Friday, January 22, 2016

ஆதவன் தில்லியில் என் வீட்டுக்குப்பக்கத்தில் இருந்ததால், க.நா.சு.வைப்பார்க்க அடிக்கடி வருவார். He was an intravert. பேசும்போது அவரிடமிருந்து வார்த்தைகளை பிடுங்கவேண்டும். பழக ஆரம்பித்துவிட்டால், சகஜமாக உரையாடுவார். நானும் அவரது Complex-ஐ களைவதற்கு மிகுந்த பாடு பட்டேன்.

1982-ல் பாரதியின் நூற்றாண்டுவிழாவை தில்லியில் விமரிசையாகக் கொண்டாடினோம். பாரதி பாலுவின் தனி முயற்சியில், நான், ஆதவன், லா.சு. ரங்கராஜன் போன்றோர் சேர்ந்துகொண்டு, பாரதியின் நூறாண்டு பூர்த்தியானதை, ‘பாரதி-200’ என்ற அமைப்பைத்தொடங்கி, குடியரசுத்தலைவர் தொடங்கிவைத்து, சீனி. விசுவநாதன், ரா.அ. பத்மநாபன் மற்றும் பல கலைஞர்கள் கலந்துகொண்டு ஒருவார விழா தில்லியில் அமர்க்களமாக நடந்தேறியது. பாரதியின் பால் பைத்தியமாகவே இருக்கும் பாரதி பாலு (என். பாலசுப்ரமணியன்) மண்டையம் அய்யங்காரின் குடும்பத்தில் பாதுகாத்து வந்த பாரதமாதாவின் சிலையை மக்கள் பார்வைக்கு கொண்டுவந்தார்.

அப்போது ஆதவனுடன் நெருங்கி பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆதவன் ‘புழுதியில் வீணை’ என்ற பெயரில் பாரதியின் வாழ்க்கையை ஒரு சிறந்த நாடகமாக எழுதியிருந்தார். நேரக்குறைவு காரணமாக, அந்த நாடகத்தை என்னால் மேடையேற்ற முடியவில்லை. சனிக்கிழமை தோறும் நடக்கும் ‘பாரதி கூட்டத்தில்’ Play Readingமுறையில் நான் அதை வாசித்தேன். பாரதியைப்பற்றி ஆழமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நாடகம் அது. அது புத்தகமாக வெளிவந்ததாகத் தெரியவில்லை. (பின்னர் ஆர்.பி. ராஜநாயஹம் ’புழுதியில் வீணை’ புத்தகமாக வெளிவந்ததாகச் சொன்னார்)  ’பாரதி’படப்பிடிப்பின்போது, அந்த நாடகப்பிரதியைத் தேடினேன். கிடைக்கவில்லை.

அவர் தெற்கே வந்தபிறகு, அவருடனான தொடர்பு குறைந்தது. மனம் விட்டுப்பழகும் நல்ல நண்பர். அவரது அகால மரணத்துக்குப் பின் கிடைத்த சாகித்ய அகாதெமி விருதுப்பணம் அவர் மனைவிக்கு பேருதவியாக இருந்தது.

என் வீட்டில் தினமும் நடக்கும் மாலைவேளை ‘ஜோதி’யில் எப்போதாவது கலந்துகொள்வார்!

பாரதி மணி (Bharati Mani)

0 comments:

Post a Comment