கதவினருகில் இருந்த காலிங்பெல்லை அழுத்தியதும் கதவைத்திறந்த மனிதர்,
‘எஸ்........?’ என்றார். க.நா.சு.வைப் பார்க்கவேண்டும் என்றேன். என்னுடன் என் நெருங்கிய
நண்பர், டெல்லியில் பணிபுரிந்து கொண்டிருந்த நீலமேகாச்சாரியார் சந்தானம்
இருந்தார். சந்தானத்துக்கும் தி. ஜானகிராமனுக்கும் நடந்ததொரு என்கவுண்டரின் போது
நான் உடனிருந்தேன். அதுபற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்வேன். வாலைச்
சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்று சந்தானத்திடம் எச்சரித்திருந்தேன். கதவைத்திறந்தவர்,
‘ப்ளீஸ்.....உட்காருங்கள், வரச்சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அஃதோர் 1982-ன் பெப்ரவரி மாதம், மாலை நேரம். குளிர்காலம் வடியத்
தலைப்பட்டிருந்தாலும், அந்தக் குளிரே நடுக்குவதாக இருந்தது. சந்தானம் எனக்கொரு
ஸ்வெட்டர் இரவல் தந்திருந்தார். அந்த சமயத்தில் என்னைப்போல ஸ்வெட்டர் இல்லாமல்
டெல்லி வந்து அவதிப்பட்ட எழுத்தாளர்கள் ராஜபாளையம் பன்மொழிப்புலவர் மு.கு. ஜகன்னாத
ராஜா, கொ.மா. கோதண்டம், கொ.ச. பலராமன். டெல்லியில் நடைபெற்ற Authors’ Guild
of India மாநாட்டில் கலந்து கொள்ளப்போயிருந்தேன். அப்போது
நானதில் உறுப்பினனாக இருந்தேன். ஸ்தாபக உறுப்பினராக இருந்த க.நா.சு. அப்போது
உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிட்டிருந்தார். எனது டெல்லிப்பயணத்தின்
நோக்கம், அப்போது டெல்லிவாசிகளாக இருந்த வெங்கட் சாமிநாதன், தி. ஜானகிராமன்,
டாக்டர் எஸ். ரவீந்திரன், க.நா.சு. ஆகியோரை சந்திப்பது. தங்க இடம், உண்ண உணவு
சந்தானம் தந்தார், போகவரச் செலவு A.G.I. தந்தது.
க.நா.சு.வுடன்
பேசிக்கொண்டிருந்தபோது, வாசல் திறந்து வழிவிட்டவரை அறிமுகப்படுத்தினார். ‘மணி...
என் மாப்பிள்ளை. உங்க ஊரு தான்’. மணி அப்போது வெளியாகிவிட்டிருந்த எனது
முதலிரண்டு நாவல்களை வாசித்தவராக இருந்தாலும் நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
அடுத்த நாளும் க.நா.சு. வாழ்ந்துவந்த மணி வீட்டுக்குப் போயிருந்தேன், அவரைக்
கூட்டிக்கொண்டு மாநாட்டு அரங்குக்குப் போக. அன்று S.K.S. மணி அவர்களைப் பார்த்த நினைவில்லை.
பின்னர், ‘சுபமங்களா’ கோமல் சுவாமிநாதன் ஆசிரியப்பொறுப்பில் இருந்தபோது, கோவையில் நாடக விழா
ஒன்று ஏற்பாடாகியிருந்தது. நானும் அப்போது பணி மாற்றம் பெற்று பம்பாயில் இருந்து
கோவைவாசியாக ஆகி இருந்தேன். நாடகவிழாவில், இன்று ‘வடக்கு வாசல்’
ஆசிரியராக இருந்து நடத்திவரும் ‘யதார்த்தா’ பென்னேஸ்வரன் குழுவினரின் ’எப்போ வருவாரோ!’’ நாடகம் இடம்
பெற்றது. அதில் எஸ்.கே.எஸ். மணி மையப்பாத்திரத்தில் நடித்தார். அந்த
சந்தர்ப்பத்தில் தான், விழா அரங்கிலும், விடுதியிலுமாக திரு. S.K.S. மணி அவர்களுடன் தாராளமாக உரையாட
எனக்கு வாய்த்தது.
பின்பு ஞான. ராஜசேகரன் ‘பாரதி’ சினிமாப்பட ஏற்பாடுகளைத்தொடங்கினார்.
படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னர், மராத்தி நாடக நடிகரான சாயாஜி ஷிண்டே பாரதியாக
நடிக்க ஏற்பாடானபோது, அவர் வால்பாறை போகும் வழியில், மலை மீது ஒரு இந்தி சினிமா
படப்பிடிப்பில் இருந்தார். பத்து நாட்கள், தினமும் மாலையில் பொள்ளாச்சி போய்,
சாயாஜி ஷிண்டேவுக்கு பாரதி பேசும் வசனங்களை மராத்தியில் பொருள் சொல்லித் தந்தேன்.
ஞான. ராஜசேகரன் ’பாரதி’ படப்பிடிப்பின் போது தமிழ் தெரியாத சாயாஜி ஷிண்டேவுக்கு தமிழ் வசனங்களை
ஹிந்தியில் பொருள் விளக்கி சொல்லிக்கொடுக்கவும், பாரதி படத்தில் நடிக்கவும், மணியை
தில்லியிலிருந்து வரவழைத்திருந்தார். பாரதியின் தகப்பனார் சின்னசாமி ஐயராக,
எஸ்.கே.எஸ். மணி அவர்களின் பங்களிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக,
கடைசிக்காட்சியில், அவரது கணீரென்ற குரலில் பின்புலத்தில் ஒலிக்கும் வசனம் இன்றும்
மறக்க முடியாதது. அதன் பிறகு அவர் பாரதி மணி ஆனார். அந்தப்பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமானதும் ஆனது.
இந்தச்சூழலில் தான், க.நா.சு.வுடன் தொடர்புபடுத்தி அறிமுகம் ஆகிக்கொள்ளும்
அவசியம் இல்லாத பல தனித்தன்மைகளும், திறமைகளும் கொண்டவர் அவர் என்பது எனக்கு
அர்த்தமாயிற்று.
பிறகு, பாரதி மணி எந்த வேலைக்காகக் கோவை வந்தாலும், எனக்குத் தகவல் வரும்.
அவர் தங்கும் விடுதிக்குப் போய், இரவு நெடு நேரம் உரையாடி, கடைசி 1-C பேருந்தைத் தவறவிட்டு, ஆட்டோவில்
வீட்டுக்குப் போனதுண்டு.
திராவிடப்பாரம்பரியத்தில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை நடமாடும் பல்கலைக்கழகம்
என்பார்கள். பல்கலைக்கழகம் எனின் அது சகல துறைகளையும் உள்ளடக்கியது. அந்தப்
பட்டத்தைச் சாகும் வரை சுமந்தவர். அப்படியா என்று என்னைக் கேட்டுப்பயனில்லை. ஆனால்
பாரதி மணி, அன்று வெளியூர் பிரயாணங்களின்போது ‘நடமாடும் மதுச்சாலை’யாக இருந்தார். விஸ்கி, சோடா மேக்கர்,
ஐஸ் பாக்ஸ், கண்ணாடித் தம்ளர்கள், கலக்கும் குச்சி -- இந்த கலக்கும் குச்சி Stirrer சேகரிப்பது அவர் பொழுதுபோக்கு. வெளிநாடுகளில் அவர் தங்கும்
பெரிய ஹோட்டல்களிலிருந்து கேட்டுப்பெற்ற விதவிதமான Stirrer குச்சிகள் இருநூறுக்கும் மேல் அவர் டெல்லி வீட்டு Bar-ல் உண்டு – வறுத்த முந்திரி அடங்கிய பயணத் துணைப்பெட்டி ஒன்று அவருடன் இருக்கும்.
விடுதி அறைக்குச்சென்றதும், ஐஸ் பாக்ஸ் எடுத்துக்கொண்டு போய் ஐஸ் வாங்கிவருவோம்.
யாவற்றையும் கிரமமாக எடுத்து முன்னால் தீப்பாயில் பரத்திக்கொண்டு உட்காருவார்.
அன்று எனது கணக்கு மூன்று லார்ஜ். நிறுத்த உத்தேசிக்கும்போது சொல்வார், ‘One for
the Road’ என்று.
மற்றுமொரு சுற்று. அவரைப்போல் நிதானமாக, நேரம் எடுத்துக்கொண்டு பருகியதால்
பின்விளைவு, பக்கவிளைவு, துக்கவிளைவு என்று எதுவும் எனக்கு ஏற்பட்டதில்லை.
குடிப்பதையும் ஒரு கலையாகச் செய்யும் அந்த மனிதர் சில
வருடங்களாக எப்படி குடிப்பதை அறவே நிறுத்தினார் என்பது தான் எனக்கு ஆச்சரியம்.
என் எழுத்தின் மீது அவருக்கு சுவாரசியம் இருந்தது என்பதையும், தன்னிடம்
இல்லாத எனது சமீபத்திய புத்தகத்தைக் கேட்டு வாங்கிக்கொள்வார் என்பதையும், க.நா.சு.
மருமகன் என்பதையும், நாஞ்சில்நாட்டு பார்வதிபுரம் அக்ரஹாரத்தைச்சார்ந்தவர்
என்பதையும் தாண்டி, எனக்கு அவரிடம் மூத்த சகோதரர் எனும் ரீதியிலான அன்பும்
மதிப்பும் உண்டு. அண்ணாச்சி அல்லது அண்ணேன் என அழைத்ததிலையே தவிர, என் மனம் நாடிய
உணர்வு அது. அவருக்கும் அப்படியே.
எங்களுக்குள் பத்து வயது வித்தியாசமும் உண்டு.
சில ஆண்டுகள் முன்பு, க.நா.சு.வைப்போல, எஞ்சிய வாழ்நாள் அமைதியை நாடி,
அவரும் சென்னைக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்த பின்னர், ஒரு டிசம்பர் பிற்பகலில்,
மியூஸிக் அகாடெமி வளாகத்தில் சஞ்சய் சுப்பிரமணியம் கச்சேரி கேட்கக்
காத்திருந்தபோது சொன்னார்— ‘நாஞ்சில், இங்க எனக்கொரு வீடு இருக்கு. தனியாத்தான் இருக்கேன். மூணு
பெட்ரூமும் ஏ.ஸி. தான். நீங்க சென்னை வந்தா, வேற எங்கேயும் தங்க வேண்டாம். என்னோட
தங்கலாம். இது ஒரு நிரந்தரமான அழைப்பு. ஒவ்வொரு தடவையும் புதுப்பிச்சுக்கிட்டு
இருக்க மாட்டேன். அது உங்க வீடு ...... எப்பவும் வரலாம் – போகலாம்’.
அவர் உபசாரத்துக்குப் பேசுகிறவர் அல்ல என்று எனக்குத்தெரியும். ‘வார்த்தை’ இதழ் வெளியீட்டு விழாவுக்கு
போயிருந்தபோது, விழா அரங்கிலேயே மாற்றுச்சாவியைத் தந்து, தான் வீட்டில்
இருந்தாலும் இல்லா விட்டாலும் வீட்டுக்குப் போய் நான் என் வேலையைப் பார்க்கலாம்
என்றார்.
காலையில் எழுந்ததும், வறுத்து வாங்கி வைத்திருந்த காப்பிக்கொட்டையை அப்போது
பொடித்து, வெந்நீர் சூடாக்கி, பில்டரில் புது டிகாக்ஷன் இறக்கி, பால் காய்ச்சி,
மணக்க மணக்க இரண்டு கோப்பைகளில் ஸ்ட்ராங் காப்பி எடுத்துக்கொண்டு வந்து அமர்வார்.
அவருடன் அமர்ந்து காப்பி பருகுவதும் மது அருந்துவது போன்றதொரு ஒப்பற்ற அனுபவம்
தான். எனக்குப் பிடித்த ரீதியிலான காப்பி குடித்த இடங்கள் அருமை. தமிழ்க்கடல் ராய.
சொக்கலிங்கத்தின் மாணவர் ‘நாராயணீயம்’ தமிழ் செய்தவர், எனக்கு நான்கு
ஆண்டுகள் கம்பராமாயணம் பயிற்றுவித்த ரா. பத்மநாபன் வீடு. நீலமேகாச்சாரியார்
சந்தானம் வீடு, ‘ழ’வில் கவிதைகள் எழுதிய, மதுரை மகா வைத்யநாதய்யர் மரபின் பேரன் எஸ்.
வைத்யநாதன் வீடு. பிறகு பாரதி மணி வீடு.
ஈண்டு காப்பி குடிப்பது என்பது தாக சாந்தியோ, பசியாறலோ, உடல்நலம்
பெருக்குவதோ அல்ல. அஃதோர் அனுபவம், சடங்கு. யப்பானியர், சீனர் தேநீர் பருகுவது
போல. எனக்கது பாரதி மணி வீட்டில் தான் அர்த்தமாகியது. மேலும் அவர் மது அருந்துவதை
நிறுத்திப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன, மாமிசமோ எஞ்ஞான்றும் இல்லை. நான் இரண்டையும்
நிறுத்தி ஓராண்டே ஆகிறது.
நாடகப் பயிற்சியும் குரல்வளப் பயிற்சி (Voice Culture) யும் அவர் பெற்றது உலகத்தரத்துப்
பள்ளிகளில் – National School of Drama, New Delhi and London
School of Drama, U.K. ‘பாரதி’யில் அவர் உச்சரிக்கும் தமிழ் யாவர்க்கும் அதை வெல் என
விளம்பியது. தமிழ் நாடகத்துக்கும், கர்நாடக இசைக்கும் அவர் ஆற்றிய பணி, அவரது பல
கட்டுரைகள் மூலம் காணக்கிடைக்கின்றன.
அவருடன் தங்கியிருந்த நாட்களில், எனக்கும் வேறு செய்யாமற் தீராத வேலை என்று
எதுவும் இல்லை. இராப்பகலாக பேசிக்கொண்டிருப்போம். உயிர்மை
கட்டுரைத்தொடர்களில் அவரால் எழுத முடியாது போன பல தகவல்கள் பழையாற்று வெள்ளமாய்ப்
பொங்கிப்பாய்ந்து கொண்டிருக்கும். அந்தத்தகவல்களை அவரைத்தவிர வேறு எவராலுமே
எழுதியிருக்க முடியாதவை. எல்லாம் தலைநகரின் ‘பல் குழுவும் பாழ் செய்யும்
உட்பகையும் வேந்து அலைக்கும் கொல் குறும்பும்’ நிறைந்த தகவல்கள். அவரது ‘தலைவர்களும் தனயர்களும்’
கட்டுரையில் சிறு குறிப்புப்போல
சொல்லப்பட்டவை போன்று தில்லியில் அவருக்கு நேர்ந்த இன்னும் பல திகைப்பூட்டும்
அனுபவங்கள்.
‘பங்களாதேஷ் நினைவுகள்’ கட்டுரை பல சமூக, அரசியல் கேள்விகளை உள்ளடக்கியிருப்பது. ஆழ்ந்து சிந்திக்க
வேண்டிய விஷயங்கள். பிரமிப்பு ஏற்படுத்தும் சங்கதி, இவ்வளவு தகவல்களை அவர்
எங்கிருந்து கொணர்ந்து கொட்டுகிறார் என்பது. வேறு எங்கும் கேள்விப்பட்டிராத தகவல்
பங்களாதேஷின் பத்மா, மேக்னா நதிகளில் வாழும் ஹீல்ஸா மீனின் சுவை பற்றியது. எனக்கு
‘அந்த நாள் வந்திலை அருந்தவப் புலவோய்’ என்றிருந்தது.
வரலாற்றின் பக்கங்களில் நகரமாட்டாமல் சிக்கிக்கொண்டு விட்ட பங்களாதேஷ் வாழ்
தமிழ் முஸ்லீம்கள் பற்றிய செய்திகள், அவர்களுக்காக ஒவ்வொரு முறை பங்களாதேஷ்
போகும்போதும் பாரதி மணி கட்டி எடுத்துப்போகும் குமுதம், ஆனந்த விகடன், அவை அங்கு
வாசித்துக்கேட்கப்படும் விதம் யாவும் மனத்தைக் கனக்கச்செய்வன.
பாரதி மணி அற்புதமாகச் சமைப்பார். நள பாகம் தான். அவர் அம்மாவின் ‘Sivakami
School of Cooking’ அல்லது
‘பார்வதிபுரம் கரானா’. சில நாட்கள் நான் சாப்பிட்டுப்பார்த்த
உறுதியில் இதைச் சொல்கிறேன். ஒரு நாள் கேட்டார்: ‘நாஞ்சில், இப்ப நம்ம ஊரில் அப்பக்கொடி
கிடைக்கிறதா?’ என்று. எனக்கு பிரண்டைக்கொடி தெரியும், பசலைக்கொடி தெரியும், கோவைக்கொடி
தெரியும், பாகற்கொடி, புடலைக்கொடி, பீர்க்கங்கொடி தெரியும் – அப்பக்கொடி கேள்விப்பட்டதேயில்லை.
நாஞ்சில் நாட்டு கடுக்கரை, அழகியபாண்டிபுரம், காட்டுப்புதூர் காடுகளில் இருந்து
மரத்தைச் சுற்றிக்கொண்டு வளரும் இந்தக்கொடியை அந்தக்காலத்தில் ஒற்றைமாட்டு வண்டியில் விற்பனைக்கு கொணர்வர் எனவும் அரை
விரற்கடை நீளத்துக்குத் தறித்து உலர்த்தி வைத்துக்கொள்வார்கள் என்றும்,
மோர்க்குழம்புக்கும், தேங்காய் அரைத்த குழம்புக்கும் தாளிக்கப் பயன்படுத்துவார்கள்
என்பதும், அதன் வாசனையில் ஊரே மணக்கும்
என்பதும் அவர் தரும் தகவல். அப்பக்கொடியை உலர்த்தும்போது, இரண்டாவது நாள் தெரு
முழுக்க அதன் நாற்றம் பரவும் எனவும், எனவே அந்த நாற்றத்துக்கேற்ப அப்பக்கொடிக்கு
‘இராவணன் குசு’ என்று பெயரென்பதும் அவரது உப தகவல்.
நான் சொல்லவந்தது அதுவல்ல.
‘நாஞ்சில், என் சமையல் பல சமயம் எங்கம்மா ஸ்டாண்டர்டுக்கு நல்லா
வாச்சுதுன்னா, அன்னிக்கு தனியா உட்கார்ந்து சாப்பிடும்போது, கூட எங்க அம்மாவும்
உட்கார்ந்து ‘இன்னிக்கு நன்னா சமைச்சிருக்கேடா’னு சொல்லி என்னோடு சேர்ந்து சாப்பிட்ட
திருப்தி எனக்கு இருக்கும்’ என்றொரு நாள் அவர் சொன்னபோது அவர் கண்கள் கலங்கியிருந்தன.
ஆம்! இப்பொதெல்லாம் அவர் கண்கள் உரையாடும்போதும், சந்தித்து அவரிடம்
விடைபெறும் போதும் அடிக்கடி கலங்குகின்றன. கனிந்து நிற்கும் நிறை மனமுடையவருக்கே
அது சாத்தியம். ‘தில்லியில் தென்னிந்திய ஓட்டல்களும் கையேந்தி பவன்களும்’ பற்றிச் சொல்ல வந்தேன். இப்படி நன்றாகச் சமைக்கவும், ருசித்துச்
சாப்பிடவும் தெரிந்தவரால் தான் இதுபோன்ற கட்டுரை எழுத இயலும்.
‘நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்’ வரலாற்று ரீதியான பல பதிவுகளைக்
கொண்டுள்ள முக்கியமான கட்டுரை. இம்மாத ஆரம்பத்தில் திருவனந்தபுரத்தில், பாரதி
மணிக்கு சற்று மூத்தவரான எழுத்தாளர் ஆ. மாதவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தக்
கட்டுரையை வெகுவாகச் சிலாகித்து அனுபவித்துச் சொன்னார். எனக்கு நெல்லிக்காய்
தின்றபின் தண்ணீர் குடித்தது போலிருந்தது. ரத்தினகிரி அல்போன்ஸா மாம்பழங்களையும்,
பீகாரின் லங்கடா மாம்பழங்களையும், உத்தர் பிரதேசத்து தஸேரி மாம்பழங்களையும்,
பங்கனப்பள்ளியையும், மல்கோவாவையும், ருமானியையும், இமாம் பஸந்தும், நீலமும்,
செந்தூரமும் கேள்விப்பட்டிருப்பீர்கள். திருவிதாங்கூரின் ‘வெள்ளாயணி’ மாம்பழம் கேட்டதுண்டா? பாரதி மணி கட்டுரையில் காணலாம்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பாரதி மணி ஒரு தலைமுறையின் பிரதிநிதி. எனக்கும் முந்திய தலைமுறை அது.
அந்தக் காலம் மறைந்து போய்விட்டது. ‘அப்பா என்றாலும் வராது, அம்மா என்றாலும்
வராது!’ ஆனால் இளைய தலைமுறையினர் அந்தக் காலத்தை, அவற்றின் நன்மை தின்மைகளுடன்
அறிந்துகொள்ள வேறு மார்க்கம் இல்லை. ஏனெனில் வரலாற்றில் பொய் எழுதிச் சேர்க்கும்
மாயம் நடந்துகொண்டிருக்கும் காலகட்டம் இது. பாட புத்தகங்களே இன்று பெரும் பொய்
புகல்கின்றன.
எனக்கு நன்றாகத் தெரியும் பாரதி மணி ஒரு தகவல் கிடங்கு என, அனுபவக்கருவூலம்
என. ஆனால் இன்றைய இந்தியச்சூழலில், அதிலும் குறிப்பாகத் தமிழ்ச்சூழலில்,
எல்லாவற்றையும் சொல்லிவிடவும் முடியாது. வீட்டுக்கு ஆட்டோ வரும். ஃபோனில் தெறி
விளிப்பார்கள், முத்திரைகள் குத்தப்படும், கடுங்கையான கவிதைகள் எழுதப்படும்,
துரோகிப்பட்டம் வலிய வழங்கப்படும். உண்மையே ஆனாலும் அதைப் பேச சாதிப்பலம், பணபலம்,
அரசியல் பலம், ஊடகப்பலம் இல்லாமல் சாத்தியமில்லை. எனவே பாரதி மணியின் ‘பல
நேரங்களில் பல மனிதர்கள்’ விசேடத் தகுதி பெறுகிறது.
உயிர்மை வாசகர்களுக்கு அவரது கட்டுரைத்தொகுதி பெருவிருந்து. இந்தியாவுக்கு பாஸ்மதி
அரிசி வந்த கதை பற்றிய ‘சிங் இஸ் கிங்’ கட்டுரையை குறிப்பிட்டுச் சொன்ன
நண்பர்கள் உண்டு. அவரது மனிதநேயம் தெரிந்துகொள்ள ‘தில்லியில் நிகம்போத் காட்
சுடுகாடு’ ஒன்று போதும். மாய்ந்து மாய்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதை விடவும்
தகவல் செறிந்த இந்தக்கட்டுரைகள் மிகுந்த அர்த்தமுள்ள பணி என்றெனக்குத்
தோன்றுகிறது.
சிக்கலற்ற மொழி நடை, எளிமையான பிரயோகங்கள், நகை ஊடாடும்
வெளிப்பாடு.......எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இத்தகையதோர் செப்பிடு வித்தை,
பருவம் தாண்டிப் புதிதாய் எழுத வந்தவருக்கு எங்ஙனம் சாத்தியம்? இது பாலசரஸ்வதி
முதுமையில் அபிநயம் பிடிப்பதைப் போன்றதல்ல! மாமனார் க.நா.சு.விடம் இருந்து பாரதி
மணி கைமாற்றாகப் பெற்றதல்ல. நாஞ்சில் நாட்டின் பார்வதிபுரத்து பிதுரார்ஜித சொத்து.
அங்கு, பாரதி மணிக்கு பக்கத்து சாம்ராஜ்யம், ஜெயமோகன்.
எனக்கு இன்னொரு ஆச்சரியம் நேர்ந்தது.
தனது இறுதிநாட்களில், க.நா.சு. சென்னையில் வாழ்ந்திருந்தபோது, நான் முன்
சொன்ன எஸ். வைத்ய நாதனுடன் அவரைக்காண சென்றதுண்டு. சில சமயம் சா. கந்தசாமியுடன்.
அப்போது க.நா.சு.விடம் இருந்த முகத்தோற்றம் முற்றாக இப்போது பாரதி மணியிடம்
இறங்கியிருக்கிறது. இது எங்ஙனம் சம்பவிக்க இயலும் எனும் கேள்விக்கும் என்னிடம்
விடை இல்லை.
இந்த எனது முன்னுரையை முடிக்கும் முன்பு, பாரதி மணியிடம் எனக்கோர்
வேண்டுகோள் உண்டு. உடல் சோர்வை, மனச்சடைவை, அலுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் தனது
சேகரத்தில் உள்ள அனைத்தையும் இளைய தலைமுறைக்குக் கடத்தி விட முயலவேண்டும். ஜென்
துறவி சொன்னது போல், காலிக்கிண்ணமாக ஆகிவிட வேண்டும்.
அவரது வயதுக்கு அதிகமான எதிர்பார்ப்பு என்றுமக்குத் தோன்றலாம்.
வயது என்பதோர் எண்ணிக்கை தானே!
கோயம்புத்தூர்-641005.
25 டிசம்பர் 2008. நாஞ்சில் நாடன்
0 comments:
Post a Comment