான் நேரா போய் அந்த மேனேஜர்ட்ட வரவங்க எல்லாரையும் பாத்தா திருடன் மாதிரி தெரியுதா, ஒண்ணுக்கு நாலா வாங்கி வச்சா ஒண்ணு போனாலும் மூணு இருக்கும்ல, ஒரு நாளைக்கு எவ்ளொ சம்பாதிக்கிறீங்கனு கேட்டுட்டு வந்தேன். இப்ப அங்க தண்ணியே இல்ல. காசு கொடுத்துதான் தண்ணிகூட வாங்கணும் ஒரு தடவை பஞ்சாபிக்காரனோட ஹோட்டல்ல சாப்படப் போனேன். 110 ரூவா பில். என்கிட்ட இருந்த 300 ரூபாய மறந்து ஆஃபீஸ்ல வச்சிட்டேன். கவுண்டர்ல, இந்த பைய வச்சிக்கோங்க நான் காசு குடுத்துட்டு வாங்கிக்கிறேனு சொல்லிட்டு வந்தேன். அந்த பஞ்சாபி உள்ளருந்து வந்து விஷயத்தை கேட்டுட்டு பைய என்கிட்ட குடுத்து நாளைக்கு குடுங்கனு சொன்னாரு. அடுத்த நாள் நான் குடுக்கும் போது ஓகேனு சொல்லிட்டு அவன் வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டான். பஞ்சாபிலிருந்து பஞ்சம் பொழக்க வந்தவனுக்கு இருக்க மனசு நமக்கு ஏன் இல்ல?
இப்போ இந்த நிலை மாறியிருக்கு. நிறைய மல்டிப்ளக்ஸ் ஹோட்டல்ஸ்ல நீங்க நினைக்குற சர்வீஸ் கிடைக்குதே.

ஆமா. நான் மறுக்கல இப்பதான் நானும் கண்டுபிடிச்சேன். ஆனா இதுவும் காசு இருக்குறவங்களுக்கு மட்டும்தான் சாத்தியம். சாதாரண இடங்கள்ள காசு இல்லாத மக்களுக்கும் இருக்கிற சர்வீ ஸ ஒழுங்கா குடுக்கலாமே. இங்க இருக்கவங்களுக்கும் எத பத்தியும் கவலை இல்லை. யாரையும் கேள்வி கேக்கறதில்ல. எல்லாத்துக்கும் பழகிட்டாங்க மக்கள். என்னால ஏத்துக்க முடியல.
அதுக்கு காரணம் என்னன்னு நினைக்குறீங்க?
நான் டெல்லில இருந்து கிளம்பும்போது பிச்சை கேக்கறவங்களுக்கு 5ரூவா போட்டு தொடங்குவேன். அது நாக்பூர் வரும்போது 2ரூவா ஆகும். விஜயவாடால கேக்கறவங்கல பாக்காம திரும்பி நின்னுட்டு சாப்பிட சங்கோஜமா இருக்கும். அதனால எட்டணா போடுவன். திருநெல்வேலில நாலணால வந்து நிக்கும். அதே மாதிரி டெல்லில கணக்கு பாக்காம நண்பர்களோட செலவு பண்ணின நான் இங்க ஹோட்டல்ல சாப்டா விலைப்பட்டியல பாத்து எத்தனை பேரு என்னென்ன சாப்பிட்டோம்னு மனசு கணக்கு போடுது. ஏன்னா இங்க இருக்கறவங்க மேல நம்பிக்கை வரமாட்டேங்குது. இதுக்கு காரணம் கேட்டதுக்கு எழுத்தாளர் அகிலன் ஆதவன் சொன்னார், இந்தியாவோட ஷேப் போலவே கீழ வர வர நம்ம மனசும் குறுகுதுன்னு. அவர் சொன்ன லாஜிக் சரியாதான் இருக்கு ஏன்னா நானும் அப்படித்தான இருக்கேன்.
சென்னை இழந்துவிட்ட அடையாளங்கள் எதாவது இருக்கிறதா?
இப்போ சென்னை கிராமம் இல்லை. அதே மாதிரி பலருக்கு அடையாளமா இருந்த பிள்ளை செட்டியார் இதெல்லாம் இப்போ இல்லை. எங்க அப்பா காலத்துல வீட்டுக்கு எல்லா வித மக்களும் வருவாங்க. அவங்கவுங்க சாதி பேர வெச்சுதான் கூப்டுப்பாங்க. ஆனா ஒருத்தர ஒருத்தர் அவமானப்படுத்திக்க மாட்டாங்க.  இப்ப பேருல சாதி போய்டுச்சு. ஆனா பேரளவுக்குதான் போயிருக்கு.

0 comments:

Post a Comment