திருநவேலிப் பகுதியில் வயதில் மூத்த, கனிந்த தாத்தாக்களை பேரப்பிள்ளைகள் வாஞ்சையுடன் ‘பாட்டையா’ என்று விளிப்பார்கள். அப்படித்தான் பாரதி மணி அவர்களை ‘பாட்டையா’ என்று அழைக்கத் துவங்கினேன். கேட்ட மாத்திரத்தில் அவருக்கு அது பிடித்திருந்தது. இன்னும் சொல்லப் போனால் புரிந்திருந்தது. அந்த நொடியிலிருந்து இன்று வரை எங்கள் இருவரின் பேச்சுவழக்கு ‘எடக்குமடக்கு’தான். ஆனால் அவையனைத்தும் அதீத அன்பினாலும், ஆத்மார்த்தமான உரிமையினாலும்தான் என்பதை நாங்கள் இருவருமே அறிவோம். என்னுடைய மிகச்சிறிய அனுபவத்தில் நான் பார்த்து வியந்த மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் நான் பார்த்து ரசித்த மனிதர்கள் சிலரே. அப்படி நான் பார்த்து ரசிக்கும் மனிதர்களில் பாட்டையா முக்கியமானவர்.
–
பாட்டையாவின் விசாலமான அறிவின் சாரல், அவர் பேசும்போது அவர் அமர்ந்திருக்கும் அறை முழுக்கத் தெறிக்கும். கைக்கும், வாய்க்குமாக பயணிக்கும் அவரது பைப்பிலிருந்து வரும் உசத்தியான புகையிலையின் நறுமணத்துடன், கூடவே மாம்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழ வகைகளுடன் அவ்வப்போது கடலை மிட்டாயும், முறுக்கு கிடைக்கும். இவைகளில் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்டிப்பாக சுவைக்க முடிகிற கசப்பில் அக்மார்க் ‘பிராமின்ஸ் காப்பி’ உண்டு. சுற்றிலும் தடியாகவும், மெல்லிசாகவும் புத்தகங்கள். பின்னணியில் பாட்டையாவுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் காருகுறிச்சியோ, ராஜரத்தினம் பிள்ளையோபாட்டையாவுக்காகவே ‘சாருகேஸியொ, சஹானாவோ’ இசைப்பர். பதின் வயதிலிருக்கும் என் மகன் போடத் தயங்கும் டி-ஷர்ட்டும், அரை டிராயரும் அணிந்து வாயெல்லாம் சிரிப்பும், மனசெல்லாம் சந்தோஷமுமாக ‘வாடே வா’ என்று உற்சாகமாக வரவேற்கும் பாட்டையாவுக்கு வயது எழுபத்தேழு.
–
உலகின் சகல மனிதர்களையும் நேசிக்க முடிகிற மனதும், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து ரசித்து அனுபவித்து வாழ்கிற இயல்பும் பெற்ற ‘பாட்டையா’வை, பழைய நாகர்கோவிலின் வீதிகளில், சைக்கிள் டயர் உருட்டுகிற, சினிமா கொட்டுக்குப் பின் நோட்டீஸ் வாங்க ஓடுகிற, வீதி உலா வரும் சாமி சப்பரத்தின் கூடவே வரும் மேளத்தைக் கேட்டபடி தலையை ஆட்டி, கையைத் தட்டியவாறே தாளம் போட்டபடி நடக்கிற, பொங்கப்படித் துட்டைச் சேர்த்து வைத்து காப்பிக்கடையில் போய் ஆசை ஆசையாக ரசவடை வாங்கிச் சாப்பிடுகிற ஒரு நாஞ்சில் நாட்டுச் சிறுவனாகத்தான் பார்க்கிறேன்.ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்று அவரைச் சந்தித்த போது, ‘என்ன மயித்துக்கு மெட்ராஸுக்கு வந்தேன்னு இருக்குடா’ என்றார்.‘டெல்லிலயே இருந்திருக்கலாம்னு நெனைக்கேளோ’ என்று கேட்டேன்.‘இல்லடா. ஒண்ணு நாரோயிலுக்குப் போயிருக்கணும். இல்லன்னா திருநவேலிக்காது போயி இருந்திருக்கணும். அங்கெல்லாம் எத்தன மனுஷாள்!’ என்றார்.
குற்றவுணர்ச்சியில் பதில் சொல்ல முடியவில்லை. அவ்வப்போது அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். செய்வதில்லை. இனியாவது செய்யவேண்டும்.
"அங்கெல்லாம் எத்தன மனுஷாள்"
ReplyDeleteபாட்டையா மாமா பார்வதிபுரத்து கொடி உலகமெல்லாம் பறக்க விட்டுட்டேள்.போளி வாங்க அங்கே போகும் போதெல்லாம் இப்ப உங்க நினைப்பு தான் வருது
ReplyDelete