எனது எழுபது ஆண்டு நாடக வாழ்க்கை ஒரு மனத்திருப்தியை தந்ததுபோல் எனக்கு சினிமா அமையவில்லை! சினிமா உலகில் எனக்கு எப்போதும் ஒரு குறையுண்டு. என்னை பலரும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லையோ என்பது தான். எல்லா நடிகருக்கும் இந்தக்குறை இருக்கலாம். ஒரு நாடகத்தை தனியொருவனாக எந்தவித வசனத்தடங்கலுமின்றி, இரண்டரை மணிநேரம் தாங்கிச்செல்பவனுக்கு இங்கே டெளன் பஸ் போல ஒரு நிறுத்தத்தில் ஏறச் சொல்லி அடுத்த ஸ்டாப்பில் இறங்கச் சொல்லிவிடுவார்கள். ‘ஆமாம்….உனக்கு ரஜினி வேஷம் தான் குடுப்பாங்க!’ என்று கேட்பவர்களுக்கு, “என் வயசுக்கு ரஜினி வேஷமெல்லாம் கொடுக்கமாட்டார்களென எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் ‘பாபா’வில் ரஜினி எனக்குக் கொடுத்தது போல் கொஞ்சம் பசையுள்ள பாத்திரங்கள் கொடுத்திருக்கலாமே!’ என்பது தான் என் பதில்! என் நண்பரொருவர் சொல்வார்: “ஸார்! பாபா படம் மட்டும் படையப்பா மாதிரி ஓடியிருந்தா, உங்க ரேஞ்சே இன்னிக்கு வேறெ மாதிரி இருந்திருக்கும்!”
ஒரு காரணம் என் வாழ்க்கை தில்லியிலேயே முடிந்து சென்னை வரும்போது அறுபதுக்குமேல் ஆகிவிட்டது. இங்கு யாருக்கும் என்னைத்தெரியாது. என்னுடைய முதல் படமே லண்டன் BBC Channel-4 தயாரித்த, அருந்ததி ராய் வசனத்தில், நஸ்ருதீன் ஷா, ரோஷன் சேட், லீலா நாயுடு, ரக்பீர் யாதவ் போன்றவர்களுடன் நடித்த ‘எலக்ட்ரிக் மூன்’. தேசிய விருது பெற்றது.
Electric Moon படப்பிடிப்பில் ரோஷன் சேத்,ஆங்கில மேக்கப்மேன், லீலா நாயுடு மற்றும் திரு. பாரதி மணி
நான் நடித்த பத்துப்படங்களுக்கு மேல் தேசியவிருதுகள் பெற்றன. லெனின் இயக்கிய ‘ஊருக்கு நூறுபேர்’, மொட்டுக்கா, றெக்கை, அம்ஷன் குமாரின் ஒருத்தி, ஜெயபாரதியின் ‘நண்பா….நண்பா!’ போன்ற படங்களை உங்களில் ஒருவர் கூட தியேட்டரில் பார்த்திருக்கமுடியாது.
அசட்டுத்தனமான ஹீரோ/ஹீரோயின் தாத்தா, ரகுவரன்/நாசருக்கு அப்பா இப்படித்தான் எனக்கு சினிமா அமைந்தது! ரெண்டு சீனில் மட்டும் தலை நரைத்த ஒரு செட் ப்ராபர்ட்டி மாதிரி வந்துபோவேன்! ‘கழுதை விட்டை கைநிறைய’ என்பது போல் நாற்பது படங்களுக்கு மேல் ‘தலையை’க் காட்டியிருக்கிறேன்! பல படங்களை சின்னத்திரையில் பார்க்கும்போது, ‘என்ன எழவுக்குடா இதிலே தலையைக் குடுத்தே?’ என்று என்னை நானே நொந்துகொண்டிருக்கிறேன்.
அதனால் கடந்த மூன்று வருடங்களாக எந்தப்படங்களையும் ஒத்துக் கொள்வதில்லையென்றொரு முடிவெடுத்தேன். அந்த ஆண்டவன் என்னை கக்கத்தில் ஒரு மஞ்சள் பையோடு சினிமாக்கம்பெனி கம்பெனியாக ஏறியிறங்கும் துர்ப்பாக்ய நிலையில் வைக்கவில்லையென்ற மனசமாதானம் இருக்கிறது. Lack of good cinema opportunities did not bother me at all!
ஆனால் அப்போது தான் வாரத்துக்கு நாலைந்துமுறை தொலைபேசியில் :அய்யா! படம் ஒண்ணு பண்றோம்….ஹீரோவுக்கு தாத்தாவா ஒரு நல்ல காரெக்டர்…ரெண்டுநாள் வேலை தான்!’…..ஸார்! எங்க படத்திலே ஒரு ஜட்ஜ் ரோல் நீங்க செய்ய முடியுமா?…….தமிழ்நாட்டு முதலமைச்சர் ரோல்…நல்ல ஸ்கோப் இருக்கு!’ என்றெல்லாம் வரும் அழைப்புகளை தாட்சண்யமில்லாமல் “ஸார்! நான் இப்பொ தில்லியிலே இருக்கேன்!…….நீங்க சொல்ற டேட்லே தில்லி போயிருவேன்!….. அடுத்தபடம் நிச்சயமா பண்றேன். தப்பா எடுத்துக்க கூடாது!’ என்று சொல்லி போனை வைத்துவிடுவேன்.
அப்படி போனை வைத்த படங்களில் ஒன்று தான் செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’. என் பதிலில் திருப்தியடையாத டைரக்டர் உடனே கார் அனுப்பி அலுவலகத்துக்கு வரவழைத்து என்னை சம்மதிக்கச்செய்தார்.
அப்படி நான் மறுத்த படம் தான் சூர்யாவின் மூவேந்தர் பிலிம்ஸ் தயாரித்து ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் (இன்னும் பெயர் வைக்காத) படம். இது மஞ்சு வாரியர் நடித்து மலையாளத்தில் சக்கைபோடு போட்ட “How Old Are You?” படத்தின் தமிழாக்கம்.
படத்தின் உதவி இயக்குநர் நான் மறுத்தவுடன், ‘ஸார்! நான் நீங்க நடிச்ச லெனின் படங்கள், ஒருத்தி, நண்பா…நண்பா எல்லாம் பாத்திருக்கேன். இது சின்ன ரோல் தான்….ஆனா நீங்க செய்யணும்னு எனக்கு ஆசை!” என்றவுடன் சபலம் விடவில்லை… ஒத்துக்கொண்டேன். ஒருநாளில் முடியவேண்டிய சீனை டைரக்டர் ரோஷன் ஆண்ட்ரூஸ் என் பாத்திரத்தை விரிவாக்கம் செய்து இரண்டு நாள் எடுத்தார். கொடுத்த “பொற்கிழி” பெரிதாகவே இருந்தது!
முதல்நாள் செட்டில் பார்த்த ஜோதிகா, ஓடிவந்து காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரை 2001-ல் ஆஸ்கார் பிலிம்ஸ் ‘பூவெல்லாம் உன் வாசம்!’ படத்தில் சந்தித்தது. என்னையும் ஞாபகம் வைத்திருந்து தானே வந்து பழகியது மனதுக்கு பிடித்திருந்தது! இந்தப்படமும்!
இப்படி எத்தனை நல்ல சந்தர்ப்பங்களை இதுவரை கோட்டை விட்டிருக்கிறேனோ……தெரியவில்லை!
0 comments:
Post a Comment