Thursday, January 21, 2016

ஒரு நாள் காலை. தில்லியிலிருந்து ‘யதார்த்தா‘  பென்னேஸ்வரனின் கைபேசிச்செய்தி, ‘மணி சார்! நம்ம சுப்புடு இன்னிக்குப்போயுட்டார்‘. அன்று பூராவும் அவர் நினைவாகவே இருந்தது.  எனக்கும் அவருக்கும் 50 வருடங்களுக்கும் மேலான பழக்கம்.


1955-ல் நான் தில்லி போன புதிசு. அங்கே யாரையும் பரிச்சயமில்லை. தில்லி தீயணைப்பு அதிகாரி சிங்கார சுந்தரம் வீட்டுமாடியில் [கனாட் பிளேஸ்] மாதாந்திர ஷஷ்டி பஜனை.  திருப்புகழ் அன்பர் ஏ. எஸ். ராகவன் அப்போதுதான் திருப்புகழ் பாட ஆரம்பித்திருந்த சமயம்.   இப்போது ‘திருப்புகழ் அன்பர்கள்’ ஒரு ஸ்தாபனமாக வளர்ந்து, தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னையைத்தாண்டி டெக்ஸாஸ் வரை பரவியிருக்கிறது!  திரு. ஏ.எஸ்.  ராகவன் ‘குருஜி‘யாகிவிட்டார். அன்று ஆர்மோனியம் நாராயணனுக்குப்பதிலாக, சுப்புடு வாசிக்கிறார். சுப்பிரமண்ய தீக்ஷிதருக்குப்பிறகு யாருக்கும்  ஆர்மோனியத்தில் கை வைக்கத் தகுதியில்லையென்று நான் நினைத்திருந்த காலமது! பல திருப்புகழ் விருத்தங்களுக்கு, ராகவனுடன் அனுசரணையாக நாத நாமக்ரியா,  சாவேரி, முகாரி,  சக்ரவாகம் என பலராகங்களில் சுப்புடு வாசித்தவிதம் என்னை மிகவும் ஈர்த்தது. நிகழ்ச்சிக்குப்பிறகு பரிச்சயமானோம். அந்த நட்பு ஐம்பது ஆண்டுகளுக்கும்மேலாக, சிலபல கருத்து வேறுபாடுகளுடன், பலபல சண்டை சமரசத்தோடு தொடர்ந்தது
போனவருடம் அவரது ஆங்கில சுயசரிதம் தில்லியில் வெளியானசெய்தியறிந்து, வாழ்த்துத் தெரிவித்தேன். ‘அதிலே உன்னைப்பற்றியும் எழுதியிருக்கேன்‘  என்றார்.  ‘ நல்ல விதமாகத் தானே!‘ என்று கேட்டதற்கு சிரித்தார்.
சிறுவயதில் பர்மாவிலிருந்து பலநாட்கள் உணவில்லாமல் நடந்தே இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததைப்பற்றி விலாவாரியாக பல பத்திரிகை நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். அரைத்தமாவு வேண்டாம். மத்திய நிதியமைச்சகத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்து,  ரிட்டயராகும் போது அண்டர்செக்ரட்டரியாக ஓய்வுபெற்றவர். ஆபீசில் அவர் வேலை செய்கிற நேரம் மிகக் குறைவு. நினைத்த நேரத்தில் வருவதும் போவதும் அவருக்கு சாத்தியமாக இருந்தது. ஆபீசில்P.V. சுப்பிரமணியம் என்ற பெயருக்கில்லாத மதிப்பும் மரியாதையும்,  வெளியில் ‘சுப்புடு‘   என்கிற நாலெழுத்துக்கு உண்டு. அவர் மேசைக்கு எந்தக்கோப்பும் வராது. மேசை எப்போதும் துடைத்து விட்ட மாதிரி இருக்கும். ‘நேற்று நீங்க போன பிறகு பூதலிங்கம் ICS போன் பண்ணினார். காலையில்  ஆல் இந்தியா ரேடியோ D.G. Dr. நாராயண மேனன் கூப்பிட்டார்’ என்று அவர் அதிகாரி ஒருவித பயத்துடன் தகவல் சொல்லு வார். அப்போதெல்லாம் ஆபீஸ் தொலைபேசி மட்டும்தான் தொடர்புக்கு ஒரே வழி. யாருக்கும் வீட்டில் போன் கிடையாது. ‘பெரிய இடத்து சம்பந்தம், நமக்கேன் வம்பு?‘ என்று அதிகாரிகள் ஒதுங்கிவிடுவார்கள். ஆபீசில் அவர் ஒரு கோவில்காளையாகவே திகழ்ந்தார்!
ஆங்கிலத்தில் அவருக்கிருந்த பிடிப்பும், ஞானமும் அளவிடமுடியாதது. அதுவே மற்றவர்கள் அவருக்குக்காட்டும் மரியாதையாக மலர்ந்தது. மேலதிகாரிகள், தங்கள் அமைச்சருக்கும்,  காபினெட்டுக்கும் அனுப்பும் தனது முக்கியமான ரிப்போர்ட்களை நல்ல ஆங்கிலத்திலிருக்கிறதா என்று கேட்டு இவரை பிழைதிருத்தச்சொல்வார்கள். அந்த அளவுக்கு அவரது ஆங்கிலத்தின் ஆளுமை பிரசித்திபெற்றது. அவரது English Drafting-ல் யாரும் கைவைக்க முடியாது! அந்த ஆளுமைதான் அவரை ஒரு சிறந்த விமர்சகராகவும் ஆக்கியது. வார்த்தை ஜாலத்தில் வல்லவர். தன்னைத்தானே நையாண்டி செய்து கொள்வதில் சமர்த்தர். அவரைச்சுற்றி எப்போதும் பத்துப்பேர் இருப்பார்கள். ‘பைத்தியக்காரனைச்சுற்றி பத்துப்பேர்,  என்னைச்சுற்றியும் பத்துப்பேர்‘ என்று சிரிக்காமல் சொல்லுவார்.
அந்தக்காலத்தில் தில்லியில் U.N.I. கான்டீன் மிகவும் பிரபலம். தமிழ்நாட்டிலிருந்து தில்லி வரும் எந்த எழுத்தாளரும், சங்கீத வித்வானும் —  சில நேரங்களில் சில நடிகர்களும் – அந்தக் கையேந்தி பவனில் மதிய உணவுவேளைகளில் வராமலிருக்கமாட்டார்கள். அலுமினியத் தட்டுகளில்  தோசையின் மேல் சேர்த்து ஊற்றிய சாம்பார் சட்னியில் முழுகப்பார்க்கும் ஜாங்கிரியை ஒரு கையால் பிடித்துக்கொண்டே, வளைந்த அலுமினியக் கரண்டியால் சட்டையில் சாம்பார் விழாமல் சாப்பிடுவது ஒரு கலை. எல்லா தில்லிவாழ் கலைப்பிரமுகர்களும் அங்கே மதியம் வந்தாக வேண்டும். இது எழுதப்படாத நியதி! தி. ஜானகி ராமனிலிருந்து ஆதவன் வரை, ஈமனி சங்கர சாஸ்திரியிலிருந்து வாகீஷ் வரை அங்கே பார்க்கலாம்.  சூரி எனப்படும் சூரியநாராயணன் அதை ஆரம்பித்த நாளிலிருந்து, ரிலையன்ஸ் பாலு, தமிழ்ச்சங்கம்கிருஷ்ணமூர்த்தி, சுப்புடு, நான், P.S.R. எனப்படும் ‘அகத்தியன்‘ போன்ற பத்துப்பேர் அங்கே நிரந்தர வாடிக்கையாளர்கள்.. அங்கேயும் சுப்புடுவைச்சுற்றி பத்துப்பேர் எப்போதும் இருப்பார்கள். சிரிப்பலைகள் ஓயாது!. அவர் வாயைப் பார்த்தபடியே இருப்பார்கள்.
1956-ல் நாங்கள் தமிழுக்காக ஒரு நாடக அமைப்பு – ‘தக்ஷிண பாரத நாடக சபா [DBNS] – ஆரம்பித்தபோது, அதில் சேராமல் ஒரு வருடம் காத்திருந்து ‘South Indian Theatres‘ என்று பூர்ணம் விசுவநாதன், கோபு, ராஜி இவர்களுடன் ஆரம்பித்தார். இதனால் எங்கள் நட்பு சிறிது நலிவடைந்தது. என்னை எப்படியும் அவர்கள் அணியில் வரவழைக்க முயற்சிகள் நடந்தன. எங்கள் DBNS நாடகங்களுக்கு சுப்புடுவின் விமர்சனம் மிகக்கடுமையாக இருக்கும். உண்மையைச் சொன்னால்,  ஒரு தேதியில் நடக்காத, ஒத்திவைக்கப்பட்ட நாடகத்துக்கு, பார்க்க வராமலே, ‘Well Done Vaithi Flops!‘ என்று தலைப்பிட்டு ஸ்டேட்ஸ்மனில் விமர்சனம் எழுதியிருந்தார். நாடகம் இந்த விமர்சனம் வெளிவந்த அடுத்தவாரம் தான் அரங்கேறியது. எங்கள் நட்பு காரணமாகவோ என்னவோ, ‘Mani’s acting was the only redeeming factor‘ என்று முடித்திருந்தார்.
தில்லி வாழ்க்கையில் தத்தித்தத்தி முன்னேறி, எனக்கென்று ஒரு விலாசம் தேடிக்கொண்டிருந்த நாட்கள். சைக்கிளிலிருந்து ஸ்கூட்டருக்கும், பிறகு காருக்கும் மாறியிருந்தேன். எழுபதுகளின் மத்தியில் ‘சுப்புடு ரிட்டயராகி  விட்டார்‘ என்று நண்பர்கள் சொன்னார்கள். சில மாதங்கள்  கழித்து, அவரது உதவியாளன் சுப்பிரமணியம் [பார்ப்பதற்கு நாகேஷ் மாதிரியே இருப்பான். நாங்களும் அப்படியே கூப்பிடுவோம்.] — ஒருநாள் என்னிடம், ‘ரிட்டயரான பிறகு சுப்புடு கொஞ்சம் சிரமப்படுகிறார். எதிர்பார்த்த இடத்திலிருந்து மறுவேலைக்கு கூப்பிடவில்லை. நீ ஏதாவது செய்ய முடியுமா?‘ என்று கேட்டான். அடுத்தநாளே அவரைப் பார்க்கப்போனேன். அரசாங்க வீட்டைக்காலி பண்ணி  மாளவியா நகரில் வாடகை  வீட்டிலிருந்தார். அவர் இருந்தது Nil Block-ல். போனதும், ‘எல்லா பிளாக்குக்கும் A, B, C, D-னு பேரு வச்சான். கடைசியிலே பார்த்தா, இந்த பிளாக்குக்கு பேரு இல்லே. அதனாலே இதுக்கு Nil Block-னு வச்சுட்டான் கார்ப்பொரேஷனிலிருக்கும் ஒரு மூளையில்லாத பஞ்சாபி‘ என்று  சிரித்துக் கொண்டே, என்னை வரவேற்றார். அடுத்த மாதத்திலிருந்து அவருக்கு என் ஆபீசில் வேலை. மாதம் ரூ.1,500.00 சம்பளம். [1975-ல் இது ஒரு பெரிய தொகை. அதில்மூன்று பவுன் தங்கம் வாங்கலாம்]. அவரைப்பற்றி விரிவாக எடுத்து கூறி, அரசாங்கக் காரியாலயங்களில் நமது வேலைக்கு உதவியாகயிருக்கும். இவர் ஒரு ‘நாடறிந்த பார்ப்பான்‘. இவரைத்தெரியாத தமிழ் அதிகாரிகளே உத்யோக் பவனிலும் நார்த் பிளாக்கிலும் இருக்கமுடியாது’ என்று சொல்லி என் கம்பெனித் தலைவர் வினோதை சம்மதிக்க வைத்தேன்.
ஆறேழு மாதங்கள் நகர்ந்தன. ஒவ்வொரு மாதமும் முதல்தேதி காலைநேரங்களில், எங்கள் ஆபீஸ் சிரிப்பலைகளில் கலகலக்கும். அக்கெளண்டன்ட் அறையில் சுப்புடு சம்பளம் வாங்க வந்திருக்கிறார் என்பதைப்புரிந்துகொள்ளலாம். அதற்கப்புறம் அவர் வருகை அதற்கடுத்த மாதம் முதல் தேதிக்குத்தான்.  எட்டு மாதங்களுக்குப் பிறகு, பொறுமையிழந்த என் பாஸ் என்னை கூப்பிட்டு, ‘உன் நண்பர் P.V. சுப்பிரமணியம் ஏதாவது வேலை செய்கிறாரா? But he draws his salary regularly.  எல்லா மாதமும் முதல்தேதி மட்டும் ஆபீஸ் வருகிறாராம். என்ன விஷயம் பாரு’ என்று சொன்னார். எனக்கு சுப்புடுவிடம் இதைக்கேட்க தயக்கம். ஆனால் வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது வேலை செய்ய வேண்டுமே!
அப்போது லைஸன்ஸ் பர்மிட் கோட்டா ராஜ்யம் தீவிரமாக இருந்தது. என் கம்பெனித் தலைவர், ஜெர்மனியிலிருந்து ஒரு Mercedes Benz கார் வாங்கி,  கப்பல் வழியாக, இந்தியா அனுப்பி விட்டு, அதன்பின் இறக்குமதிக்கான லைஸன்சுக்கு விண்ணப்பித்திருந்தார். பெரிய மனிதர்களுக்கே நேர்வழி தெரியாதல்லவா?  அந்தக் கார் ஏற்றுமதித் தேதிக்கு முன்பாகவே அதன் லைஸன்ஸ் பெற்றிருக்கவேண்டுமென்ற விதியிருந்ததால், பம்பாயில் சுங்கஇலாகா அந்த வண்டியை முடக்கி வைத்திருந்தது. காரின் விலைக்குமேலாக, நான்கு ஐந்துமடங்கு தண்டம் [Penalty]விதித்திருந்தார்கள்.
சுப்புடு நிதி இலாகாவில் வேலைபார்த்தவரென்பதாலும், சுங்கத்துறை அதன்கீழ் வருவதாலும், அவரிடம் இது  பற்றிக்கேட்டேன். அவர் வேலை பார்த்த ஆபீசில் யாராரிடமோ பேசிவிட்டு, தான் பம்பாய் போனால் காரியம் முடியுமென்றார். விமானடிக்கெட் மற்றும் ‘செலவுக்காக‘ ஒரு பெரிய தொகை பெற்றுக்கொண்டு பம்பாய் போனார். ஒருவாரம்,  பத்து நாளாயிற்று. அவரிடமிருந்து எந்தத்தகவலோ, போன் செய்தியோ இல்லை. தலைவர் என்னிடம் கேட்க, என்னிடம் எந்த பதிலும் இல்லை! எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இருவாரங்கள் கழித்து ஆபீஸ் வந்தார். பம்பாயில் பலரைப் பார்த்ததாகவும், சட்டப்படி Benz காரைத் திருப்பி அனுப்புவதைத்தவிர வேறு வழியில்லையென்றும் சொல்லிவிட்டுப்போனார்.
எனக்கு இது ஒரு சவாலாக இருந்தது. அடுத்தவாரம், நானே பம்பாய் போய்,  பார்க்க வேண்டியவர்களைப் ‘பார்த்து‘,  பேச வேண்டியதைப் ‘பேசி‘,  கொடுக்க வேண்டியதைக் ‘கொடுத்து‘, ஒரு டோக்கன் பெனல்டியாக ஒரு சிறு தொகையைக்கட்டிவிட்டு, பென்ஸ் காரை சுங்க இலாகாவிலிருந்து விடுவித்து, தரைவழி தில்லி கொண்டுவர, ஒரு வண்டியோட்டியையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தேன். ஒருவாரத்தில் காரும் அலுங்காமல் நலுங்காமல் தில்லி வந்துசேர்ந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், நான் பார்த்த சுங்க அதிகாரிகள் யாரையும் சுப்புடு சந்திக்கவேயில்லை! ‘இரு வாரங்கள் பம்பாயில் தங்கி, யாரைப் பார்த்தீர்கள், என்ன செய்தீர்கள்?‘ என்று நானும் இதுவரை அவரிடம்  கேட்கவில்லை, எங்கள் நட்புக்காரணமாக!
மற்றொருமுறை மூன்றுதொலைபேசிகளை இடமாற்றம் செய்வதற்காக அவரிடம் சொன்னேன். அவருக்கு ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமே! எழுபதுகளில் அது பிரம்மப்பிரயத்தனம். இந்தத்தலைமுறைக்கு சொன்னால் புரியாது! ஆறுவருடக்காத்திருத்தலுக்குப் பிறகு, தொலை பேசித்தொடர்பு சாங்ஷன் ஆனபிறகும், ஒரு டெலிபோன் கருவி கொண்டுவைக்க இன்னும் ஆறுமாதங்கள் காத்திருந்த காலமது! எழுபதைத் தொட்டவர்களிடம் கேட்டால் தான் தெரியும்.  ‘நாகராஜன் G.M-ஆ இருக்கார். கீழே ராமானுஜம். எனக்கு நன்னாத் தெரியும். இதை நான் முடிச்சுத்தரேன்‘ என்று சொல்லி, ‘செலவு‘க்கு ஆபீசிலிருந்து வாங்கிச்சென்றார். ஆறுமாதமாகியும் ஒன்றும் நடக்காததால், நானே பேசவேண்டியவர்களிடம் பேசி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து காரியத்தை முடித்தேன்.இப்படியே ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு— டிசம்பர் 1976 என நினைவு — என் வீட்டுவிலாசத்துக்கு ஓர் இன்லன்ட் லெட்டர். உள்ளே எனக்குப்பரிச்சயமான சுப்புடுவின் ஆங்கிலம்-தமிழ் கலந்த மணிப்பிரவாளக் கையெழுத்து மூன்று பக்கத்துக்கு. அதில் என்னிடம் இருந்த|   இல்லாத கல்யாண குணங்களை விவரித்திருந்தார். அவையடக்கம் காரணமாக, அவை வேண்டாம்!. ‘இன்று G.T.யில் டிசம்பர் சங்கீத சீஸனுக்காக சென்னை புறப்படுகிறேன். 18 மாதங்கள் என்னைப்போற்றியதற்கு நன்றி. I was a total failure in your Office. என்னிடம்   நீ ஒப்படைத்த இருவேலைகளையுமே என்னால் செய்யமுடியவில்லை. உன்னையும் [Reliance] பாலுவையும் பார்த்தால், எனக்குப்பொறாமையாக இருக்கிறது. எப்படி உங்களால் சாதிக்கமுடிகிறது? இனியும் நான் உன்னிடம் வேலையில் தொடர்ந்தால், I will be a shameless person. நேரில் பார்த்துச்சொல்லிக்கொள்ள கெளரவம் தடுக்கிறது. தயவு செய்து, இதையே என் ராஜிநாமாவாக ஏற்றுக்கொள்ளவும்’. Yours affectionately, சு ப் பு டு [‘சு’வும் ‘டு’வும் மிகப் பெரிதாகவும், ‘ப்பு’ மிகச்சிறியதாகவும்]. அந்தக்கடிதம் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது! அவர் டிசம்பர் கச்சேரி முடிந்து தில்லி திரும்பியதும், ஒன்றுமே நடக்காததுபோல பழகினோம். நட்பு தொடர்ந்தது.
சுப்புடுவின் சகோதரர் திரு. P.V. கிருஷ்ணமூர்த்தி, தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவிலும், பிறகு தூர்தர்ஷனிலும் டைரக்டர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்றவர்.  சங்கீதத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு சுப்புடுவைத்தான் தெரியும்!அவரது பல விமர்சனங்கள் காரம் மிகுந்தவை. ஆனாலும், சிலரைப்பற்றி இனிப்பாகவும் எழுதத் தெரியும். ஆனால் அவரது விமர்சனங்கள் பாரபட்சமற்றவை என்பதை அவரே ஒப்புக் கொள்ள மாட்டார். ‘They are readable. எல்லாரும் படிக்கிறா. விடுடா’ என்பார். M.L.V.யின் மகள் ஸ்ரீவித்யாவின் நடனத்தை பார்த்துவிட்டு, ‘உடம்பு சுற்றளவைக் குறைத்தால், உலகத்தை சுற்றி வரலாம்‘ என்று எழுதியிருந்தார். இதில் M.L.V.க்கும் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும் மிகுந்த வருத்தம். சுப்புடுவுக்கும், செம்மங்குடி சீனிவாசய்யருக்கும் இடையேயிருந்த ‘உறவு‘ எல்லோருக்கும்   தெரிந்ததே! ஸ்ரீஸ்வாதிதிருநாள் மகாராஜாவைப்பற்றிய அவரது விமர்சனங்கள் அத்துமீறலுக்கு ஒரு உதாரணம். என் சிறுவயதில் திருவனந்தபுரத்தில், அவரது சாகித்யங்களைக் கேட்டு வளர்ந்ததால், ஸ்வாதிதிருநாளை சங்கீத மும்மூர்த்திகளுக்கு இணையாக ஆராதிப்பவன். இதைப்பற்றி பலமுறை எனக்கும் அவருக்கும் சண்டை நடக்கும்.  ‘நீர் என்ன நக்கீரனா? என்று கேட்டிருக்கிறேன். வீணை பாலசந்தருக்கு இவர்மேல் சாகும்வரை பகையிருந்தது. இவரது ‘தஞ்சாவூர் வண்டிக்காரனும் சங்கீதமும்‘ பெரிய சர்ச்சையைக்கிளப்பியது. தஞ்சாவூர்க்காரர்கள் தன்னை ‘கொல்ல‘ வந்ததாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். சுப்புடு இருக்குமிடத்தில், சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பஞ்சமேயிருக்காது!
சென்னை டிசம்பர் சங்கீத சீஸனுக்காக வருடம் முழுவதும் ஆவலுடன் காத்திருப்பவன். நான் சென்னை வருவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். தில்லியில் இருக்கும் போதும், முடிந்தவரை, சென்னை டிசம்பர் சீஸனுக்கு வந்துவிடுவேன்.  கர்நாடக இசையில் எனக்கிருக்கும்  ஆர்வம் மிகச்சிலருக்கே தெரியும். இருமுறை சுப்புடு என்னுடன், மாரீஸ் ஹோட்டலில் சுமார் 25 நாட்கள் தங்கியிருந்தார்.  அகாடெமி பக்கத்திலிருப்பதால் மாரீஸ் ஹோட்டல். ‘இதயம் பேசுகிறது‘ மணியன், சென்னை பூராவும் போஸ்டர் ஒட்டி, ‘சு ப் பு டு  வ ரு கி றா ர்!‘ என்று எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருந்த காலம் அது! ஒரே அறையில் தங்கியிருந்தோம். அதிகாலையில் — அவர் குளித்து விட்டு,   நான் குளிக்காமல் — இருவரும் ஆசனம் செய்வோம். சர்வாங்காசனம், சிரஸாசனம்,   ஹலாசனம், வஜ்ராஸனம், சலபாஸனம், குக்குடாசனம், இப்படி 25க்கும் மேலான ஆஸனங்கள். ‘இதெல்லாம் எப்போடா கத்துண்டே?‘ என்று ஆச்சரியப்படுவார். அவருக்குத் தெரியாததை, நான் சொல்லிக்கொடுப்பேன். எனக்கு வராததை அவர் சொல்லிக் கொடுப்பார். எனக்கு போட வராத ஒரே ஆசனம் மயூராஸனம். இருகைகளில் உடம்பை பாலன்ஸ் செய்து, மயில் போல நிற்கவேண்டும். இதை சுப்புடு அநாயாசமாகச்செய்வார். உட்டியானா, நெளலி செய்தாரென்றால், அவர் வயிறு முதுகெலும்பைத் தொடும். அவர் சதை போடாததற்கு இதுவும் ஒரு காரணம்.  வெற்றிலை புகையிலை போட்டுத்துப்பி, வாஷ்பேஸினை ரத்தக்களரியாக ஆக்கி விடுவார்! அதைக்கழுவி விடுவது என் பகுதி நேர வேலை!எந்தெந்த சபாக்களில் முக்கியமான கச்சேரிகளோ, அல்லது யாரார் சுப்புடு விமர்சனத்தை வேண்டி நிற்கிறார்களோ, அங்கெல்லாம் சேர்ந்து போவோம். கிருஷ்ண கானசபா யக்ஞராமன் உட்பட எல்லா சபா செக்ரட்டரிகளுக்கும் என்னை அறிமுகப் படுத்துவார். அடுத்தநாள் அவர்களும் என்னை மறந்து  விடுவார்கள், அவர்களை நானும்! அப்போது அவருக்கு எல்லா சபாச்செயலர்களும் நண்பர்களாக இருந்தார்கள்! பிறகுதான் சில சபாக்கள் அவரது விமர்சனங்களில் கடுப்படைந்து, ‘Dogs and Subbudu are not allowed Inside!‘ என்று வெளியில் போர்டு எழுதி மாட்டினார்கள்!
என்னிடம் அவருக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் முறையாக சங்கீதம் பயிலாமல், ஆரோஹணம் அவரோஹணம் தெரியாமலே, சுமார் நூறு ராகங்களை, கச்சேரியில் பாடகர் ஆலாபனை தொடங்கிய இருநொடிக்குள் சட்டென்று சொல்லிவிடுவதுதான்! ஆலாபனையை ஆரம்பிக்கும் போதே  ‘சந்திரஜோதி‘ என்பேன். சொல்லி வைத்தாற்போல், பாடகர் ‘பாகாயனய்ய‘ என்று தொடங்கி பாடுவார். எனக்குப் பெருமை பிடிபடாது! ‘எப்படிரா டக்குனு சொல்றே?‘. நான் பெரிய மனிதர் தோரணையில், மேலே கையைக்காட்டுவேன். இந்த விஷயத்தை பலரிடம் சொல்லிச்சொல்லி ஆச்சரியப்படுவார். அப்போது அவர் ஒரு குழந்தை மாதிரி!
அந்நாட்களில் எனக்கு தீர்த்தப்பழக்கம் இருந்தது. சிலநாட்களில் ஹோட்டலுக்கு, ‘மேஜர்‘ சுந்தரராஜன், வீணை சிட்டிபாபு, V. கோபாலகிருஷ்ணன் போன்ற நெருங்கிய நண்பர்கள் மாலைவேளைகளில் ‘தாகசாந்தி’க்காக  வருவார்கள். அப்போது தனியாக கச்சேரி கேட்டுவிட்டுத்திரும்பும் சுப்புடு, ரிஸப்ஷனிலிருந்து போனில் அவர்கள் போய் விட்டார்களா என்று தெரிந்துகொண்டபின்னரே, ரூமுக்கு வருவார். இது அவரிடம் எனக்குப்பிடித்த விஷயம். He knows how to give space to others. அதைப்போல அவரைப்பார்க்க வரும் சீனியர் வித்வான்களைமட்டும், என் அனுமதிகேட்டு, ரூமுக்கு வரச்சொல்லுவார். அவர்கள் பெரும்பாலும் என் நண்பர்களாகவும் இருப்பார்கள். கையில் காஸெட்டுடன், முன்னுக்கு வரத்துடிக்கும் இளம்வித்வான் களையும், இளம் நடனமணிகளையும், ஹோட்டல் ரிஸப்ஷனில் உட்காரச்சொல்லிவிட்டு, இவர் கீழிறங்கிப்போய் பேசிவிட்டு வருவார். அவருக்கும் எனக்கும் இருபது வருட இடைவெளியிருந்தும், எனக்குத்தரும் மரியாதை வியப்புக்குரியது!
M.S.-சதாசிவம் தம்பதியருக்கு சுப்புடு மிகவும் நெருங்கியவர். ஒருநாள் பிற்பகல் என்னையும் அழைத்துக்கொண்டு, அவர்கள் வீட்டுக்குப் போனார். சுடச்சுட போண்டாவும் டிகிரி காபியும் M.S. அம்மாவே கொண்டுவந்தார். என்னை அறிமுகப்படுத்தும்போது, ‘இப்போ இவன்தான் என் அன்னதாதா. பேரு மணி. க.நா.சு.வின் மாப்பிள்ளை‘ என்றார். அதற்கு சதாசிவம், ‘ஓ, அவருக்கு எங்களைக்கண்டால் பிடிக்காதே!‘ என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது.
கச்சேரிகள் கேட்டுவிட்டு, இரவு உதவியாளன் [நாகேஷ்] சுப்பிரமணியத்தை வரச்சொல்லி, இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு விமர்சனங்களை டிக்டேட் பண்ணுவார். நானும் படுத்துக்கொண்டே, கேட்டுக்கொண்டிருப்பேன். அதில் காரம் அதிகமாக இருந்தால், வேறு வார்த்தையைப்போட்டு கடுமையைக் குறைக்கச்சொல்வேன். அவர் மறந்த சில விஷயங்களை ஞாபகப்படுத்துவேன். பெரும்பாலும் நான் சொல்வதைக்கேட்பார். சிலவேளைகளில் அவர் பிடிவாதமே வெல்லும்!
சங்கீத சீஸன் முடிந்து நான் தில்லி திரும்பும் நாள். காலையில் காபி சாப்பிடும்போது, ‘மணி! ரூம் உன் பேர்ல இருக்கு. உனக்குத்தான் பில் வேண்டாமே, நீ பில் செட்டில் பண்ணும்போது, ரசீதில் மட்டும் S.K.S. மணிக்குப்பதிலாக, P.V. சுப்பிரமணியம் என்கிறபேரில் வாங்கி என்கிட்டே கொடு. ‘இதயம் பேசுகிறது‘ மணியன் கிட்டேருந்து, அதைக்காட்டி நான் பணம் வாங்கிப்பேன்’ என்று சொல்வார். அதற்கடுத்த வருஷம் அவர் கேட்காமலே, ரசீதை அவர் பெயரில் வாங்கிக்கொடுத்துவிட்டேன்.
சுப்புடுவின் ஜோக்குகள் மிகவும் பிரசித்தம். அதற்காகவே கச்சேரியை மறந்துவிட்டு அவரைச்சுற்றி கான்டீன் அருகே ஒரு கூட்டம் இருக்கும். சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார். முக்கால்வாசி ஒரிஜினலாகவே இருக்கும். சிலசமயம், மற்றவர்கள் சொன்ன, இவர் கேட்ட ஜோக்குகளைத் தனதாக மாற்றி அவிழ்த்துவிடுவார். இது அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அப்படி எனக்கு நடந்த சம்பவத்தை அவர் ‘சுட்ட‘ கதை இப்படி:
பெரியவர் செம்பை வைத்யநாத பாகவதருக்கு என்னிடம் தனிப்பிரியம். அவர் கச்சேரிக்கு தில்லி வரும்  சமயங்களில், அங்குள்ள கோவில்களுக்கு, அழைத்துப் போகச்சொல்வார். பல ஆண்டுகளாக அவருக்கு தில்லியில் பணிவிடை செய்திருக்கிறேன். கால் கூட பிடித்து  விட்டிருக்கிறேன். யாராவது தவறாக தம்புராவைத்தூக்கினால், ‘தண்டி பின்னண்டை இருக்கணம்‘ என்பார். இளம்கலைஞர்களை ஊக்குவிப்பதில் வல்லவர்.
இப்போது உலகப்புகழ் வாய்ந்த வயலின் வித்வான் திரு. எல். சுப்பிரமணியத்தை சிறுவனாக, முதல்தடவை தில்லிக்கு அழைத்துவந்தார். அப்போது பரிச்சயமான L.S. இன்றும் என் இனியநண்பர்.
ஒரு தடவை சம்மர் லீவில், நாகர்கோவிலுக்குப்போகும் வழியில், ஒரு கச்சேரி விஷயமாக செம்பை மாமாவை சென்னையில் சந்தித்தேன். ஜெயவிஜயன்கள் அவரோடு இருந்தசமயம். எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில் என்று அவருக்குத்தெரியும். அவருக்கே உரித்தான பாலக்காட்டுத்தமிழில், ‘நாறோலுக்குத்தானே போறாய்? வறோது ஒரு கொலை மட்டிப்பழம் வாங்கிண்டுவா. உங்க ஊர் மட்டிப்பழம் சாப்ட்டு நாளாச்சு‘ என்றார். இந்த மட்டிப்பழம் நாகர்கோவிலில் மட்டுமே கிடைக்கும். வீட்டில் பழுக்கும்போது, வீடே மணக்கும். சுண்டுவிரல் அளவே இருக்கும். ஒரு குலையில் 30,40பழங்களுக்குமேல் இருக்காது. ஆனால் அதன் ருசி…….மணம்……சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்…..தேவாநுபவம்! பெரியவர் கேட்கிறாரே யென்று வரும்போது மறக்காமல் காயாகப்பார்த்து ஒரு குலை வாங்கிவந்தேன். ரயிலில் பழுத்து விட்டது. மறக்காமல் வாங்கிவந்ததால், செம்பைக்கு ஏக சந்தோஷம்.
அப்போது M.S. கோபாலகிருஷ்ணன் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். ‘ஏ கோபாலகிஷாங், மட்டிப்பழம் எடுத்துக்கோ. நன்னா வெளிக்குப்போகும்.‘ பெரியவர் சொல்கிறாரேயென்று அவர் ஒரு பழத்தைப்பிய்த்து சாப்பிட்டார். அதன் ருசியில் மயங்கி, இன்னொரு பழத்தையும் உரித்து வாயில் போட்டுக்கொண்டார். மூன்றாவது பழத்தை எடுக்க கைவைக்கும்போது, செம்பை உரக்க, ‘ஏய்ய்ய்! வேண்டாம்……அப்பறம்…..பீச்சும்!‘ என்று சொல்லி அவசரமாக பழக்குலையை வீட்டுக்குள்ளே அனுப்பிவிட்டார்!
இந்த சம்பவத்தை அறுபதுகளில் சுப்புடுவுக்கு சொல்லியிருக்கிறேன். சிலவருடங்கள் கழித்து, நான் அவர்கூட இருக்கும்போதே, இந்த சம்பவம் தனக்கு நிகழ்ந்ததாக (மட்டிப்பழத்தை பேயன்பழமாகமாற்றி) இன்னொருவருக்குச்சொன்னார். நான் இடைமறித்து, ‘சுப்புடுசார்! இந்த ஜோக் நான் பத்து வருஷம் முன்னாலே நான் உங்களுக்குச்சொன்னது. இது நகல்’ என்றேன்.’Sorry, மட்டிபழம்னு மறந்துபோச்சு.’ என்று ஒத்துக்கொண்டார்.
1956-லிருந்து, எங்கள் DBNS போட்டு, நான் நடித்த பம்மலின் ‘சபாபதி‘யிலிருந்து எல்லா நாடகங்களும் பார்த்து, தில்லி Statesman-ல் விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். என் நாடகங்களில் அவருக்குப்பிடித்தவை: ‘சோ’வின் ‘கோ வாடிஸ்‘, K.S.ஸ்ரீநிவாசனின் ‘சந்தி‘, இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை‘, ‘போர்வை போர்த்திய உடல்கள்‘ சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்‘,Dr. நரேந்திரனின் வினோத வழக்கு, சி.சு. செல்லப்பாவின் ‘முறைப்பெண்‘ மற்றும் S.M.A. ராமின் ‘எப்போ வருவாரோ?. சுஜாதாவின் நாடகத்துக்கு ‘60 Laughters a Minute‘ என்று தலைப்பிட்டு, ஸ்டேட்ஸ்மனில் நல்ல விமர்சனம் எழுதியிருந்தார். சென்னையில் பூர்ணம் விசுவநாதன் செய்த ஸ்ரீநிவாசன் பாத்திரத்தில் நானும், என் மனைவி ஜமுனாவே, நாடகத்தில் என் மனைவியாகவும் நடித்தோம். ‘உன் நாடகத்தில் NSD முத்திரை இருந்தது. பூர்ணம்  படுதா எல்லாம் போட்டு சபா நாடகமாக்கிட்டான். He was playing for the galleries‘. ஒருவரைப்புகழ வேண்டி வந்தால், மற்றவரைத் தாக்குவதில் தப்பில்லை என்ற கொள்கை அவருக்கு.  பூர்ணத்துக்கும் அவருக்கும் நெடுநாள் பகை. அது இப்போது வேண்டாம்!
2004-ல் என் நாடகவாழ்க்கையில் அறுபது வருடங்கள்பூர்த்தியானதையொட்டி, தில்லி நேஷனல் ஸ்கூல் ஆப்  டிராமா சென்னையில் ஒரு மாத நாடகப்பட்டறை நடத்தி, முடிவில் சதீஷ் ஆளேகர் எழுதிய ‘மஹா நிர்வாணம்‘  நாடகத்தை தமிழில் அரங்கேற்றினோம். சுப்புடுவிடம் ஆசிபெற தொடர்பு கொண்டேன். நான் நடித்த நாடகங்களில் சுப்புடு பார்க்காத நாடகம் இது ஒன்று தான். அவராகவே, ‘அறுபது வருஷம் தொடர்ந்து நடிக்கிறது  ஒரு சாதனைடா! நான் உன்னைப்பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி குமுதத்துக்கு அனுப்பறேன். குமுதத்திலிருந்து சந்துருங்கறவன் போன் பண்ணுவான். நாடகப் புகைப்படங்கள் சிலதை அவனிடம் கொடு. ஜமாய்ச்சிடுவோம்‘ என்று சொன்னார். இதுவரை குமுதத்தில் அவர் சொன்ன கட்டுரையும்  வரவில்லை, திரு. சந்துருவும் தொடர்புகொள்ளவில்லை!
க.நா.சு. இறந்தபிறகு, 1994வாக்கில் கோமல் சுவாமிநாதன் ‘சுபமங்களா‘வுக்காக, சுப்புடுவை பேட்டி கண்டார். அதில் இலக்கிய விமர்சகர் என்றமுறையில் க.நா.சு.வின் பங்களிப்பு என்ன என்பது கேள்வி. அதற்கு எந்த முகாந்தரமுமில்லாமல், ‘அவன் விமர்சகனே இல்லை. விமர்சனத்தைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? சும்மா நாலு புஸ்தகத்தைப்படித்துவிட்டு, பம்மாத்து பண்ணினான். அவனுக்கு ஒன்றுமே தெரியாது‘ என்ற ரீதியில் அவன் இவன் என்று ஒருமையில் விளாசியிருந்தார். க.நா.சு. பேரில் அவருக்கு என்ன கோபம்? தவிர சுப்புடு எப்போது இலக்கிய விமர்சரானார்? வெகுநாட்களுக்குப்பிறகு, அவரை நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தபோது, அவராகவே ‘நான் அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்லலே. தப்பா போட்டிருக்கான்’ என்று மழுப்பினார்.
சிலவருஷங்கள் முன்பு ‘கல்கி‘ கேள்வி-பதிலில் ஒரு கேள்வி: ‘க.நா.சு. – சுப்புடு ஒப்பிடுக‘. அதற்கு பதில்: ‘இலக்கியத்துக்கு அவர், சங்கீதத்துக்கு இவர்‘ என்று போட்டிருந்தார்கள். இதை உரக்கப்படித்த என் மனைவியிடம் நான் சொன்னேன்: ‘நல்லவேளை, உங்கப்பாவை எரிச்சுட்டோம். புதைத்திருந்தால், சமாதியில் நெளிந்திருப்பார்!
அவர் மகன் ஸ்ரீராம், மகள் ராகினி திருமணங்களுக்கும், அவரது சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற அவர் குடும்ப விசேஷங்களுக்கும் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர். அதுவும் தன் நியதிப்படி வாழ்ந்தவர். சொந்தவீடு இல்லையே என்ற குறைதீர, புஷ்ப விஹாரில் ஒரு வீடுகட்டினார். அதன்  பிறகு நிகழ்ச்சிகளுக்கு வருவது குறைந்துவிட்டது. நாடகம் பார்க்க அழைத்தால், ‘வண்டி அனுப்பினால் வரேன்’ என்பார்.
நான் சென்னை வந்தபிறகு, அவர் டிசம்பர் சீஸனுக்கு இங்கே வந்தால், உட்லண்ட்ஸ் ஹோட்டலிலிருந்து, ‘மாமியோட வந்திருக்கேன். வந்து பாத்துட்டுப்போ’ என்று கூப்பிடுவார். பார்த்திபன் தயாரித்து, நடித்த ‘இவன்‘ படத்திலும் தலையைக்காட்டியிருக்கிறார். ஒருதடவை மாமியோடு வந்திருந்தார். பாரதீய வித்யா பவனில் சுப்புடு தம்பதியருக்கு பெரிய பாராட்டுவிழா  நடந்தது. வழக்கம்போல, சிரிக்கச்சிரிக்கப்பேசினார். பெளர்ணமி நெருங்கினால் அவருக்கு திக்குவாய் அதிகமாகும்.  ஆனாலும் பேசுவதை நிறுத்தமாட்டார்.
கடைசிவருடங்களில், உடல் உபாதைகளிலும், முதுமையிலும் மிகவும் சிரமப்பட்டார். ‘என்னால் குடும்பத்தாருக்கும் கஷ்டம். ஆனா அதுக்காக, விஷத்தைக் குடிக்க முடியுமா?’ என்று வருத்தப்பட்டார். சுப்புடுவின் மனைவியார் போற்றுதற்குரியவர். பொறுமைசாலி!
பலாபலன்களை எதிர்பார்த்து சுப்புடுவின் நட்பு அடிக்கடி மாறும் என்கிற குற்றச்சாட்டு அவர் நண்பர்களிடையே உண்டு. ஆனால் என்னிடம் அவர் அப்படி பழகியதில்லை. நிறையவே சண்டைகள் போட்டிருக்கிறோம். அவரிடம் தில்லியில் அவருக்கிருந்த ஆத்மார்த்த நண்பர்கள் பெயர்களைக் கேட்டால், அதில் என் பெயரும் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். அவர்மேல் சிலருக்கிருந்த கோபமோ காழ்ப்புணர்ச்சியோ சத்தியமாக எனக்கு இருந்ததில்லை. அவரது நீண்டநாள் நட்பைப் போற்றிப்பாதுகாக்க, சிலபல சமரசங்களுக்கும் தயாரானவன்.
இந்தக்கட்டுரையை அவரிடம் படிக்கக்கொடுத்தால், சுப்புடு என்ன பதில் சொல்லியிருப்பார் என்று யோசித்துப்பார்க்கிறேன்:
‘கொஞ்சம் harsh-ஆ தான் இருக்கு. You are hitting me below the belt. ஆனா நான் எத்தனைபேர் வயத்தெரிச்சலைக்கொட்டிண்டிருக்கேன்? எனக்கு இதுவும் வேண்டியது தான்! உண்மையிருக்கு. ஆனாலும், உன்னைப்பத்தியே நிறைய எழுதியிருக்கே. குமுதத்தில் கொண்டுபோய்க்கொடு.  நானும் சந்துருவுக்கு போன் பண்றேன்!’
இவர் தான் சுப்புடு!
பாரதி மணி (Bharati Mani)
bharatimani90 at gmail dot com
குமுதம் ‘தீராநதி’ மே 2007-ல் வெளியானது.

0 comments:

Post a Comment