Friday, January 22, 2016

ஐம்பதுகளில் நான் கல்கண்டுகண்ணன்ஜில்ஜில்அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருந்த போது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி — ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு மாப்பிள்ளையாக — இருந்தார். ஊரே அவரை ‘மாப்பிள்ளை’யென்று தான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளை மாமா’.  மிகவும் சுவாரசியமாக, எதைப்பற்றியும் பேசத்தெரிந்தவர். அவருக்கு தேவையெல்லாம் லீவுநாட்களில் எங்களைப்போன்ற பதின்மவயது ‘ஆடியன்ஸ்’ தான். மணிக்கணக்கில் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். பலநாட்கள் என் அம்மா திண்ணைக்கு வந்து, அவரிடம் ‘ஓய்! மணி ரெண்டாகப்போறது. இன்னும் குளிக்காமெ, சாப்பிடாமெ, உம்ம பேச்சைக்கேட்டுண்டு ஒக்காந்திருக்கான். எல்லாம் ஆறிப்போயாச்சு. அப்பறமா சாப்டுட்டு பேசலாமே!’ என்று எங்கள் ‘இலக்கிய விசாரணைக்கு’ ஒரு முற்றுப்புள்ளி வைப்பாள்! நான் தில்லி வந்து, பிறகு லீவில் ஊருக்குப்போயிருந்தபோது, தில்லியில் நான் கேட்ட படே குலாம் அலிகான், பேகம் அக்தர் இசை பற்றியும், பால சரஸ்வதி அபிநயம் குறித்தும் நான் சொல்ல, அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அவரிடம் தான் முதன்முதலாக சாணிப்பேப்பரில் அச்சிடப்பட்ட எழுத்து பத்திரிகையைப்பார்த்தேன். பழைய பிரதிகளை பைண்ட் போட்டு வைத்திருப்பார். தான் ஒரு வரி கூட எழுதாமல், நல்ல எழுத்தை ரசிக்கத்தெரிந்த ‘இலக்கியவாதி’! இளவயதிலேயே நல்ல எழுத்தை இனம் கண்டு, தேடித்தேடி வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் வித்திட்ட ஆசான்.
விகடன், கல்கி கதைகளைப்படிக்கும் என்னிடம், கிருஷ்ணன் நம்பியின் கதை வந்திருக்கும் சரஸ்வதி யைக்கொடுத்து படிக்கச்சொல்லுவார். பாவம்…..அறுபது வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்த ஒரு ‘நல்ல எழுத்தாளரை’ப் படிக்காமலே போய்விட்டார்!
எந்த பிரபல எழுத்தாளர்கள் நாகர்கோவிலுக்கு / கன்யாகுமரிக்கு வந்தாலும், நடராஜனுக்கு தகவல் வந்துவிடும். அவருடன் நான் போய் சந்தித்த மூத்த எழுத்தாளர்கள் அனேகம். எனக்கு அவர்களைப்பார்க்க தணியாத ஆவல் இருந்ததோ இல்லையோ, பார்வதிபுரத்திலிருந்து தெற்கு ரோடு -– இப்போது காலச்சுவடுவிலாசமிருக்கும் K.P. Road –- வழியாக நடந்துபோகும்போது, பேச்சுத்துணைக்காகவாவது என்னையும் வற்புறுத்தி இழுத்துக்கொண்டு போய்விடுவார். அவர் மூலமாகத்தான் ‘மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் நம்ம வேப்பமூடு ஜங்ஷனை வெச்சு ஒரு நாவல் எழுதியிருக்கான்’ என்று ஒரு புளியமரத்தின் கதை கையெழுத்துப்பிரதியைப் படித்துப்பார்த்தேன். பிறகுதான் அது சரஸ்வதியில் தொடராக வந்தது. நாஞ்சில்நாட்டு எழுத்தாளர்களிடம் அவருக்கு தனிப்பிரியம். கிருஷ்ணன் நம்பிக்கும், சு.ரா.வுக்கும் நெருங்கிய நண்பர்.
Click Here Enlarge
ஒருநாள் மாலை என்னிடம் ‘நாறோலுக்கு’ வரியா? க.நா.சு. வந்திருக்காராம். சென்ட்ரல் லாட்ஜிலே தங்கியிருக்கார். பாத்துட்டு வருவோம்’ என்றார். எனக்கு அப்போது தன் இனிஷியலை K.N.S. என்று ஆங்கிலத்தில் சுருக்காமல், தமிழில் க.நா.சு. என்று வைத்துக்கொண்டிருப்பவரை பார்த்துவிட்டு வரலாமேயென்று தோன்றியது. லாட்ஜில் சின்ன அறையில் நம்பியும், சு.ரா.வும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். சட்டையில்லாத, பூணூல் இல்லாத உடம்பு, இன்னும் மறையாத அம்மைத்தழும்பு, பூ விழுந்த கண், சீப்பையே கண்டிராத தலை. பிற்காலத்தில் தன் ஒரே மகளை எனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்போகும் மனிதரை நான் முதன்முதலில் சந்தித்தேன். ஆனால் தன் ’வருங்கால மாப்பிள்ளை’க்கான எந்த மரியாதையையும் எனக்குத்தரவில்லை! படுக்கையின் ஒரு மூலையில் நானும் ஒண்டி உட்கார்ந்து, பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பேச்சு நடுவில், ‘காப்பி சாப்பிடலாமே…….. கோல்டன் லாட்ஜில சொல்லுவோம். கிச்சாமணி குண்டுப்போத்தி ஹோட்டல்லேருந்து ரசவடை வாங்கிண்டு வருவன்.’ என்று நடராஜன் சொல்ல, ராமசாமி கொடுத்த பத்து ரூபாய் நோட்டுடன் கீழே வந்தேன். ‘கெட்டிச்சட்னி நெறைய வைக்கச்சொல்லுங்க’ என்று க.நா.சு சொன்னதும், மணிமேடையிலிருந்து ரெண்டணா வாடகை சைக்கிள் எடுத்து வடசேரி இறக்கத்துக்குப்போனதும் நினைவிருக்கிறது.
நான் தில்லி போனபிறகு, அறுபதுகளின் இறுதியில் க.நா.சு. சென்னையிலிருந்து தில்லி வந்துவிட்டதாக அறிந்தேன். அவ்வப்போது ரஃபி மார்க் I.E.N.S. ஹாலில் கஸ்தூரி ரங்கன் நடத்தும் கணையாழி மாதாந்திரக் கூட்டங்களிலும், கர்ஸன் ரோடு மலையாளி மெஸ்ஸிலும்,  நான் மெம்பராக இருந்த தில்லி ஃபிலிம் ஸொசைட்டி திரையிடல்களிலும் அவரைப்பார்த்திருக்கிறேன். சர்வதேச திரைப்படவிழாவில் நான் போகும் நாலு தியேட்டர்களில் ஒரு தியேட்டருக்கு மகளுடன் வந்திருப்பார். ஒரு வணக்கத்தோடு சரி. ‘நிறைய கெட்டிச்சட்னியோடு ரசவடை வாங்கித்தந்தேனே!’யென்று பழங்கதையால் அவரை துன்புறுத்தியதில்லை. பிறகு முளைத்த UNI கான்டீனுக்கும் அடிக்கடி வருவார். அவர் தோற்றமோ என்னவோ இணக்கமாக பேசத்தோன்றவில்லை.
1970-ல் இ.பா. மழை நாடகம் எழுதியதும், அதில் கதாநாயகியாக நடித்த ஜமுனாவுக்கு, எனக்கே தெரியாமல் என்மேல் ’பற்று’ ஏற்பட்டதையும் சொல்லியிருக்கிறேன். மாமிகளின் மத்தியில் எப்போதும் எனக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. ‘மணிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும். ஆண் காரியம் பெண் காரியம் தெரிந்த சூட்டிகை. கைநிறைய சம்பளம் வாங்கறான். எந்த மகராஜிக்கு குடுத்து வச்சிருக்கோ?’ என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். இ.பா.வின் மாமியார் மூலமாக எனக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை அறிந்து, மகள் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அடுத்தநாள் காலை க.நா.சு. நான் அப்போது வேலை பார்த்த பிர்லா ஆபீசுக்கு வந்து என்னிடம் பேசினார். அப்போது தான் எனக்கே அந்த எண்ணம் இருந்ததை உணரமுடிந்தது. என் அக்காவிடம் க.நா.சு. வந்த விஷயத்தை சொன்னபோது, ‘ஆமாண்டா… ரொம்ப நல்ல பொண்ணு….நமக்கு ஏன் இந்த ஐடியா முன்னாடி தோணலே?’ என்று என் திருமணத்துக்கு முதல் அட்சதை போட்டார்.
பாரதி மணி திருமணத்தின் போது க.நா.சு. தம்பதியர்…
காதல் திருமணங்களில் ஏற்படும் எந்த பிரச்னையும் இல்லாமல் இரு குடும்பத்தினரின் ஒத்த கருத்தோடு ஜமுனாவின் கைத்தலம் பற்றினேன்.. திருமணம் ஒரு கனமழைநாளில், போட்ட பெரிய பந்தலெல்லாம் தண்ணீரில் முழுகி, அங்கிருந்த ஒரு நாடக மேடையில் இனிதே நடந்தேறியது. எனக்கு நாடகமே உலகம் அல்லவா! இ.பா.வின் மழை நாடகத்தில் தொடங்கிய காதல், அவரது இரண்டாவது படைப்பான போர்வை போர்த்திய உடல்கள்  நாடகத்தில் நடிக்கும்போது கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்தன்று, தாரைவார்த்து கொடுக்குமுன் நடக்கும் விரதத்தின்போது க.நா.சு. பூணூல் அணிந்திருந்தார். பலவருடங்கள் கழித்து, அவரிடம் ‘உங்களுக்கு நம்பிக்கையில்லாத விஷயத்தை ஏன் செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘உங்கள் வீட்டாருக்கு அதில் நம்பிக்கையிருந்தது. அந்த நல்ல நாளில் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை!’யென்று பதிலளித்தார். தில்லியில் நடந்த என் திருமண நாளன்று, பார்வதிபுரத்தில் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்த நடராஜன் தன் வீட்டில் ஒரு விருந்தே ஏற்பாடு செய்திருந்தாராம். அவருக்குப்பிடித்த எழுத்தாளர் க.நா.சு.வின் மகளை நம்ம ஊர் கிச்சாமணி கல்யாணம் செய்துகொள்கிறான் என்றால் சும்மாவா?
என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது.  அடுத்தநாளைப்பற்றிய கவலையே இல்லாதவர். எனக்கு அவரிடமிருந்த ஒரே வருத்தம் பத்திரிகைகளுக்கு எழுதி, வரும் பணத்தை இருக்கும்போது தாராளமாக ஹோட்டலுக்கு செலவழித்துவிட்டு, பணம் இல்லாத நாளில், ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாரா?’ என்று மணியார்டருக்கு காத்திருப்பது தான்.  ஞாயிற்றுக்கிழமைகளில் நான் சமைக்கும் சமையலை ரசித்து, சப்புக்கொட்டி சாப்பிடுவார். சும்மா சொல்லக்கூடாது….. நான் நன்றாகவே சமைப்பேன். என் அம்மாவின் சீடன்.
என் நண்பர்கள் வட்டத்தில் நான் செய்யும் மொருமொருவேன்றிருக்கும் மசால் வடையும் தூள் பக்கோடாவும் பிரசித்தம். அவை தான் மாலைவேளைகளில் எனது ‘சோமபான’ விருந்துகளுக்கு ஸைட் டிஷ்! (சிறு வயதிலிருந்தே நான் ஒரு மசால்வடைப்ரியன். ‘சுண்டெலியா பொறந்திருக்க வேண்டியவன்டா நீ’ என்று அலுத்துக்கொண்டே, என் அம்மா எண்ணெய்ச்சட்டியை வைப்பாள்!)  பத்து வடைகள் சாப்பிட்டபின்னும், ‘ராஜி! மணி பண்ணின வடை இருக்கா? இருந்தா….இன்னும் ரெண்டு கொண்டுவாயேன்!’ என்று கேட்டு வாங்கிச்சாப்பிடுவார். என் எழுத்தைப் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம் அப்போது வரும். என் குழந்தைகளுக்கு பிரியமான தாத்தா. என் குழந்தைகளுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவர்.
மாலை நேரங்களில் ஒருநாள் கூட நண்பர்களுடன் ‘Bar’ திறந்திருக்கும் என் ‘தாகசாந்தி கேந்திர’த்துக்கு அவர் வந்ததேயில்லை. வருடாவருடம் டிசம்பர் 31 இரவு நடக்கும் புத்தாண்டு பார்ட்டியில் ஒரு பெக் ’ராயல் ஸல்யூட்’ ஊற்றி அவர் ரூமுக்குச்சென்று, அவரை வற்புறுத்தி குடிக்கச்சொல்லுவேன். மரியாதை நிமித்தம் அதை வாங்கி வைத்துக்கொள்வார். அடுத்தநாள் காலையில் அது அப்படியே இருக்கும்!
தம்பதி சமேதராக நாங்கள் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும், வருமுன் ‘மெட்ராசிலே செல்லப்பா, முத்துசாமியைப் பாருங்கோ. சிதம்பரத்துக்குப்போனா மெளனியைப்பாத்துட்டு வாங்கோ. உங்க ஊருக்குப்போனா நம்பியையும், சுந்தரராமசாமியையும், திருவனந்தபுரத்தில் டி.கே. துரைசாமியையும் ஒரு நடை பாத்துட்டு வாங்கோ’ என்று அவர் சொல்ல மறப்பதேயில்லை.
சென்னையில் க.நா.சு. நடத்திய இலக்கியவட்டம், ராமபாணம், சந்திரோதயம், சூறாவளி க்குப்பிறகு, தில்லிக்கு வந்தபின்னும் அவருக்கு இலக்கியப்பத்திரிகை நடத்தும் ஆவல் தணியவில்லை. சமயம் நேரும்போதெல்லாம், என் மாமியார் ராஜி, ‘எங்காத்திலெ ஒட்டியாணம், வங்கி, காசுமாலை, புல்லாக்கு உட்பட ரெண்டு தடவை செட் நகை பண்ணிப்போட்டா. எல்லாத்தையும் சூறாவளி பண்ணிட்டார்’ என்று புலம்புவார். தில்லியில் Lipi Literary Syndicate என்ற அமைப்பைத்தொடங்கினார். இந்தத் தடவை நிறுத்தாமல் தொடர்ந்து Lipi லிபி என்ற ஆங்கில இலக்கியப் பத்திரிகை நடத்தவேண்டுமென்று விரும்பினார். அப்போது நான் HDPE Woven Sacksதயாரிப்பாளர்களின் அகில இந்திய சங்கத்துக்கு தில்லியில் பிரதிநிதியாக இருந்தேன்.எழுபதுகளில் உரத்தட்டுப்பாடிருந்தது. துறைமுகங்களில் வந்திறங்கும் Bulk Urea/DAP/MOP உரங்களுக்கு 15 கோடி காலி சாக்குமூட்டைகள் தேவைப்பட்டன. இந்திய அரசின் உணவுத்துறையிடம் அந்த பெரிய ஆர்டரை வாங்கிக்கொடுத்து, அதை சரியாக நிறைவேற்றும் பொறுப்பு என்னுடையது. அவர்களை சும்மா விடலாமா? வசதியுள்ள 70 அங்கத்தினர்களிடம் Lipi Literary Syndicate-க்கு விளம்பரத்திற்காக,தலா ஆயிரம் ரூபாய்க்கு அவர்கள் தலையில் கை வைத்தேன். இதற்கெல்லாம் C.A.G. Report / Lok Ayukta Report வராது! என்னிடம் அவர்களுக்கு காரியமாகவேண்டியிருந்ததால், க.நா.சு.வுக்கு ரூ.70,000 வந்தது. அப்போது இது ஒரு நல்ல தொகை. அது தீரும் வரை லிபி நான்கு இதழ்கள் வெளிவந்தன! அவரது ஆசையும் தீர்ந்தது!
உங்களில் பலருக்குத்தெரியாத விஷயம் சரண்சிங் சிலமாதங்களுக்கு இந்தியப்பிரதமராக இருந்தபோது, அவர் நடத்தி வந்த Rural India என்ற பத்திரிகைக்கு க.நா.சு.வை ஆசிரியராக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். தினமும் வீட்டுக்கு கார் வந்து அழைத்துப்போகும். கட்சியிலிருந்த எம்.பி., ராம் விலாஸ் பாஸ்வானிடம் ஏற்பட்ட கருத்துவேற்றுமையால், இரண்டே மாதத்தில் கால் கடுதாசி கொடுத்துவிட்டார். சரண்சிங் எத்தனையோ வற்புறுத்தியும், போகவேயில்லை.
1982 வாக்கில் மைசூரில் யூ.ஆர். அனந்தமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த இந்திய எழுத்தாளர் பட்டறை முடிந்தபின் இருமாதங்கள் சென்னையில் இருந்துவிட்டு வருகிறேனென்று தில்லியிலிருந்து புறப்பட்டார். பல வருடங்களாக மறுபதிப்பு வராமலிருந்த அவரது எல்லா மொழிபெயர்ப்புகளும், படைப்புகளும் அப்போது புற்றீசல் போல புது பதிப்புகள் வர ஆரம்பித்தன. க.நா.சு.வின் பெயரைக்கூட கேள்விப்பட்டிராத இளம் தலைமுறையினர் அவரைப் படிக்கத் தொடங்கினர். ‘தமிழ்நாட்டிலே புதுசா என்னை கவனிக்க ஆரம்பிச்சுருக்காங்க. குங்குமத்திலும், துக்ளக்கிலும் தொடர்ந்து எழுதச்சொல்றா. சந்தோஷமா இருக்கு. கொஞ்சநாள் சென்னையிலெ இருக்கேன்’ என்று இன்லாண்ட் கடிதமெழுதிவிட்டு, என் ’சித்தன் போக்கு சிவன் போக்கு’ மாமனார் மைலாப்பூர் TSV கோவில் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்தார்.
குங்குமம் பத்திரிகையில் அவர் எழுதிய ‘.நா.சுபக்கத்தில் கருணாநிதிக்கெதிரான விமர்சனங்களையும் பதிவுசெய்ய முரசொலி மாறன் அனுமதித்திருந்தார். சொந்த மகளுக்கும் மேலாக சென்னையில் எல்லா உதவிகளையும் செய்ய, லதா ராமகிருஷ்ணன், மற்றும் மஹாதேவன் போன்றோர் பக்கத்தில் இருந்தனர். இரண்டு மாதம் சென்னை வாசம் என்பது நான்கு வருடங்கள் நீடித்தது. க.நா.சு வாழ்க்கையில் அவை மகிழ்ச்சிகரமானவை. ஒரு பிரபல வார இதழின் நிருபர் இடக்காக ‘ரொம்பநாள் கழிச்சு சென்னைக்கு ஏன் வந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு, ‘கடைசிக்காலத்திலே இங்கே சாகலாம்னு வந்திருக்கேன்!’ என்று பதிலளித்தாராம். இந்த வார்த்தையை அவர் காப்பாற்றவில்லை. 1988-ல் தன் கடைசி நாட்களைக்கழிக்க அவருக்குப் பிடித்த தில்லியில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். இதைப்பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.
எண்பதுகளில் ஒரு தடவை நாகர்கோவில் போனபோது, பார்வதிபுரத்திலிருந்த என் அம்மாவைப் பார்க்க சுந்தர ராமசாமியுடன் போயிருந்தார். ‘அன்னிக்கு உங்காத்திலெ சாப்பிட்ட பூப்போல, வாயில் கரையும் இட்லியும், சாம்பாரும், அந்த தேங்காய் சட்னியும் போல நான் வேற எங்கெயும் சாப்பிட்டதில்லே. நானும் பல இடங்களில் கை நனைத்தவன்’ என்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்… என் தாயின் இட்லியும் சட்னியும் உலகப்பிரசித்தம்!
அதனால் தான் எனக்கு ‘முருகன் இட்லிக்கடை’யெல்லாம் சாதாரணமாகப்படுகிறது. எனக்கு நாக்கு நாலேகால் முழம். காளியாக்குடி அல்வாவில் தொடங்கி, எந்த ஊரிலும், சிற்றூரிலும் எந்தெந்த ஹோட்டல்களில் எதெது விசேஷம் என்பதற்கு அவர் ஒரு ரெடி ரெக்கனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல…… சிம்லாவில் எந்த மூலையில் ராத்திரி பத்து மணிக்கு மேல் சிறந்த ‘கடக் சாய்’, சமோஸா கிடைக்குமென்பது அவருக்கு அத்துப்படி.
நாட்டுடமைக்கான காசோலையை முதலமைச்சர் ஜெயலலிதா திருமதி கநாசுவுக்கு வழங்குகிறார் – 2003
2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். மா. ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் முழுமுதற்காரணம். ஒரு மாதம் முன்பே, க.நா.சு.வின் பெயரை பரிந்துரைத்ததாகவும், அமைச்சர் விரைவில் அதை சட்டசபையில் அறிவிப்பாரென்றும் மா.ரா. தகவல் சொன்னார். அதற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வந்த தினம், ஐந்தாறு பிரபல எழுத்தாளர்கள் என்னை தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் எடுத்த முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்ற ‘உண்மை’யை எனக்கு விளக்கமாக எடுத்துச்சொல்லி, கட்டாயமாக என் ‘நன்றி’யையும் பிடுங்கி வாங்கிக்கொண்டார்கள்! க.நா.சு.வின் மற்றொரு வாரிசான என் மனைவி, தனக்கு இதில் எந்தப்பங்கும் தேவையில்லையென்று எழுதிக் கொடுத்து விட்டதால், மொத்தப்பணமும் க.நா.சு.வின் மனைவி ராஜிக்கே வழங்கப்பட்டது. அதே வருடம் நாட்டுடமையாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரின் பணத்துக்கு, சுமார் 25 வாரிசுகள்போட்டி போட்டதும், அதற்கான விழா நடந்த கோட்டை முதலமைச்சர் அலுவலகம் வந்தபிறகும், ஒரு ’வாரிசு’ இறந்த எழுத்தாளரை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொண்டதால், தனக்கு அதிகப்பங்கு வேண்டுமென்று ’தெருச்சண்டை’யாக்கியதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ரூ. 3 லட்சத்தை 26 காசோலைகளாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டு, சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்! 
சாகித்ய அகாதெமி விருதன்று, கமானி அரங்கில் கநாசு தன் பேத்தி, 
நா.பா.,  இ.பா.வுடன் பாரதி மணி – 1986… 
தஞ்சாவூரில் பிறந்திருந்தாலும், க.நா.சு.வுக்கு கெட்ட வார்த்தைகள் பாடமாகவில்லை. அவர் திட்டி நான் கேட்டதேயில்லை. இ.பா.வும் அப்படித்தான். ஆனால் தி. ஜானகிராமன் இதிலும் வல்லவர்! சிலசமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர் சக எழுத்தாளரை ‘பச்சைத்தெறியில்’ திட்டும்போது, இவர் நெளிவதை பலமுறை ரசித்திருக்கிறேன். ‘விடுய்யா’ என்று அவரை சமாதானப்படுத்துவார். தினமும் வெளியில் போய்விட்டு, வீடு திரும்பும்போது வாசலில் பேசியதற்கதிகமாக கேட்கும் தமிழ் தெரியாத ஆட்டோக்காரிடமும், என் குழந்தைகளை அவர் கண் முன்னால் அடிக்கும் என் மனைவியிடமும், அவரது அதிகபட்ச கோபத்தில் வரும் கெட்டவார்த்தை ‘Bloody Fool’ என்பது தான். வயதில் சின்னவர்களையும் அவர்கள் இல்லாதபோதும் கூட மரியாதையோடு தான் குறிப்பிடுவார். ’ராஜி! ஆதவன் வந்தாரா?’ பலதடவை அவரை மடக்கி, ‘எனக்கு ஒங்க மகன் வயசு தான் இருக்கும். ஏன் வாங்கோ….போங்கோனு படுத்தறீங்க!’ என்று கடிந்துகொண்டாலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.
எனக்கு அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரது அநாயாச மரணம்.எல்லோருக்கும் அந்த பாக்யம் கிட்டுவதில்லை. லேசாக ஜுரம் என்று படுத்தவர் அடுத்தநாள் அதிகாலையில் சிரமப்படாமல், மற்றவர்களை சிரமப்படுத்தாமல் போய்விட்டார்.  எனக்கும் அதுபோல நடக்கவேண்டுமென்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். அவன் சித்தம் எப்படியோ?
—–ooooo00000ooooo—–
காலச்சுவடு செப்டம்பர் 2011 க.நா.சு. நூற்றாண்டு விழா  மலரில் வெளிவந்தது.

0 comments:

Post a Comment