Friday, January 22, 2016

புகைப்படத்தில்: (இடமிருந்து) நண்பர் சுரேஷ், ‘வடக்கு வாசல்’ பென்னேஸ்வரன், பாரதி மணி, ஏ.ஆர். ராஜாமணி
நான் போனவாரம் தில்லி வந்த தினம், திருப்பூர் கிருஷ்ணனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை பிற்பகல் தான் பார்த்தேன். ‘Dilli Rajamani Expired’ என்றிருந்தது. உடனே ‘வடக்குவாசல்’ பென்னேஸ்வரனிடம் தொடர்பு கொண்டேன். அன்று காலையே தகனம் ஆகிவிட்டதாகச்சொன்னார். ஒரு நல்ல ஆத்மாவுக்கு நிகம்போத் சுடுகாட்டில் கடைசி நேரத்தில் கூட இருக்கமுடியாமல் போயிற்று. அறுபது வருடங்களாக, தில்லியே தனக்குச்சொந்தம் என்றிருந்தவருக்கு, நண்பர் பென்னேஸ்வரன் கொள்ளி வைத்து கடைசிக்காரியங்களை குறைவில்லாமல் செய்தார். அவரது அஸ்தியும் கங்கையில் கரைந்துபோனது.
ஐம்பதுகளில் தில்லி தமிழ்ச்சங்கம் கனாட் பிளேசில் தியேட்டர் கம்யூனிகேஷன் கட்டடத்தில் மூன்று அறைகளில் இயங்கிவந்தபோது, வருடாந்திரக்கூட்டங்களில் ராஜாமணி காரசாரமாக விவாதிப்பதை பார்த்திருக்கிறேன். அப்போது தொடங்கிய நட்பு நான் க.நா.சு.வின் மாப்பிள்ளையான பின் இன்னும் நெருக்கமாயிற்று. வாரத்துக்கொரு முறையாவது வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருப்பார். க.நா.சு.விடம் அளப்பரிய பக்தியும், விசுவாசமும் கொண்டவர். க.நா.சு.வுக்கு வாய்த்த ‘அனுமன்’ என்றே தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். ஒருநாள் காரணம் கேட்டபோது, ‘க.நா.சு. தில்லி வந்த புதிதில், எங்களிருவரிடமும் காசு இருக்காது. அவர் எழுதிய கட்டுரைக்கு ஸ்டேட்ஸ்மனிடமிருந்து ரூ.50 மணியார்டர் வரும். அதில் இருபத்தைந்து ரூபாயைஎன்னிடம் கொடுப்பார்.  வாங்க மறுத்தால், ‘யோவ்….நான் கால் பட்டினீன்னா, நீர் அரைப்பட்டினி. பேசாமெ வாங்கிண்டு போமையா!’ என்பார். இதை ஒரு தடவை, இருதடவையல்ல….அவர் இருக்கும்வரை செய்திருக்கிறார். எத்தனை தடவை …. ஏதாவது நிகழ்ச்சிக்குப்போய்விட்டு வீடு திரும்பும்போது….. அவராகவே ‘கையிலே காசு இருக்காய்யா?’ என்று கேட்டுவிட்டு, பதிலுக்கு காத்திராமல், ஆட்டோவுக்கு வைத்திருக்கும் இருபது ரூபாயை என் பாக்கெட்டில் திணித்துவிட்டு, பஸ்ஸில் வீடு திரும்பும் மகா மனிதர்….அவருக்கு வாலாட்டாமல், நான் வேறு யாருக்கு வாலாட்டுவேன்?’ என்ற உருக்கமான பதில் வரும். ராஜாமணியின் பட்டாங்கைப்பொறுத்தவரையில், ‘இட்டார் பெரியார்….இடாதார் இழிகுலத்தோர்!
1950-வாக்கில் இளைஞனாக தில்லி வந்த ராஜாமணி கரோல்பாக் ராமானுஜம் மெஸ் நடத்தி வந்த புண்ணியவானின் உபயத்தால், ‘மாடிவீட்டு மாது’வாக அரை நூற்றாண்டு காலம் அங்கேயே சாப்பிட்டு தங்கிவந்தார். அவருக்கு சாப்பாடே தேவையில்லை….டீ, சிகரெட்டிலேயே உயிர்வாழ முடியும் அவரால்! நிரந்தர வருமானம் எதுவுமில்லாமலே,  யாரிடமும் பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ இல்லாமல், அம்பானியை விட சந்தோஷமாக, எப்போதும் சிரித்த முகத்துடன் பவனி வருவார்!  அந்த வித்தையை அவர் யாருக்கும் கற்றுக்கொடுத்தாரில்லை! அமுதசுரபி போன்ற தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது தலைநகர் நடப்புகளைப்பற்றி எழுதிக்கிடைக்கும் சன்மானத்திலும், ஆல் இந்தியா ரேடியோவில் பகுதிநேர மொழிபெயர்ப்புகளில் வரும் சம்பளத்திலும் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொண்டார். நாளை என்பதைப்பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் வாழப்பழகியவர். நேற்று அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் சொன்னார்: ”ராஜாமணி செய்த ஒரு நல்ல காரியம் கல்யாணம் செய்துகொள்ளாதது தான்……ஏதோ ஒரு மாதுஸ்ரீ தப்பித்தார்!” இது பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது தில்லி வடக்கு வாசல் வெளியிட்ட வேண்டுகோளுக்கிணங்க வாசகநண்பர்கள் கணிசமான தொகை அனுப்பிவைத்தனர்.
இலக்கிய சர்ச்சைகளில் ராஜாமணி பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் தான்….தனக்கு முன்னால் சி.சு. செல்லப்பாவே இருந்தாலும்! தில்லி வரும் தமிழ் எழுத்தாளர்களுக்கு, தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்யும் பாராட்டுவிழாக்களில், தனக்குப்பிடிக்காதவர்களை மேடையிலேயே தாக்கிப்பேசிவிடுவார். அவர்களும் அவர் பேசியதை சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி ஒரு முகராசி அவருக்கு!
பிடித்தவர்களுக்கெல்லாம் மாதம் ஒருமுறை தபால் கார்டு போட்டுவிடுவார். எனக்கு வரும் கடிதங்கள் இப்படித்தொடங்கும்: மகாராஜ ராஜஸ்ரீ ஸ்ரீ தில்லிப்பிரமுகர் எஸ்.கே.எஸ். மணி அவர்களுக்கு…….’ மற்றவர்களுக்கு முன்னால் என்னை ஒரு பிரமுகராக்கிய பெருமை ராஜாமணியையே சாரும்!
யாரும் அவரைப்போல வாழ விரும்ப மாட்டார்கள். ஆனால் ‘இப்படியும் ஒரு வாழ்க்கை வாழமுடியுமாவென்று அதிசயிக்காதவர்களும் இருக்கமுடியாது! கசப்பான வார்த்தைகள் தான்…….ஆனாலும் உண்மை!
அன்புடன்,
பாரதி மணி
Bharati Mani

0 comments:

Post a Comment