ஜனவரி 9-ம் தேதி ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு சாரல் விருது அளிக்கப்பட்டது. என்னையும் பேச அழைத்திருந்தார்கள். மனதுக்கு நிறைவான, நெகிழ்வான விழா.
அதில் நான் பேசியதின் சுருக்கம்:
சாரல் விருது விழா!
09.01.2011.
எல்லோருக்கும் வணக்கம். இன்று நாம் வணங்கி கொண்டாடவேண்டிய ஒரு மூத்த எழுத்தாளருக்கு மூன்றாவது ஆண்டுக்கான சாரல் விருதை வழங்கி, நமக்கு நாமே பெருமை தேடிக்கொள்ளவும், எம்பெருமாள் என்ற கலம்காரி ஓவியரைக்குறித்த நூலை வெளியிட்டு, ஓர் ஆவணப்படத்தை காணவும் கூடியிருக்கிறோம்.
இந்த விழாவில் கலந்துகொள்ள என்னை ஜே.டி அழைத்தபோது, எனக்கு என்ன தகுதியிருக்கிறதென்று நினைத்துப்பார்த்தேன். ஒருவேளை நான் வயதில் மூத்தவன் என்பதால் இருக்குமோவென நினைத்தேன். ஆனால் இன்றைய விழாநாயகர் எனக்கும் முந்தியவர். பிறகு யோசித்ததில், ஜேடி ஜெர்ரி இயக்கித்தயாரித்த இரண்டு விளம்பரப்படங்களில் நான் தலையைக் காட்டியிருப்பதால் தானோ என்றும் நினைத்தேன். ஆம், தலையைத்தான் காட்டியிருக்கேன்! மூணே மூணு செகண்ட் மட்டுமே நான் அதில் தெரிவேன். ஒண்ணு, ரெண்டு மூணு எண்ணுவதற்குள் நான் மறைந்துவிடுவேன்! ஜேடி மனசுக்குள்ளெ நினைச்சுக்குவாரு…….ஆமா, 30 செகண்ட்விளம்பரப்படத்தில், ஏழு சீன்லியா வரமுடியும்?
இந்த இரட்டையர்களை – அபூர்வ சகோதரர்களை — பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் மேலிடும். பொதுவாக சினிமா உலகில் இருப்பவர்களுக்கு சுத்தமாக இலக்கிய ஞானம் தேவையில்லை….ஏன் சினிமா ஞானமே கூட தேவையில்லை! ஸ்டார்ட் காமெரா……கட் சொல்லத்தெரிந்தாலே போதும்! அந்தச்சூழலில் இருக்கும் இவர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமல்ல…. கடந்த 3 வருடங்களாக கைப்பணத்தை செலவழித்து, ‘ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளையை துவக்கி, ஆண்டு தோறும் விழா எடுத்து, தமிழில் சிறந்த எழுத்தாளர்களுக்கு சாரல் விருது கொடுத்து பாராட்டி கெளரவிக்கிறார்கள்.
இப்படி இருவர் கருத்தொருமித்து சேர்ந்து வேலை செய்யும்போது, ஒருவர் சாதுவாக இருப்பார்…மற்றொருவர் மிரட்டி வேலை வாங்குவார். இங்கே ஜே.டி. ஒரு மிருதுபாஷிணி என்றால் ஜெரி அதற்கும் ஒருபடி மேலே சாதுவாக இருக்கிறார். இவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு திறமையான டீம் தான் இவர்களை சாதுவாக வைத்திருக்கிறது என்று நான் சொல்லுவேன். நான் அந்த விளம்பரப்பட ஷூட்டிங் போயிருந்தபோதும். அதே நிதானம். அவர்கள் ‘ஷாட் ஓகே’ சொல்வது கூட என் காதுக்கு கேட்காது! Both of them have their heads on their shoulders! இது மிகப்பெரிய வரப்பிரசாதம்! God bless both of them!
இந்த விருது அரை சாகித்ய அகாடெமி விருதுக்கு ஒப்பானது!. ஆமாம், அரசு அமைப்பான சாகித்ய அகாடெமியே ஒரு லட்சம் தான் –= அதுவும் இந்த வருடத்திலிருந்து தான் — கொடுக்கிறதென்றால், இரு தனிநபர்கள் ஐம்பதாயிரம் ரூபாய்கொடுக்கிறார்கள். ஒரு வழியில் சாகித்ய அகாடெமி விருதை விட இது அதிக மதிப்புடையது என்று கூறுவேன். காரணம் அங்கே விருதாக அவர்கள் கொடுப்பது ’சாகித்ய’ என்று ஹிந்தியில் எழுதிய ஒரு பித்தளைப்பட்டயம் தான். நமது சாரல் விருது கலைநயம் கொண்டது.
சாகித்ய அகாடெமி பித்தளைப்பட்டயத்தைக்குறித்து ஒரு சின்ன தகவல். எண்பதுகளில்க.நா.சு. இறந்தபிறகு அவரது பரிசுப்பொருட்கள், மானுஸ்க்ரிப்ட் முதலியவை சென்னையிலிருந்து தில்லிக்கு வந்தன. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொண்டுவந்த அட்டைப்பெட்டிகள் என் காரில் இருந்தன. அன்று இரவில் கார் ஸ்டீரியோவை திருட வந்த ஒரு திருடன், போனஸாக காருக்குள் இருந்த பெட்டிகளை கிழித்துப்பார்த்ததில் பரிசாகக்கிடைத்த மூன்று வெள்ளித்தட்டுகள் – அதில் ஒன்று மறைந்த நம் எம்.ஜி.ஆர். கொடுத்தது – அதுவே சுமார் ஒன்றரைக்கிலோ எடையிருக்கும் தட்டு – இன்னும் கையை விட்டு துழாவியதில் க.நா.சு.வின் சாகித்ய அகாடெமி பித்தளைப்பட்டயம் – பார்த்தவுடன், இந்த பித்தளை யாருக்கு வேண்டும் என்று அதை காருக்கடியில் வீசிவிட்டு, கார் ஸ்டீரியோ, மூன்று வெள்ளித்தட்டுகள், போனஸாக காரில் வைத்திருந்த, இரண்டாயிரத்துக்கும் மேல் விலையுள்ள ஜெர்மன் பைப் லைட்டருடன் சுருட்டிக்கொண்டு போனார்……அந்த மரியாதைக்குரிய திருடர்! அடுத்தநாள் காலை அவருக்கும் வேண்டாத அகாடெமி பித்தளைப்பட்டயம் செவனேண்ணு கீழே கிடந்தது. க.நா.சு. பெற்ற விருதுகளில் அது ஒன்று தான் உருப்படியாக வீட்டில் இருக்கிறது!
ஆனால் நமது சாரல் விருது வித்யாசங்கர் ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட கலைநயம் மிக்க பொக்கிஷம்!. கிடைத்தவர்கள் ஆயுசுக்கும் போற்றிப் பாதுகாக்கலாம்!
இந்தவருடம் சாகித்ய அகாடெமி விருதுபெறவிருக்கும் என் நண்பன் நாஞ்சில்நாடனுக்கு அந்த விருது எத்தனை பொருத்தமோ அத்தனை பொருத்தமும், இன்றைய விழா நாயகர், என் நண்பர், மூத்த எழுத்தாளர் திரு. அசோகமித்திரனுக்கும் உண்டு. அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பேயில்லை! இந்தவருடம்,…… சபாஷ்!…..சரியான தேர்வு!
நடுவர்கள் குழுவில் இருக்கும் திரு. மா. அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியம் ஆகியோருக்கு இந்தவருட சாரல் விருது தேர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
திரு. அசோகமித்திரனுடன் கடந்த நாற்பதாண்டு கால தொடர்பு உண்டு. எழுபத்திரெண்டில் நடந்த என் திருமணத்திற்கு, க.நா.சுவின் மாப்பிள்ளை என்ற முறையில் தனியாக கல்யாண வாழ்த்து தெரிவித்து எழுதியது தான் இவர் எனக்கு எழுதிய முதல் கடிதம். இவர் எப்போதுமே இன்லண்ட் லெட்டரில் தான் எழுதுவார். கல்யாணத்துக்கு முன்பே நானும் என் மனைவி ஜமுனாவும் இந்திரா பார்த்தசாரதி எழுதிய மழை, போர்வை போர்த்திய உடல்கள் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தது இவருக்குத்தெரியும்! உங்களில் சிலருக்கு தெரியாத செய்தி……… . அது…….இ.பா.வின் போர்வை போர்த்திய உடல்கள் நாடகம் சென்னையில் மேடையேறியபோது, அதில் அசோகமித்திரனும் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தான்! 1973-ல் எனது தில்லி நாடகக்குழுவுடன் சென்னைக்கு வந்து, நான்கு நாடகங்களை – அதில் இ.பா. எழுதிய மழையும் போர்வை போர்த்திய உடல்களும் அடக்கம் — மயிலை ஆர்.ஆர். சபாவில் மேடையேற்றினேன்.. நாங்கள் சென்னையிலிருந்த ஏழு நாட்களும் காலை முதல் இரவு வரை தாமோதர முதலி தெருவில் குடியிருந்த அசோகமித்திரன் என்கிற ஜே. தியாகராஜன் எங்களுடனேயே இருந்து வேண்டிய உதவிகளை செய்தார். அப்போது இவரை சைக்கிள் இல்லாமல் பார்க்கவே முடியாது! இருவரும் இணைபிரியாத தோழர்கள்! இவரது சைக்கிள் ஒரு இலக்கிய வரலாறே சொல்லும்! நாற்பது ஆண்டுகளுக்கு முன், சென்னை வந்து நான் போட்ட நாடகங்களை இள வயது மாலன், சிவசங்கரி, சுப்ரமண்ய ராஜு, பாலகுமாரன், ஜே.டி. ஜெரி, இவர்களோடு சேர்ந்து பார்த்ததாக என் நண்பர் குடிசை ஜெயபாரதி சொல்லியிருக்கிறார்! அது உண்மையாவென்று ஜேடி ஜெரியைத்தான் கேட்கவேண்டும்!
என் மணிவிழா 1997-ல் திருக்கடையூரில் நடந்தபோதும், ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் திருக்கடையூரில் அபிராமி அம்மன்—அம்ருத கடேஸ்வரர் சன்னிதியில் கொண்டாடும் பாக்கியம் கிட்டும் என வாழ்த்தியிருந்தார். அதுவும் இன்லண்ட் லெட்டரில் தான்! 2009-ல் வெளியான என் புத்தகத்துக்கு அறிமுக உரை கேட்டிருந்தேன். அடுத்தநாளே அதையும் ரத்தினச்சுருக்கமாக ஒரு இன்லண்ட் லெட்டரிலேயே எழுதி அனுப்பியிருந்தார்!!
இவர் தில்லி வரும்போதெல்லாம் க.நா.சு.வைப்பார்க்க என் வீட்டுக்கு வருவார். க.நா.சு. இறந்தபிறகும் என் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பது தான் எங்கள் நட்புக்கு சாட்சி! க.நா.சு.வின் மீதும், தி. ஜானகிராமன் மீதும் இவருக்கிருந்த நெருங்கிய மதிப்பும் மரியாதையும் அவர்கள் இறந்தபிறகும் தொடர்கிறது என்பது தான் ஆச்சரியம்! ஒரு சிலரைப்போல தான் வளர்ந்து ஒரு பீடத்தில் அமர்ந்தபிறகு மூத்த எழுத்தாளர்களைப்பற்றிய ஆரம்பகால கணிப்பையும் மரியாதையையும் இவர் மாற்றிக்கொள்ளவேயில்லை! அதனால் தான் இன்று தமிழ் இலக்கிய உலகில் ஒரு வசிஷ்டராகவும், பீஷ்மராகவும் வாழ்கிறார்! இவருக்கு பூஞ்சை உடம்பு…. என்றுமே அதிர்ந்து பேசாதவர்! இவரிடம் ஆச்சரியமளிக்கும் விஷயம் இந்த வயதிலும் தேங்கிப்போகாமல், புதிதாக வரும் இந்திய மற்றும் உலக இலக்கியப்படைப்புகளில் பரிசயம் கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார். இந்த வயதில் எத்தனை பேர் பிரிட்டீஷ் கெளன்சிலுக்கும், அமெரிக்கன் லைப்ரரிக்கும் அடிக்கடி போய் வருகிறார்கள்?
அசோகமித்திரன் அந்தக்காலத்தில் கணையாழி பத்திரிகை மூலம் தமிழ் இலக்கியத்திற்கு புதுப்புது எழுத்தாளர்களையும், இளம் கவிஞர்களையும் அறிமுகப்படுத்தி, உற்சாகப்படுத்தியது சரியாக ஆவணப்படுத்தப்படவில்லையென்றே தோன்றுகிறது. அப்போது கணையாழிக்குப் பின்னால் மும்மூர்த்திகள் – கஸ்தூரி ரங்கன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி…….., அதில் இருமூர்த்திகள் ரங்கனும் இ.பா.வும் தில்லியில் வாசம். மூன்றாவது மூர்த்தியான அசோகமித்திரன் தான் சென்னையில் இருந்து கொண்டு கணையாழிக்கு வரும் சிறுகதை,கட்டுரை, கவிதைகளை எடிட் செய்து, பிரஸுக்கு நடையாக நடந்து –…..ஸாரி….இவரது இணைபிரியாத சைக்கிளில் அலைந்து – ப்ரூப் பார்த்து, காலம் தவறாது அச்சடித்து, சந்தாதார்களுக்கு அனுப்ப சைக்கிளில் பத்திரிகைக்கட்டுகளுடன் அஞ்சலகம் போய் அனுப்பிவருவார். இதை மாதம் தவறாமல் பல வருடங்கள் செய்துவந்தார். கணையாழியின் இலக்கிய வளர்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய பங்குண்டு. இந்த இளைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை! அவர்களுக்கு கணையாழி என்றதும், சுஜாதா மட்டும் தான் ஞாபகத்துக்கு வருகிறார். காரணம் கணையாழி கடைசிப்பக்கங்கள்! கஸ்தூரி ரங்கன் கூட இரண்டாம் பட்சம் தான்!
கணையாழியில் இருந்தபோது இவருக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கும் இடையே சிறுசிறு ஊடல்கள் அவ்வப்போது ஏற்பட்டதுண்டு. அனேகமாக ஈகோ மோதல்கள் தான்! சமீபத்தில் இ.பா.வின் எண்பதாவது ஆண்டுவிழாவுக்கு வந்திருந்த அசோகமித்திரன் இ.பா.வின் கையைப்பிடித்துக்கொண்டு வெகு நேரம் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதை தூரத்தில் நின்று ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். காலம் தான் நண்பர்களை எப்படி கனியவைக்கிறது!
இவரது நீண்டகால இலக்கியப்பணிகளைப்பற்றி பேச இங்கே பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நான் எழுத்தாளனல்ல. அறுபத்தாறு வருடங்களுக்கு முன்பே ஏழு வயதில் அரிதாரம் பூசிய நாடக நடிகன் ப்ளஸ்ஒன் புக் ஒண்டர்! எனது ஒரே புத்தகமான பல நேரங்களில் பல மனிதர்களுக்குப்பிறகு இரண்டாவது புத்தகம் சத்தியமாக எழுதமாட்டேன் என்று தமிழிலக்கிய வாசகர்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் அளிக்கிறேன்! என்னையெல்லாம் ஓர் எழுத்தாளன் என்று சொல்வது எழுத்துக்கும் அதை வேள்வியாக கொண்டாடுபவர்களுக்கும் பெருமை சேர்க்காது!! நான் ஒரு நல்ல வாசகன். தேடித்தேடி வாசிப்பவன். எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம் – நூறுக்கும் மேற்பட்ட பெரிய எழுத்தாளர்களுக்கு …….– அது ஒரு பெரிய லிஸ்ட்……. மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜ.ர., தி. ஜானகிராமன், நகுலன், ஆதவன், கிருஷ்ணன் நம்பி, சு.ரா., ஆ. மாதவன், நீல. பத்மநாபனில் தொடங்கி இப்போது எழுதும் பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு, யுவன் சந்திரசேகர், சுகா, விஜய் மகேந்திரன் வரை நண்பனாக இருக்கிறேன். அப்ப்பா! நாலு தலைமுறை எழுத்தாளர்கள்!! இந்த கொடுப்பினை வேறு எத்தனை பேருக்கு கிடைக்கும்? மெளனியும், சி.சு. செல்லப்பாவும் என்னை ‘மாப்பிளே….மாப்பிளே என்று தான் வாய் நிறைய கூப்பிடுவார்கள். மாறாக க.நா.சு. என்னை ஒரு தடவை கூட மாப்பிள்ளே என்று அழைத்ததில்லை! அவருக்கு நான் என்றும் மணி தான்! அதில் எனக்கு வருத்தமும் உண்டு! நான் மட்டும் கொஞ்சம் முந்தி பிறந்திருந்தால், புதுமைப்பித்தன், கு.ப.ரா., அழகிரிசாமி, பிச்சமூர்த்தி இவர்களுடனும் நட்பாக பழகியிருப்பேன்! அதற்குத்தான் கொடுத்து வைக்கவில்லை! போகட்டும்!
நிறைவாக விழாநாயகன் திரு. அசோகமித்திரனுக்கும், இந்த விழாவை இத்தனை சிறப்பாக நடத்தி என்னையும் பேச அழைத்த ஜேடி ஜெரி இரட்டையர்களுக்கும், பொறுமையாக கேட்ட உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து விடை பெறுகிறேன்.
நன்றி!………..வணக்கம்!!
பாரதி மணி (Bharati Mani)
0 comments:
Post a Comment