Friday, January 22, 2016

போனவாரம் பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக ரூ. 50,000 லிருந்து ஒரு லட்சம் வரை வாங்கியதாக காமிராவில் ‘பிடிபட்ட‘ 11 உறுப்பினர்களை அந்தந்தக் கட்சிகள் ‘நமக்கேன் வம்பு‘ என்று கைகழுவி விட்டன.  அவைத்தலைவரும் அவர் பங்குக்கு ஒரு கமிட்டி அமைத்து, அதன் முடிவு தெரியும்வரை அவர்களை அவைக்கு வர வேண்டாமென்று ‘கேட்டுக்கொண்டார்’.
இனி நாமும்,  பார்லிமென்டில் வளைய வரும் மீதமுள்ள 523 அங்கத்தினர்களும் லஞ்சம் என்ற அரக்கனை ஒழித்து விட்டொமென்று ஆனந்தக்கூத்தாடுவோம்! இந்திய இறையாண்மையைக் காப்பாற்றிவிட்டோம்!
இன்று நேற்றல்ல, முதல் சபாநாயகர் ஜி.வி. மாவ்லங்கர், பின்பு அனந்தசயனம் ஐயங்கார் காலத்திலிருந்தே அவ்வப்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் ‘நேர்மை‘ பற்றி சர்ச்சைகள் எழுந்ததுண்டு. அதற்குக் காரணம் அவர்களது ‘குறைந்த‘ சம்பளமும் பஞ்சப்படியும், பிரயாணச்சலுகைகளும் தான் என்று அவர்களே தீர்மானித்து,  அவ்வப்போது தங்கள் சம்பள, படி சலுகைகளை அவர்களே உயர்த்திக்கொள்வார்கள். உங்களுக்குத்தெரியுமோ? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் அதிகாரம் அவர்களுக்குக்கிடையாது. மத்திய அரசுக்குத்தான் உண்டு. ஆனால் பாராளுமன்ற அங்கத்தினர் சம்பளத்தை அவர்களே உயர்த்திக்கொள்ளலாம்! இடதுசாரிக் கட்சிகளும்,  ஒப்புக்கு ஒரு feable protest செய்வார்கள், நாம் எதிர்த்தாலும், எப்படியும் பில் பாஸாகி விடுமென்ற நம்பிக்கையில்!
என் வாழ்க்கையின் முக்கிய பகுதியான ஐம்பது வருடங்களைதில்லியில் செலவழித்திருக்கிறேன். பல எம்.பி.க்களோடு நெருங்கிப்பழகியும், தூரத்திலிருந்து கவனித்தும் வந்திருக்கிறேன். திரு ஓ.வி. அளகேசன், டி.வி. ஆனந்தன், அறிஞர் அண்ணா, கே.எஸ். ராமஸ்வாமி, கே.கே. வாரியர், பீலு மோடி, எச்.வி. காமத், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மூப்பனார், வாழப்பாடி, மது தண்டவதே. ஏ.கே.ஆன்டனி, [பட்டம் தாணு பிள்ளையைத்   தோற்கடித்த] ஈஸ்வரன் போன்றவர்களோடு பேசவும், பழகவும் சந்தர்ப்பம் ஏற்பட்டதுண்டு. காமராஜர் வீட்டுக்கும் போயிருக்கிறேன். காபி சாப்பிட்டிருக்கிறேன். அவர் நாகர்கோவிலிலிருந்து ஜெயித்து பாராளுமன்றத்துக்கு வந்ததும், தில்லிவாழ் நாகர்கோவிலர்கள் அவருக்கு தில்லியில் ஒரு பெரிய விழா எடுத்தோம். நார்த் அவென்யூ கார் ப்ரோக்கர் சுவாமி மூலமாக அண்ணா அவர்களைத்தெரியும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓடியனிலும்,  ரிவோலியிலும் இரவு பத்துமணிக்கு ஆங்கிலப்படங்கள் பார்ப்பார். எப்போதும் படம் தொடங்கியபிறகு தான் பட்பட்டியில் வந்திறங்குவார். மேலே வயிற்றில் பை வைத்த பனியனும், தோளில் தலை துவட்டும் துண்டும்! டிக்கெட் வாங்கி வைத்து அவருக்காகக் காத்திருப்போம். அப்போது அவர் பிற்காலத்தில் தமிழக முதல்வராவாரென்று   அவருக்கே தெரியாது! எங்களுக்கும் மற்றவர்களைப்போல அவரும் ஒரு எம்.பி. அவ்வளவுதான். இளம்கன்று பயமறியாது என்பதைப்போல, தில்லி கடைக்காரர்களிடம் ஹிந்தியில் பேச அவர் திணறுவதைப்பார்த்து ‘ஹிந்தி போராட்டம் தேவையா? நான் நாகர்கோவிலில் [திருவிதாங்கூர் சமஸ்தானம்] படித்ததால் 5-வது வகுப்பிலிருந்து ஹிந்தி கட்டாயப்பாடம். அதனால் நன்றாக ஹிந்தி பேச வருகிறதே, வேறு மாநிலங்களுக்குப் போனால் எனக்கு மொழிப்பிரச்னையில்லையே’ என்றெல்லம் அவரிடம் வாதாடியிருக்கிறேன். அவரோடு பக்கத்தில் உட்கார்ந்து   கொண்டு, இரண்டுமணிநேரம் அவர் மூக்குப்பொடி வாசனையை சகித்துக்கொண்டு, அவருடன் பார்த்த படங்கள் ‘To Sir, with Love, Solomon and Sheba, Ben Hur, School for Scoundrels etc.
ஆர். வெங்கட்ராமன் தலைவராக இருந்த உத்தரஸ்வாமிமலை கோவில் கமிட்டியில் நான் மெம்பராக இருந்தேன். அவரும் கே.எஸ். ராமசாமியும் நான் நடித்த பல டி.பி.என்.எஸ். நாடகங்களைப் பார்த்திருக்கிறார்கள்.
எல்லா மாநிலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லிக்கு வரும் எம்.பி.க்கள் தங்குவதற்காக,  ராஷ்டிரபதி பவனுக்கு தெற்கே செளத் அவென்யுவும் வடக்கே நார்த் அவென்யுவும், மௌலானா ஆசாத் ரோட்டில் மீனாபாக்கும் கட்டப்பட்டன. முதல்முறை அங்கத்தினர்களுக்கு இரு அறை விடுதிகளும்,  மூத்தவர்களுக்கு 3-4அறைவிடுதிகளும் அதில் உண்டு.
அந்தக்காலத்தில் அறுபதுகளில், பல தமிழர்கள் நார்த் அவென்யுவில் பல வருடங்களாக — சிலர் இன்னும்கூட — வசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் எந்தக்கட்சியையும் சேர்ந்தவர்களல்லர். எம்.பி.க்களுமல்லர். வீட்டைப்  பார்த்துக்கொள்ளும் Caretakers. ஒரு தேர்தல் நடந்து முடிவுகள் பத்திரிகைகளில் வந்தவுடன், ‘ஏம்பா, நீ அதிர்ஷ்டக்காரன், உன் எம்.பி ஜெயிச்சுட்டாரு, என் எம்.பி.க்கு டிக்கெட்டே கிடைக்கலே. இனிமே புதுசாத் தான் யாரையாவது பார்க்கணும்’ என்பார்கள். இவர்களுக்கு கட்சிபேதமே கிடையாது! எனக்குத்தெரிந்த ஒருவர் தொடர்ச்சியாக  40 வருடங்கள் ஒரே வீட்டில் இருந்திருக்கிறார். காங்கிரஸ், இடதுசாரி, பார்வேடு ப்ளாக், தி.மு.க. அ.தி.மு.க., சுயேச்சை என்று எம்.பி.க்கள் மட்டுமே மாற்றம். ‘M.P.s may come and go but we are destined to stay here permanently‘ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்.
தமிழ்நாட்டிலிருந்து முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஹிந்தியும் ஆங்கிலமும் அறவே தெரியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டு தில்லி போகும் பிரதிநிதிகளை  புது தில்லி ரயில் நிலையத்திலேயே போய் அமுக்கி [அப்போதெல்லம் எம்.பி.க்களுக்கு விமானப்பயணம் இலவசமில்லை],  தங்கள் தங்கியிருக்கும் பழைய எம்.பி.யின்  வீட்டுக்கு அழைத்துச்சென்று, ராஜோபசாரம் செய்து, நன்றாக குளுப்பாட்டி, ஒரு  வாரத்தில், தான் தங்கியிருந்த [தேர்தலில் தோற்றுப்போன] பழைய எம்.பி. வீட்டையே இவர்களுக்கு அலாட் பண்ண வைத்து விடுவார்கள்!
அவர்களுக்குத்தேவையானதெல்லாம், தேர்தல் அதிகாரி வழங்கிய ஒரிஜினல் தேர்வுச் சான்றிதழ், 10 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், அவர்களே நிரப்பி வைத்திருக்கிற 10, 12 வகையான படிவங்களில் கையெழுத்து மட்டுமே. நமது நார்த் அவென்யு மன்னர் சோறு தண்ணியில்லாமல் இரவும்பகலும் தன் ஓட்டை ஸ்கூட்டரில் சுற்றி எல்லாக் காரியங்களையும் கச்சிதமாக முடித்துவிடுவார். இடைத்தேர்தல் ஏதும் வராமலிருந்தால் ஐந்து வருடங்களுக்குகவலையில்லை!
இனி நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளுக்கு என்னென்ன இலவசம்/சலுகைகள் பார்ப்போமா?
1.  வீடு இலவசம்.
2.  மின்சாரம் இலவசம்.
3.  ஏ.சி., ஃபர்னிச்சர், சோபா செட், புத்தக அலமாரி, டைனிங் டேபிள் போன்றவை C.P.W.D. உபயம்.  ஆனால் பாத்ரூமில் பிளாஸ்டிக் வாளியும், குவளையும் மட்டும் நீங்கள் வாங்க வேண்டும்.
4. டெலிபோன் தில்லியிலும் தொகுதியிலும்,  அமெரிக்காவிலிருக்கும் மச்சானுடன் தினமும் ஒருமணிநேரம் I.S.D.யில் பேசுமளவுக்கும் இலவசம்.
5. M.P.’s கிளப் — இசை நிகழ்ச்சி/நாடகம் நடத்த இலவசம். ‘மேஜர்‘ சுந்தர்ராஜன் தில்லிக்கு நாடகங்கள் போட வந்த போது, அவரையும், குழுவினரையும் அங்குதான் தங்கவைத்தேன். எல்லா அரசாங்க விருந்துக்கும்,  திரைப்பட விழாக்களுக்கும் அனுமதி இலவசம்.
6. ரேஷன் தட்டுப்பாடு இருந்த காலத்தில் [நாற்றம்,   புழுவில்லாத] நல்ல அரிசியும், சீனியும் வேண்டுமளவுக்குக் கிடைக்கும். [இந்த நண்பர்கள் உதவியால் என் வீட்டில் எப்போதும் 10 கிலோ சீனி ஸ்டாக் இருக்கும்].
7.செஷன் நடக்கும்போது, மாவ்லங்கர் அரங்கில் தமிழ்/ஹிந்தி/பெங்காலி/மலையாளப்படங்கள் இலவசம்.
8.  மாதத்துக்கு ஒருவரை A.I.I.M.S.ல் இலவச மருத்துவசிகிச்சைக்குப் பரிந்துரைக்கலாம்.
9.  ரயிலில் குடும்பத்தோடு நண்பர்களையும் எஸ்கார்ட்டாக [A.C. முதல்வகுப்பில்] அழைத்துச் செல்லலாம். இதைத்தவிர வருடத்துக்கு ஒரு குறிப்பிட்ட விமானப்பயணங்கள் இலவசம். ஆண்டுக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டுத்திட்டம்.
திரு டி.வி. ஆனந்தனைப்போல் அபூர்வமானவர்கள், ‘வீட்டுச்சாவி உங்ககிட்டயே இருக்கட்டும். செஷன்   நடக்கும் போது ராத்திரி தயிர்சாதம் மட்டும் சின்னக் கிண்ணத்திலே குடுங்க. மத்தியானம் பார்லிமென்டிலேயே ஏதாவது பார்த்துப்பேன்’ என்று சொல்லிவிடுவார்கள். டெலிபோனைப் பூட்ட மாட்டார்கள்.
மறுமுறையும் தேர்ந்துவருபவர்கள் போடும் கண்டிஷன்கள்:
1. [அவர் அறையைத்தவிர] வீட்டுக்கு ரூ. 1,500 வாடகை.
2. ஸெர்வன்ட் க்வார்ட்டர்ஸ் ரூ.1,000
3. Car Garage ரூ.750 இதற்கு டோபிகள் [இஸ்திரி போடுபவர்] போட்டிபோடுவார்கள்.
[குறிப்பு: இதெல்லாம் இப்போதைய ரேட்டல்ல. அறுபதுகளில் 1 டஜன்வாழைப்பழம் பத்தணாவுக்கும் ஒரு பவுன் தங்கம் ரூ.440க்கும்வாங்கிய நாளில் இருந்த ரேட்].
வீட்டிலிருப்பவர் மாதாமாதம் அவர் சார்பில் எல்லா வாடகையையும் வசூலித்து பெரியவர் வங்கிக் கணக்கில் சேர்த்துவிட்டு தொகுதிக்கு போன் பண்ணவேண்டும். தொகுதியிலிருந்து வரும் உறவினர், கட்சித்தொண்டர்களுக்கு விருந்தோம்பல் செய்து தில்லியைச் சுற்றிக்காட்டவேண்டும். முடிந்தால் ஊறுகாய் தண்ணீருடன்  ‘தாகசாந்தியும்‘  நடத்தவேண்டும். இவ்வாறான காரணங்களால் நார்த் அவென்யு மன்னர்கள் ‘நல்ல மனைவி அமைவது போல் நல்ல எம்.பி.யும் அமையவேண்டுமே‘ என்று தினம் வேண்டிக்கொள்வார்கள்.
எனக்குத்தெரிந்த எம்.பி. ஒருவர் ஒருநாள் இரவு 1.30 மணிக்கு போன் பண்ணி, ‘மணி, நான் அசோகா ஹோட்டலில் இருக்கிறேன்.    ஸ்காட்ச்    தீர்ந்துபோச்சு. பையனை அனுப்பறேன்.ரெண்டு பாட்டில் குடுத்தனுப்புங்க’ என்றார். அவருக்குத்தெரியும் என் வீட்டில் எப்போதும் ஸ்காட்ச் இருக்குமென்று. எனக்கோ ஏகக்கடுப்பு. தூக்கம் விழித்து பையன் 2.30 மணிக்கு வரும்வரை காத்திருந்து கொடுத்தனுப்பினேன். அவரிடமிருந்து அடுத்தவாரமும் அதே வேண்டுகோள்,  ஆனால் வேறு ஹோட்டலிலிருந்து! கோபத்தில், ‘I am not your bloody bootleggar‘ என்று சொல்லி போனை பட்டென்று வைத்துவிட்டேன். அந்த உறவு அன்றோடு முறிந்தது! இவர் தமிழரல்லர். தில்லியின் கரோல்பாக்  தொகுதியை பரிபாலித்துவந்தவர்! 1984-ல் நடந்த சீக்கியப்படுகொலையில் தீவிரப்பங்கெடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.
சமீபத்தில் மறைந்த மது தண்டவதே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் வீட்டுக்குப் பலமுறை என் நண்பர் அப்பு நாயருடன் சென்றிருக்கிறேன். இருவரும் பழைய பிரஜா சோஷலிஸ்ட் தொண்டர்கள். லோகியா பக்தர்கள். என்ன எளிமையான வாழ்க்கை! அவர் ரயில்மந்திரியாக இருந்தபோதும் போயிருக்கிறேன். அப்போதும் அவர் வீட்டில் கலர் டெலிவிஷன் கிடையாது. எம்.பி.யாயிருந்த மனைவி பிரமீளா தண்டவதே சமையலறையிலிருந்து போட்டுக்கொடுத்த டீயை அவரே  ட்ரேயில் எடுத்துவந்து கொடுத்தார்! இப்போது நடக்குமா?
பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்குவாங்கி தங்கள் கிளிப்பிள்ளைகளாக்குவது தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது. அந்தக்காலத்து  தொழிலதிபர்கள் டால்மியா, தாப்பர், பிர்லா போன்றவர்கள் தங்கள் மொழி பேசும் பல கிளிப்பிள்ளைகளை வளர்த்து வந்தார்கள். இதற்கு நானே ஒரு சாட்சி. மாதந்தோறும் இரு மந்திரிகளுக்கும், ஆறு எம்.பி.க்களுக்கும் சம்பளம் பட்டுவாடா செய்வது என் பணிகளில் ஒன்று. டாட்டா மட்டும் இதற்கு விதிவிலக்கு!
விஷயத்துக்கு வருவோம். போன வாரம்  ‘இந்தியா டுடே‘ குழுவைச்சார்ந்த ஹெட்லைன்ஸ் டுடே நடத்திய ‘ஆபரேஷன் துர்யோதனில்‘ சிக்கிய பத்து பாராளுமன்ற உறுப்பினர்களைப்பார்த்தால், ஏதோ குருட்டாம் போக்கில், நிறைய கள்ள ஓட்டுப்பெற்று வந்தவர்களாகவே தெரிகிறார்கள். அவர்களை இதற்குமுன்னால் அவரவர் கட்சியின் மூன்றாம் மட்ட தலைவர்கள் பின்னால்கூட பார்த்ததில்லை! பாவம், அவர்கள் என்னதான் செய்வார்கள்? பலர் மாட்டிக்  கொள்ளவில்லை, இந்த அசடுகள் மாட்டிக்கொண்டுவிட்டன. அவரவர் சேர்ந்த கட்சிகளும் அவசரமாக அவர்களைக் கழட்டிவிட்டன. ஆனால்,  நட்வர் சிங்கை கழட்டிவிட 45 நாட்கள் தேவையாக இருந்தது!
பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் இந்தப் பத்து பேர் மட்டுமே லஞ்சம் வாங்குபவர்களென்றும்,  அவர்களுக்கு  ‘தகுந்த‘ தண்டனை வழங்கி இந்தியப் பாராளுமன்றத்தின் இறையாண்மையைக் காப்பாற்றிவிட்டோம் என்றும் சத்தியமாக நம்புவோம்! வாழ்க ஜனநாயகம்! வளர்க இந்தியா!!
பாரதி மணி (Bharati Mani)

0 comments:

Post a Comment