Thursday, January 21, 2016

எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தை சின்ன சாமி ஐயராக நடித்தவர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருக்ஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும்  தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி ஐயா.  பலருக்குத்தெரியாத இன்னொரு விபரம்  பேரறிஞர் அண்ணா., மற்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோருடன் தில்லியில் நெருங்கிய நட்புடன் இருந்தார் என்பது. இரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர். அவர்கள் முதல்வரானதும் ஒருமுறை கூட போய்ப்பார்க்காதவர்!
அறிஞர் அண்ணாதுரை அவர்களின் எளிமையையும்., டெல்லிக்கு வந்த அவருடன் பார்த்த ஆங்கிலத் திரைப்படங்களையும் மற்றும் எம் ஜி ஆர் அவர்களுடன் ஜெய்ப்பூர் போனதையும் அவரின் ஈகைக் குணத்தையும் தன்னுடைய ” ல நேரங்களில்  ல மனிதர்கள்  என்ற ஒரே புத்தகத்தில் அற்புதமாக பகிர்ந்திருக்கிறார். இவர். இரண்டாவது புத்தகம் எழுதி, தனக்கு தமிழ் வாசகர்களை துன்புறுத்தும் எண்ணமில்லையென்று வேடிக்கையாக சொல்பவர்! 
ஐம்பது வருடம் தில்லியில் இருந்த இவர். நேரு., இந்திரா காந்தி., ராஜீவ் காந்தி.,  மொரார்ஜி தேசாய்., காந்திபாய் தேசாய், மது தண்டவதே,  ஷேக் ஹஸீனா  (பங்களாதேஷின் தற்போதைய அதிபர்), , அன்னை தெரசா., சுஜாதா.,  பூர்ணம் விசுவநாதன் போன்றோருடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் பெற்றவர்.  இவரது திரைப்பட அனுபவமே BBC சானல் தயாரித்த ஆங்கிலப்படத்தில் துவக்கம். இவர் நடித்த13 திரைப்படங்கள் தேசிய விருது வாங்கி இருக்கின்றன.  இலக்கியம்., நாடகம்., கர்நாடக இசை அறிவு., திரைப்படம்., பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு என பரந்துபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர்.
இவ்வருடம் தில்லி டைரக்டரேட் ஆப் ஃபிலிம் ஃபெஸ்டிவல் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்த ஜூரியாக தில்லி போய் 210 படங்களைப்பார்த்து, அதில் 26 சிறந்த படங்களை கோவாவில் நடந்த இந்தியன் பனோரமாவுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பெற்றவர். பிரபல இயக்குனரின் புது திரைப்படத்துக்காக ஸ்டில்ஸ் போட்டோ செஷனுக்கு சென்று  வந்த இவரிடம் நம் சூரிய கதிர் பத்திரிகைக்காக பேட்டி எடுத்தோம்
பாரதி மணி ஐயா! உங்களைப் பற்றி சொல்லுங்கள்..
என்னைப்போல ஒரு சாதாரணனைப்பற்றி சொல்ல பெரிதாக என்ன இருக்கிறது? நாகர்கோவில் பக்கத்திலுள்ள பார்வதிபுரம் என் சொந்த ஊர். 1937-ம் வருடம் புரட்டாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சிவகாமி-சுப்பிரமணியம் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவன். பரணியில் பிறந்தாலும், இன்னும் தரணி ஆளவில்லை! திருவனந்தபுரத்தில் என் தந்தை வேலை பார்த்ததால் அங்கே சாலை ஸ்கூலில் படிப்பு. பள்ளியில் எழுத்தாளர் நீல. பத்மநாபன் என் வகுப்புத் தோழர். அதன் பின் நாகர்கோவில் எஸ் எல் பி ஸ்கூலில் 11-வது வரை படித்தேன்.  எஸ் எஸ் எல் சி. முடித்த பின் டெல்லி சென்று அங்கே தமக்கை பகவதி வீட்டில் தங்கி , வேலையோடு,  பி. காம் ., எம் பி ஏ. என்று தொடர்ந்தேன்.  நான் இன்று வளர்ந்திருப்பதற்கு என் அக்காவும் அத்தானுமே பக்கபலம்!
முதன்முதலில் தில்லி பாரத் எலக்ட்ரானிக்ஸில் வேலை. 1955 இல் என் முதல் சம்பளம்136 ரூபாய் எட்டணா. பின்பு ஸ்டேட் ட்ரேடிங் கார்ப்பரேஷனில் பணி செய்தேன். பின்னர் பிர்லாவில் வேலை. அதன் பின் இண்டர்னேஷனல் ட்ரேடிங்கில் பணி. லைசன்ஸ் பர்மிட் கோட்டா ராஜ்  இருந்ததால் பேப்பர்., சிமெண்ட்,  சீனி., பாமோலின், கோதுமை, பத்திரிகைக்காகிதம், யூரியா, சல்ஃபர் போன்ற பொருட்களை இறக்குமதி செய்தோம் பலநாடுகளிலிருந்து.  அங்கெல்லாம் வேலை நிமித்தம் அடிக்கடி போகும் வாய்ப்பிருந்ததால், நான் அப்போது உலகம் சுற்றும் நாற்பது வயது வாலிபனாகஇருந்தேன்!. நான் போன நாடுகளைப் பட்டியலிடுவதை விட நான் போகாத நாடுகள் தான் குறைவு.
ஜெர்மனியிலிருக்கும் MAN  நிறுவனத்தின் சார்பாக இந்தியாவில் CEO  ஆக இருக்கும் போது 1978-ல்  பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் ஆரம்பித்தேன். . அப்போது என் சம்பளம் ரூ. 78,000. அரசுக்கு செலுத்தவேண்டிய வருமானவரிப்பிடிப்பையும் தனியாக ஒரு கவரில் போட்டு தந்துவிடுவார்கள்! இதெல்லாம் படிப்படியான முன்னேற்றம். வாழ்க்கையில் தத்தித்தத்தி முன்னுக்கு வந்தவன். அதனால் மற்றவர்களின் வலியை அறிந்தவன்.
க. நா. சு அவர்கள் மகள் ஜமுனா என் வாழ்க்கைத் துணைவி., மகள்கள் இருவர்., ரேவதி., அனுஷா. இருவரும் திருமணமாகி பெங்களூரிலும் டெல்லியிலும் இருக்கிறார்கள்.
நாடகத்துறை ., திரைப்படத்துறை ., இலக்கியத்துறையில் நீங்கள் வந்தது எப்படி..?
என்னோட சின்ன வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என் தந்தையைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வருவார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தான் முதன்முதலாக சங்கரதாஸ் ஸ்வாமிகள், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், F.G. நடேசய்யர் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கிறேன். என் தந்தை ஹேம்லெட் நாடகத்தை ஆங்கிலத்தில் உணர்வு பூர்வமாக குரல் ஏற்ற இறக்கத்துடன் வாசிக்க, ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாத நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.
அப்போது அவர்களுக்காக உணவு எடுத்துக்கொண்டு மாடிக்கு கொண்டு செல்லும் என்னைப் பார்த்து ஒரு நாள் ராஜமாணிக்கம் பிள்ளை சொன்னார், ’ அய்யர்வாள்! இவனை இரண்டுமாத பள்ளிக்கூட லீவில் என்னிடம் அனுப்பி வையுங்களேன்…..ட்ராமாவில் நடிக்க வைக்கிறேன். அனுமதி கொடுங்கள்’ என்று.  என் தந்தை அனுமதித்ததும் எனக்கு இரண்டு மாதங்கள் தான் பள்ளி விடுமுறை என்பதால் சிறு சிறு வேடங்களில் நடிக்க வைத்தார். கிருஷ்ண லீலாவில் கிருஷ்ணரின் நண்பனாய்., நல்லதங்காளில் கிணற்றில் குதிக்கும் 2 வது 3 வது பிள்ளையாய் வேஷம் கொடுத்து நடிக்க வைத்தார்.  இதன் மூலம் எனக்கு நடிப்பு வந்ததோ இல்லையோ, கொஞ்சம் டிசிப்ளின் வந்தது. ஆரோக்கியம் வந்தது. பிராணாயாமம், ஆசனம் எல்லாம் கற்றுக் கொண்டது  அங்கே தான்!
டெல்லிக்கு 1955 இல் போன போது பூர்ணம் விசுவநாதனை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு நாடக நடிகர் மட்டுமல்ல . நகைச்சுவை ஓரங்கநாடக  எழுத்தாளரும் கூட.  அவர் தயாரித்து இயக்கும் ஓரங்க நாடகங்களிலும், ஆல் இந்தியா ரேடியோவின் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். 1956-ல் தில்லியில் தமிழ் நாடகங்களுக்கான முதல் அமைப்பான தட்சிண பாரத நாடக சபாவை, ராமநாதன், ராமதாஸ் இவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தேன். எங்கள் முதல் நாடகம் பம்மல் சம்பந்தமுதலியாரின் சபாபதி. அதில் திரைப்படத்தில் காளி என். ரத்தினம் செய்த வேலைக்கார சபாபதியாக நடித்தேன். பம்மலைத்தவிர, கோமதி ஸ்வாமிநாதன், கே.கே. ராமன், சோ ராமசுவாமி, கே. பாலச்சந்தர், காவ்ய ராமாயணம் கே.எஸ். ஸ்ரீநிவாசன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, சி.சு. செல்லப்பா, எஸ்.எம்.ஏ. ராம் போன்றோரின் நாடகங்களை 2,000 தடவைகளுக்கும் மேலாக, சென்னை, பம்பாய், சண்டிகர், முதலிய நகரங்களில் நடித்திருக்கிறோம்.
என் நண்பர் டெல்லி கணேஷ் 1968-ல் தனது நாடக நடிப்பைத் துவக்கியது எனது சபாவில் தான்! யதார்த்தா பென்னேஸ்வரன் குழுவில், முறைப்பெண், தனியொருவனுக்கு, எப்போ வருவாரோ? ஆகிய நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். என்னை இயக்கியவர்களில், எஸ். ராமநாதன், அல்காஸி, தி. ஜானகிராமன், அம்புலுபுத்திரன், பென்னேஸ்வரன், கே.எஸ். ராஜேந்திரன், தியேட்டர் லாப் ஜெயராவ் ஆகியோர் அடக்கம்.
எம் பி ஏ. பாஸான பிறகு இப்ராகிம் அல்காஸியிடம் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து மேடை நடிப்பை நன்கு  கற்றுக் கொண்டேன். ஆனால் தேர்வு எழுத முடியவில்லை….அப்போது ஆபீஸ் விஷயமாக பிர்லாவுடன் நைஜீரியா போகவேண்டிவந்ததால்! லண்டன் ஸ்கூல் ஆப் ட்ராமாவில் சேர்ந்து வாய்ஸ் கல்ச்சர் கற்றுக் கொண்டேன்.
1969-ல் இந்திரா பார்த்தசாரதியை எங்களுக்காக ஒரு நாடகம் எழுதித்தரும்படி நச்சரித்து, என் தொந்தரவு பொறுக்கமுடியாமல் அவர் எழுதித்தந்தது தான் மழை நாடகம். அது அகில இந்திய அனைத்துமொழி நாடகவிழாவில் சிறந்த நாடகமாக தேர்வானது. அதில் நடிக்கவந்தவர் தான் க.நா.சு.வின் மகள் ஜமுனா. எங்களுக்குள் அப்போது காதல் அரும்பி, தளிர்த்து, பூவாகி, காயாகி, கனியாகி எங்கள் திருமணத்தில் முடிந்தது!. என் திருமணம் கூட அன்று பெய்த ‘மழையால்’ பந்தலெல்லாம் வெள்ளக்காடாகி, அங்கிருந்த நாடக மேடையில்தான் நடந்தது. எனக்கும் மழைக்கும், நாடகமேடைக்குமுள்ள தொடர்புக்கு வேறென்ன சான்று வேண்டும்? தான் எழுதிய நாடகங்களைப்போட ஒரு குழு தயாராக இருந்ததால், இ.பா.வும் தொடர்ந்து போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீப், நந்தன் கதை போன்ற நாடகங்களை எழுதத்தொடங்கினார். நாவலாசிரியர் நாடகாசிரியராகவும் ஆனார்!
கடவுள் வந்திருந்தார்
சுஜாதாவின் மிகப் பிரபலமான நாடகம். நூற்றுக்கணக்கான முறைகள் மேடையேற்றப்பட்டு கல்கத்தாவிலிருந்து, மஸ்கட், கலிஃபோர்னியா வரை இந்த நாடகம், அமெச்சூர் நாடகக் குழுவினரால் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது. அறிவியலா? அற்புதச் செயலா? என்ற கேள்விக்கு சுஜாதா தரும் பதில் இந்த நாடகம்.
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு   
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு என்ற நாடகம் பூர்ணம் ந்யூ தியேட்டர்ஸ் குழுவினரால் சுமார் இருநூற்றைம்பது முறை மேடையேற்றப்பட்டது. அதன்பின் ஒரு தொலைக்காட்சித் தொடராக சென்னை தூர்தர்ஷனிலும், ஸ்ரீலங்காவின் ரூபவாஹினியிலும் காட்டப்பட்டது.  இன்றும் இந்நாடகத்தில் எந்தவித மாற்றமும் தேவை இல்லாமல் இருப்பது நம் சமூகத்தில் புரையோடிப் போன சில விஷயங்களுக்கு வயது கிடையாது என்பதை நிரூபிக்கிறது.
அடிமைகள்
சுஜாதாவின் சமூக நாடகங்களில் சிறந்தது. ஒரு சிறு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பின்னணியில் இருக்கும் செய்தி, உலகில் அடிமைகள் இருக்கும்வரை சர்வாதிகாரிகள் இருப்பார்கள் என்பதே.
1956-ல் நிறுவிய DBNS தக்ஷிண பாரத் நாடக சபாவின் முக்கியமான நாடகங்கள் பம்மலின் சபாபதி, சோவின் மனம் ஒரு குரங்குஸம்பவாமி யுகே யுகே, கே. பாலச்சந்தரின் வினோத ஒப்பந்தம், இந்திரா பார்த்தசாரதியின் மழை., போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீப், சுஜாதாவின்  ”கடவுள் வந்திருந்தார்!’  ’டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’, அடிமைகள்,  மற்றும் யதார்த்தா தயாரித்த சி.சு.செல்லப்பாவின் ”முறைப்பெண்”,  ராமின் ‘எப்போ வருவாரோ?’ ஆகியவை.முறைப்பெண்ணில் நானும், மனைவி ஜமுனாவும், மகள் ரேவதியும் சேர்ந்து நடித்திருந்தோம்.
1944-ல் துவங்கிய என் நாடகமேடை அனுபவத்துக்கு அறுபது ஆண்டுகள்பூர்த்தியானதை பாராட்டும் விதமாக, 2004-ல் தில்லி தேசிய நாடகப்பள்ளியும், நாடகவெளியும் இணைந்து சென்னையில் ஒரு மாத நாடகப்பட்டறை நடத்தி, இறுதியில் சதீஷ் ஆளேகர் எழுதியமஹாநிர்வாணம் நாடகத்தில் நான் நடித்தது பெருமைக்குரிய விஷயம்.
இந்த வருடம் மார்ச் மாதம் தியேட்டர் லாப் தயாரித்து, ஜெயராவ் இயக்கிய பஷீரின் சப்தங்கள்   நாடகத்தில் நான் எழுத்தாளர் பஷீராக நடித்தது இன்னும் பல காலம் நினைவில் இருக்கும்.
நீங்க நடிக்கிற படம் எல்லாம் விருது வாங்கிடுதே!…..
1991 இல் என் முதல் படம் பி பி சி எடுத்த ஆங்கிலப்படம் எலக்ட்ரிக் மூன். முதல் படமே விருது வாங்கிய படம். இதில் கதை வசனம் எழுதியவர் அருந்ததி ராய்..  அதன் பின் இயக்குனர் லெனின்., ஜெயபாரதி., அம்ஷன் குமார், ஞான. ராஜசேகரன் ஆகியோர் இயக்கிய படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடித்த 40 படங்களில் 13 படங்கள் தேசிய விருது பெற்றவை.. அவற்றில் சில  எலக்ட்ரிக் மூன்., பாரதி., ஊருக்கு நூறு பேர்., மொட்டுக்கா., றெக்கை., ஒருத்தி., நண்பா நண்பா., ஆட்டோகிராஃப்., அந்நியன்.
எடிட்டர் லெனின் விளையாட்டாக சொல்வார்: ‘மணி சார் ஒரு ஃப்ரேமில் வந்தாலும், அந்தப்படம் விருது வாங்கிவிடும்!’ என்று! பல படங்களில் கதாநாயக/நாயகிகளின் தாத்தா வேடத்தில் தலையைக்காட்டியது தான் எனக்கு அசட்டுத்தனமான சோகம்! இப்போது அதையெல்லாம் தவிர்த்துவருகிறேன். மூன்றே படங்களில் முதலமைச்சராக நடித்திருந்தாலும், எல்லா படங்களிலும் நான் முதலமைச்சராக வருவதாகஜெயமோகன் என்னை கேலி செய்வார்! 2010-ல் நூற்றாண்டுவிழா கொண்டாடிய திரு கக்கன் அவர்கள் நினைவாக தயாரிக்கப்பட்ட ஒரு முழுநீள ஆவணப்படத்தில் நான்கக்கனாக நடித்திருக்கிறேன்……ஆம்…. அவரைப்போல வாழமுடியாது……..நடிக்கத்தான் முடியும்!
என் தந்தையாரின் உந்துதலால் கர்நாடக இசையை சிறுவயதிலேயே கேட்டு வளர்ந்ததினால்  ஆரோகணம் அவரோகணம் தெரியாமலே 100 ராகங்களுக்கு மேல்கண்டுபிடித்துவிடுவேன். இசை விமர்சகர் சுப்புடுவே, ‘எப்படீடா டக்குனு சொல்றே?’ என்று ஆச்சர்யம் அடைவார்.
என்னுடைய கர்நாடக இசை சம்பந்தமான நட்புகளையும் தொடர்புகளையும் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அந்தக்காலத்திலிருந்தே தில்லி வரும் மதுரை மணி, அரியக்குடி, மகாராஜபுரம், செம்பை, செம்மங்குடி, பழனி, லால்குடி, காருகுறிச்சி, உமையாள்புரம், எம்.எல்.வி., எம்.எஸ். போன்றவர்களுக்கு அங்கு தேவையான உதவிகளைச்செய்ய தயங்கமாட்டேன். தில்லியில் என்னைவிட வயதான கர்நாடக சங்கீத சபாவின் செயலராக இருந்தபோது தமிழகத்திலிருந்து வரும் அனைத்து பிரபல சங்கீத வித்வான்களும் டெல்லி வந்தால் என் வீட்டில்தான் தங்குவார்கள்.
நீங்கல் எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’  புத்தகத்தில் பலரும் உங்களை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்களே!…..
என்னை யாராவது எழுத்தாளன் என்று சொன்னால், உடம்பு கொஞ்சம் கூசுகிறது. இலக்கியத்துக்கும் எனக்கும் வெகுதூரம். I am a One Book Wonder! நான் எழுதிய ஒரே புத்தகமான உயிர்மை வெளியிட்ட பல நேரங்களில் பல மனிதர்களில் நாஞ்சில் நாடன், இ.பா., வெ.சா., ஜெயமோகன், அ. முத்துலிங்கம், அசோகமித்திரன், வாஸந்தி, பாவண்ணன், ஆ. மாதவன், லெனின், சத்யராஜ் போன்ற 28 பிரபலங்கள்என்னைப்பற்றி நிறைய ’பொய்’ சொல்லியிருக்கிறார்கள்! என்னையெல்லாம் ஓர் எழுத்தாளன் என்று சொல்வது எழுத்துக்கும் அதை வேள்வியாக கொண்டாடுபவர்களுக்கும் பெருமை சேர்க்காது!! ஆனால் நான் ஒரு நல்ல வாசகன். தேடித்தேடி வாசிப்பவன். எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம் – நூறுக்கும் மேற்பட்ட பெரிய எழுத்தாளர்களுக்கு …….  அது ஒரு பெரிய லிஸ்ட்……. மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜ.ர., தி. ஜானகிராமன், நகுலன், தி.க.சி., கி.ரா., ஆதவன், கிருஷ்ணன் நம்பி, சு.ரா., ஆ. மாதவன், நீல. பத்மநாபனில் தொடங்கி இப்போது எழுதும் அம்பை, பாவண்ணன், வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு, யுவன் சந்திரசேகர், சுகா, விஜய் மகேந்திரன், மதுமிதா, தேனம்மை வரை நண்பனாக இருக்கிறேன். அப்ப்பா! நாலு தலைமுறை எழுத்தாளர்கள்!! இந்த கொடுப்பினை வேறு எத்தனை பேருக்கு கிடைக்கும்? மெளனியும், சி.சு. செல்லப்பாவும் என்னை ‘மாப்பிளே….மாப்பிளே ‘ என்று தான் வாய் நிறைய கூப்பிடுவார்கள். மாறாக க.நா.சு. என்னை ஒரு தடவை கூட மாப்பிள்ளே என்று அழைத்ததில்லை!  அவருக்கு நான் என்றும் மணி தான்! அதில் எனக்கு வருத்தமுமுண்டு! நான் மட்டும் கொஞ்சம் முந்திப் பிறந்திருந்தால், புதுமைப்பித்தன், வ.ரா., கு.ப.ரா., அழகிரிசாமி, பிச்சமூர்த்தி இவர்களுடனும்  நட்பாக பழகியிருப்பேன்! என்ன பேராசை பாருங்களேன்! அதற்குத்தான் கொடுத்து வைக்கவில்லை! போகட்டும்!
ஏப்ரல் 1-15 சூரிய கதிர் இதழில் வெளிவந்தது.
ஒரு நாடக, திரைப்பட கலைஞராக அறியப்பட்ட பாரதி மணியை, ஒரு முக்கியமான எழுத்தாளனாக அறிய செய்தவை, இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தில்லி வாழ்க்கையில் பரந்துபட்ட அனுபவங்கள், இதுவரை எங்கும் பதிவு செய்யப்படாத சம்பவங்கள் அவரது தனித்துவமான மொழிநடையில் வாசகர்களை பெரிதும் உற்சாகம் கொள்ள செய்தன. இவை ஒரு தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் ஒரு காலகட்டத்தின் சரித்திரமாகவும் இருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பு.

0 comments:

Post a Comment