Friday, January 22, 2016

என் ஐம்பது வருட நண்பர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு எண்பது வயதாகிறது. சென்ற ஜூலை மாதம் 9ம் தேதி உயிர்மை பதிப்பகமும் மணற்கேணி யும் இணைந்து நடத்திய கருத்தரங்கிலும், அடுத்தநாள் TAG Centre-ல் இ.பா. குடும் பத்தினர் சேர்ந்து கொண்டாடிய விழாவிலும் தன் நீண்ட, பயனுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், இளமைத் துடிப்புடனும் தன் நியதிப்படி வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைப் பார்க்க முடிந்தது. இ.பா. நண்பர்களிடம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பழகுவார். அவருக்கு யாரும் விரோதிகளில்லை. ‘இலக்கிய அரசியல்’ இல்லாதவர். எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். தமிழக அரசின் கலைமாமணி விருதை வேண்டாமென்று மறுத்தவர். தனது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி தயங்காமல் சொல்பவர்.  அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் முகுந்த் சிரமப்பட்டு வாங்கிக் கொடுத்த ‘பச்சை அட்டை’யை (American Green Card)  அங்கு வசிக்க தனக்குப் பிடிக்கவில்லையென்று அங்கேயே வீசி எறிந்துவிட்டு, ஆற்காட்டாரின் மின்வெட்டுகளைச் சந்திக்க நிரந்தரமாக சென்னை வந்தவர். நான் சென்னை வந்தபிறகு, மீண்டும் எங்கள் நட்பு நெருக்கமானது. வாரத்துக்கொருமுறையாவது அவரை நானோ, என்னை அவரோ தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தால், பேசிக்கொண்டேயிருப்போம். என் வீட்டிலேயோ, அவர் வீட்டிலேயோ யாராவது வந்து அழைப்புமணி அடிப்பதுவரை அது தொடரும். ‘யாரோ வாசல்லே வந்திருக்கா. அப்புறமா பேசு வோம்’ என்பதுதான் எங்கள் கடைசி வாக்கியமாக இருக்கும்! பேசின செல்போனில் Call Duration 48 minutes 22 secondsஎன்று காட்டும்! எங்களுக்கும் பொழுது போகவேண்டாமா?
சில வருடங்களுக்குமுன் தன் மனைவி இந்திராவை இழந்த பார்த்தசாரதி, தன்எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தை மனைவியில்லாமல் கொண்டாட விரும்பவில்லை. மனைவியின் மறைவு, இவரைப் பெரிய அளவில் பாதித்தது. திருமதி இந்திரா இ.பா.வை ஒரு குழந்தையைப்போல் சீராட்டி, குடும்ப பாரத்திலிருந்து இவருக்கு விடுதலையளித்து முற்றிலும் இலக்கியப் பணிக்காக இவரைத் தமிழுலகத்துக்குத் தந்தார். அவர் இருந்ததுவரை, எல்லா குடும்பக் கவலைகளையும் அவரே சுமந்தார். மாதச் சம்பளத்தை இந்திராவிடம் கொடுத்துவிட்டு இவர் கவலையே இல்லாமல் இருப்பார். இ.பா.விடம் ‘இப்போ முகுந்த் எத்தனாவது படிக்கிறான்?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்துத்தான் பதில் சொல்வார்! பார்த்தசாரதி கொடுத்து வைத்தவர். எல்லோருக்கும் இம்மாதிரி மனைவிகள் அமைவதில்லை. இப்போதும் அவருக்கு அரிசி என்ன விலை, LPG சிலிண்டர் என்ன விலையென்று கேட்டால் தெரியாது! தன் அக்கா மகளையே மணந்தார். இந்திரா தன் கணவரின் காரியம் யாவினும் கைகொடுத்த அதிசயப் பெண்மணி. குழந்தைகள் பிறந்து சம்சாரம் ஆனபின்பும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து Master of Music பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் இருந்தபோது நாடகப் பள்ளி போட்ட ஒரு நாடகத்துக்கு இசையமைத் திருந்தார். இந்திராவை நான் கடைசியாகப் பார்த்தது சென்னையில் அவர் காலில் அடிபட்டு பிளாஸ்டரோடு படுக்கையில் இருந்த போது. மூன்று மணிநேரம் சுவாரஸ்யமாகப் பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அவரது அபார சங்கீத ஞானம்தான் பேத்தி அபூர்வாவிடம் இப்போது பரிமளிக்கிறது. தன் மனைவி இந்திராவின் இழப்பிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. இ.பா.வும் சங்கீதத்தை விரும்பிக்கேட்பார். அவரால் எல்லா முக்கிய ராகங்களையும் அடை யாளம் காணமுடியும். நான் சிலகாலம் செயலராக இருந்த தில்லி கர்நாடக சங்கீத சபாவின் எல்லா கச்சேரிகளிலும் இ.பா.வைப் பார்க்கலாம்.
ஆர். பார்த்தசாரதி, எழுத்தாளர் ஆன போது தன் மனைவியின் பெயரையும் சேர்த்துக்கொண்டார். அப்போது அது புது ட்ரெண்டை உருவாக்கியது. இவருக்குப் பின்னால் வந்த எழுத்தாளர்கள் பலர் தன் மனைவியின் பெயரையும் ஒட்டிக்கொண் டார்கள், சுஜாதா உட்பட. அப்போது சென்னை வந்தால், பல நண்பர்கள் ‘ஓ, இந்திரா பார்த்தசாரதி பொம்மனாட்டி இல்லையா?’என்று வியந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்து இவருக்கு Mrs.Indira Parthasarathy என்று பல அழைப்புகள் வந்திருக்கின்றன! இவர் சகோதரர் ஆர். வெங்கடாச்சாரி தன் மகனுடன் இப்போது பெங்களூரில் வசிக்கிறார். இவரும் தில்லியில் Times of India Group வெளியிடும் The Economic Times பத்திரிகையில் Chief News Editor ஆக பணிபுரிந்து ரிட்டயரானவர். எனக்குப் பலவிதத்திலும் உதவி செய்திருக்கிறார். தில்லி வரும் என் வெளி நாட்டு வியாபார நண்பர்களைக் குறித்து நானே எழுதிக்கொடுக்கும் நேர்காணல் களையும் புகைப்படங்களையும் தானே பேட்டி கண்டதாக அடுத்த நாள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் எகனாமிக் டைம்ஸிலும் பெரிய புகைப்படங்களுடன் மூன்றாம் பக்கத்தில் வெளியிடுவார். தங்கள் புகைப் படங்களையும் கட்டுரைகளையும்  பத்திரிகையில் பார்க்கும் ஜெர்மானிய நண்பர்கள் இந்தியாவில் அன்று அதுதான் முக்கியச் செய்தி என்று நினைத்து சந்தோஷப்படு வார்கள். என் ஆபீசில் என் புகழ் ராக்கெட் வேகத்தில் உயரே பறக்கும். இப்போதும் பெங்களூர் போனால் அவரைச் சந்திப்பதுண்டு.
இந்திரா பார்த்தசாரதியும் நானும் தில்லிக்குப் போனது ஒரே வருடம். 1955. அவர் தில்லிMadrasi Education Association (MEA) –  பிற்காலத்தில் தில்லிவாசிகள் அதை Money Eating Association என்று கேலி செய்வோம் – நடத்திவந்த லோதி ரோடு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். லோதி ரோடில் ஒரு அறையில் பிரும்மச்சாரியாக வாசம். சிதம்பரம் மெஸ்ஸில் இருவேளைச் சாப்பாடு. அங்கே ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. பார்த்தசாரதி பார்ப்பதற்கு இப்போதிருப்பதைவிட இன்னும் அழகாக இருப்பார்! (புகைப்படத்தில் நீங்களே பார்க்கலாம்). அவருக்கு அந்தப் பள்ளியில் சக ஆசிரியர் லக்ஷ்மணன். இந்த ‘ராமருக்கும்’ அவர் லட்சுமணனாகவே எப்போதும் இவ ருடனேயே இருப்பார். ‘அந்த’ லட்சு மணனைப் போலவே, அவருக்கு ‘இந்த’ ராமரிடம் ஒரு பக்தி. எந்த வேலை சொன்னாலும், இன்முகத்தோடே செய்வார். இ.பா. வின் வீட்டில் ஒரு அங்கமாகவே மாறியிருந்தார். இவர் மனைவி இந்திராவுக்கு ஒரு தம்பி. குழந்தைகள் முகுந்த், பத்மா, மாதவிக்கு நல்ல மாமா. இவருடன் எப்போதுமே இருந்தாலும், இலக்கியத்துக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கூடக்கிடையாது! நல்ல ஆத்மா. இப்போது எங்கிருக்கிறாரோ? இந்த வருட ஆரம்பத்தில் இந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் தில்லியில் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை தாங்க தன்னை நேரில் வந்து அழைத்ததாகவும், கால்வலி, முதுமை காரணமாகத் தன் இயலாமையைத் தெரிவித்ததாகவும் சாரதி என்னிடம் சொன்னார். ‘என்ன சிரமம் இருந்தாலும் போயுட்டு வாருமைய்யா! உம்மிடம் படித்த பழைய மாணவர்களை ஒருசேரப் பார்ப்பதும், அவர் கள் ஒவ்வொருவராக உங்கள் காலைத் தொட்டு வணங்கி, ‘சார்! நான் இன்ன வருடம் ஒங்ககிட்டெ படிச்ச மாணவன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதும் எல்லோருக்கும் கிட்டாத பாக்யம் ஐயா! எழுத்தறிவித்தவன் இறைவனல்லவா?’ என்று அவருக்கு நான் ‘உபதேசம்’ செய்தேன்!
1956-ல் எங்கள் தட்சிண பாரத நாடக சபா தொடங்கியவுடன், மாலை வேளை களில் நாடக ஒத்திகைக்காக லோதி ரோடு தமிழ்ப் பள்ளிக்குப் போவோம். பள்ளி நிர்வாகம் எங்கள் நாடக ஒத்திகைக்கு ஓரிரு வகுப்பு அறைகளை இலவசமாகத் தந்துதவியது. அப்போது பள்ளி வேலைகளை முடித்துவிட்டு, ராம லட்சுமணர்களாக இ.பா.வும் லக்ஷ்மணனும் வீட்டுக்குப் போகும் நேரம். ‘எப்போது நாடகம்? எங்கே மேடையேற்றம்?’ போன்ற விசாரணைகள். நான் ஆனந்தவிகடன், கல்கியில் அவரது முத்திரைக் கதைகளைப் படித்துவிட்டு, அவரைச் சந்திக்கும்போது பாராட்டுவேன். அதன்பிறகு தான் அவரது ‘தந்திர பூமி’ கணையாழியில் வெளிவந்தது என ஞாபகம். எங்கள் மனதில் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டிருந்தார். அவரிடம் பேசும்போது நாங்கள் காட்டும் மரியாதை அதிகமாயிற்று.
எங்களைப் போன்ற தில்லிவாசிக ளுக்கு அவர் கதை, நாவல்களில் தமிழ் நாட்டு வாசகர்களை விட ஆர்வம் அதிக மாக இருந்தது. காரணம், அப்போதிருந்த பல தில்லிப் பிரமுகர்கள் அவர் நாவல் களில் கதைமாந்தராக உலா வருவார்கள்.  அவர் கதைகளில் முக்கிய விஞ்ஞானியும் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன், பூதலிங்கம் ICS,  அவர் மனைவி ‘கிருத்திகா’, சக்ரவர்த்தி ஐயங்கார், சி.எஸ். ராமச்சந்திரன் ICS, கர்நாடக சங்கீதசபா தலைவர் ஏ.வி. வெங்கடசுப்பன் (சிலர் அவரை ‘ஆளை விடு வெங்கடசுப்பன் என்று கேலி செய்வார்கள்), National Cultural Organisation (NCO)  தலைவர் என்.பி. சேஷாத்ரி – இவரைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியே தீரவேண் டும் – இவர்களெல்லாம் இவரது படைப்புகளில் தங்கள் குண இயல்புகளுடன் வந்து போவது தில்லியில் வாழ்ந்த எங்களுக்கு ஒரு போனஸ் மகிழ்ச்சி. ஒரு கதையில், ஒரு ICS அதிகாரியின் மனைவி, வெளி நாடு போகும் சின்ன அதிகாரிகளிடம் தங்களுக்குத் தேவையான, ஆனால் இந்தியாவில் அப்போது கிடைக்காத Bras, Sanitary Napkins போன்றவைகளின் அளவு கொடுத்து வாங்கி வரச்சொல்வார். அவர் யாரென்பது தில்லிவாசிகளுக்குத்தான் தெரியும். இன்னொரு நாவலில் – ‘வேஷங்கள்’ என்று நினைக்கிறேன்- ஒரு சபாவின் தலைவர் எல்லா சங்கீத வித்வான்களையும், அகால வேளையில் வீட்டுக்குக் கூட்டி வந்து, ராக்கூத்தடித்து, கட்டிய மனைவியை ஒரு புழு போல் நினைத்து வேலைவாங்கும் படலம் விவரிக்கப்படும். அந்த முகம் யாருடையதென்று எங்களுக்குத்தான் தெரியும். வெளியூர் வாசகர்களுக்கு அவர் ஒரு பாத்திரம் மட்டுமே. இதைப்பற்றி இ.பா. விடம் கேட்டால், சிரித்துக்கொண்டே, ‘நல்லகாலம், அவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வெகுதூரம். என் கதைகளை அவர்கள் படிப்பதே இல்லை!’ என்று சொல்வார்! அப்படியும் இவர் தன்னைப்பற்றி எழுதியதைப் படித்துக் கோபம் கொண்ட  ஒரு சபா தலைவர் இவரைப் பழிக்குப் பழி வாங்க நினைத்து, எமெர்ஜென்ஸி காலத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்திரா காந்தியைப் பற்றி அவதூறாக எழுதியதாக போலீசில் புகார் கொடுத்தார். எமெர்ஜென்ஸியல்லவா? இ.பா. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக நேர்ந்தது. நல்ல காலமாக இவரிடம் படித்த ஒரு IAS அதிகாரி சரியான சமயத்தில் தலையிட்டு, கொடுத்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று நிரூபித்ததால் வழக்கு தள்ளுபடியாயிற்று! இ.பா. கொஞ்சமும் கவலைப்படாமல், ‘நான் ஜெயிலுக்குப் போனதேயில்லை. கொஞ்சநாள் சௌக்யமா இருந்துட்டு வரலாம்னு பாத்தா, அதுமட்டும் நடக்கலே! எமெர்ஜென்ஸிலே உள்ளே போனா இன்னும் விசேஷம்!’  என்று சிரிக்காமல் சொன்னார்.
இதற்கு நேர்மாறான இன்னொரு நிகழ்ச்சி. இ.பா. கல்கியில் ‘ஹெலிகாப்டர்கள் இறங்கிவிட்டன’ என்ற ஒரு தொடர் நாவல் எழுதிவந்தார். அதில் வரும் கதா நாயகன் மணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தை. தில்லி அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர். அவருக்கு ஒரு நாடக நடிகையுடன் இருந்த தொடர்பு, அதன் விளைவாக தீக்குளிக்கும் மனைவி, அவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள், இப்படிப்போகும். ஆரம்பமான இதழிலேயே இது யாரைப்பற்றிய கதை என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. இந்தக் கதையின் உண்மை ‘நாயகன்’ கோபப்படுவதற்குப் பதிலாக, வாராவாரம் கல்கி பத்திரிகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினார். இவர் இ.பா.வுக்கும் எனக்கும் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கரோல் பாக் போய், பத்திரிகைக் கட்டு வந்து பிரித்ததும், முதல் பிரதியை வாங்கி அங்கேயே படித்துவிட்டு, எங்கெங்கே உண்மையிலிருந்து கதை மாறுபடுகிறது என்பதைப் பற்றி என்னிடம் சுவாரஸ்யத்துடன் விவாதிப்பார். தன் கதையைப் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தொடராக எழுதுவதில் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!  இ.பா. ஒரு தடவை என்னிடம், ‘மணி! எனது ‘தந்திர பூமி’யில் வரும் கதாநாயகன் உங்களை மாதிரிதான்.  நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லியிருக்கிறார்.  But I don’t think he really meant it!
தமிழ்ப் பள்ளிக்குப் பிறகு இ.பா. தில்லி தயாள் சிங் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பிறகு சில வருடங்கள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவில் ப்ரொபஸராக ஆனார். தமிழ் படிக்க வருட ஆரம்பத்தில் பத்து மாணவர்கள் பரீட்சை எழுதும்போது நாலுபேர் கூட தேறமாட்டார்கள்.  ஒரு முறை ஆர்வமாகத் தமிழ் படிக்க வந்த பஞ்சாபி மாணவனிடம் இ.பா. சந்தோஷமாக, ‘உன் தமிழ்ப்பற்று எனக்குப் பிடித்திருக்கிறது. உன்னைத் தமிழ் படிக்கத் தூண்டியது எது?’ என்று கேட்டதற்கு அந்த பஞ்சாபி, ‘ஸார், நான் ஒரு தமிழ்ப்பெண்ணைக் காதலிக்கிறேன்!’ என்று பதிலளித்தானாம். தமிழ்ப் பிரிவின் தலைவர் டாக்டர் ஆறுமுகம் சரியான அக்மார்க் முனைவர். நச்சினார்க்கினியாருக்குப் பிறகு தமிழில் கவிகளே இல்லை யென்று சத்தியம் செய்வார். இ.பா.வின்  ஒரு கதையைக்கூட அவர் படித்ததில்லை. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள்.  பிறகு வந்த முனைவர் சாலை இளந்திரையன் இவருக்கு சில நெருக்கடிகளை உரு வாக்கியவர். அதன்பிறகு ஐந்தாண்டுகள் வார்ஸா வாசம். தில்லி திரும்பியவுடன் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் இயக்குநர் பதவி.
இ.பா. கதைகள்/நாவல்களில் உரை யாடல்கள் முக்கியப் பங்கு வகிக்கும். கதை களின் போக்கை, விவரங்களை விட வசனங்களே மேலே எடுத்துச்செல்லும். உரையாடல்களில் அவருக்கே உரித்தான பகடியும் Black Humour கலந்த நகைச் சுவையும் அடிநாதமாக இருக்கும். நாடகத் துக்கு இவையெல்லாம் இன்றியமையாதவை. இவர் கதைகளையும், நாவல்களையும் படித்த எனக்கு ‘இவர் ஒரு நல்ல நாடகத்தை உருவாக்கித் தரமுடியும்’ என்ற நம்பிக்கையிருந்தது. அதனால் அவரைப் பார்க்கும்போதெல்லாம், ‘சாரதி சார், எங்களுக்கு ஒரு நாடகம் எழுதித் தாங்களேன்!’ என்று கெஞ்ச ஆரம்பித்தேன். பிறகு தொடர்ந்த என் நச்சரிப்புகள் அவருக்கு ஒரு தலைவலியாக மாறியிருக்கக்கூடும். சில இடங்களில் அவர் என்னைத் தவிர்ப்பதாக உணர ஆரம்பித்தேன். பிறகு அவரை அதிகம் படுத்துவதில்லை!
1969-ல் ஒரு நாள். இ.பா. போனில் தொடர்பு கொண்டு, ‘நீங்க கேட்டமாதிரி, ஒரு நாடகம் எழுதியிருக்கேன். படிச்சுப் பாத்து, பிடிச்சுதுன்னா போடுங்க. இல்லே திருப்பியனுப்பிடுங்க’ என்று சொன்னார். ஆபீசை கட் பண்ணிவிட்டு உடனே டிபன்ஸ் காலனியில் இருந்த அவர் வீட்டுக்குப் போனேன். ‘மழை’ என்ற தலைப்பிட்ட ஒரு நாடகப் பிரதியைக் கொடுத்தார்.  அதை முதல் தடவையாகப் படிக்கும்போது, தமிழ் நாடகங்களில் அதுவரை கிடைக்காத, வங்காள, மராட்டிய நாடகங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும் மூன்றாம் நிலை உன்னதப் பரிமாணத்தை உணர்ந்தேன். தமிழில் இப்படி ஒரு நாடகமா? என்று வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தட்சிண பாரத நாடக சபாவின் மற்ற அங்கத்தினர்களிடம் கலந்தாலோசிக்காமலே, உடனே மறுபடியும் அவர் வீட்டுக்குப்போய், நாடகத்தை வெகுவாகப் பாராட்டி, எங்கள் அடுத்த நாடகம் இதுவாகத்தான் இருக்கும் என்று உறுதியளித்துவிட்டு வந்தேன்.   நாலே பாத்திரங்களும் மூன்றே காட்சிகளும் கொண்ட ‘மழை’ நாடகத்தில் வரும் முக்கிய பாத்திரம் நிர்மலா, தற்காலப் பெண்ணியத்தில் ஊறியவள். நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுடன் அவள், தன் தந்தையைப் பார்க்கவரும் ஜேம்ஸ் என்ற டாக்டரிடம், ‘Doctor! Are all the Saints impotent?’ என்றும், இன்னொரு இடத்தில், ‘டாக்டர்! I need a man…. அது நீங்களாகவே இருக்கலாம்!’  போன்ற வசனங்களை அனாயாசமாக உதிர்ப்பாள். தில்லியில் நாடகங்களில் நடிக்க தொழில்முறை நடிகைகள் கிடையாது. அரசாங்க அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றும் IASஆபீசர்களின் மனைவி, மகள் போன்றவர்களுக்கு நாடகத்தில் நடிக்க விருப்பமும் திறனும் இருந்தால் அவர்களைத் தேர்ந் தெடுத்து பயிற்சி கொடுப்போம். ‘மழை’ நாடகத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையின் தந்தை என்னை போனில் கூப்பிட்டு, ‘மணி! இந்த நாடகத்தில வர்ற சில டயலாக் ரொம்ப ஷார்ப்பா இருக்கு. என் டாட்டர் அதை மேடையில் பேசக் கூச்சப்படறா. அதைக் குறைக்க அல்லது எடுக்க முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஸார், அந்த வசனங்களை எடுத்து விட்டால் இது நாடகமே இல்லை. இந்த நாடகத்தின் உயிரே அதன் வசனங்கள் தான்!’ என்று சொல்லி போனை வைத்தேன். பிறகு இ.பா.விடம், ‘சார், உங்க நாடகத்தைப் போட எங்களுக்கு சம்மதம். ஆனால் ஒரு கண்டிஷன். நாடகத்துக்கு ஹீரோயினையும் நீங்க தான் தேடித்தரணும்’ என்று வேண்டிக் கொண்டேன்.
இரு நாட்களுக்குப் பிறகு, ‘மணி! எழுத் தாளர் க.நா.சு. டிபன்ஸ் காலனிலே என் வீட்டுக்குப் பக்கத்திலெ இருக்கார். அவர் மகள் ஜமுனா Interior Designing படித்துக் கொண்டிருக்கும் மாணவி. அவளிடம் கேட்டேன். நடிக்க ஒப்புக்கொண்டாள். நீங்க போய்ப்பாருங்க’ என்று சொன்னார். 1970-ல் ஜமுனா நிர்மலாவாகவும், நான் ரகுவாகவும் இ.பா.வின் ‘மழை’  நாடகத்தில் நடித்ததும், அந்த நாடகம் அனைத்திந்திய அனைத்துமொழி நாடகப்போட்டியில், நான்கு வங்காள, மூன்று மராட்டிய நாட கங்களுக்கிடையே ஒரே தமிழ் நாடகமாகப் போட்டியிட்டு அதில் ‘மழை’ மிகச்சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பழைய கதை. ‘மழை’ நாடகத்தில் நடிக்கும்போது எங்களுக்கிடையே காதல் அரும்பி, துளிர்த்து, மலராகி, நாங்கள் திருமணம் செய்துகொண்டது உங்களில் சிலருக்குத் தெரியாத கதை!  எங்கள் திருமணத்துக்கு இந்திராவும், சாரதியும்தான் முக்கிய காரணிகள்.
இ.பா. ஆஸ்திரேலியா போயிருந்தபோது, அங்கே ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ.வுடன் ஒரு நேர்காணல். அதில் இ.பா. ‘நான் ‘மழை’ நாடகம் எழுத முக்கிய காரணம் எஸ்.கே.எஸ். மணி. ஆனால் மணியின் திருமணத்துக்கு நான் மட்டுமே காரணம். தமிழ்நாட்டில் ‘பலஸ்ருதி’யென்று சொல்வார்கள். ஒரு ஸ்லோகத்தைச் சொன்னால், அதற்கு இன்ன பலன் என்று உண்டு. தமிழ்நாட்டில் கல்யாணமாகாத பெண்களுக்கு நான் ‘மழை’ நாடகத்தைப் பரிந் துரைக்கிறேன். 1970-ல் தில்லியில் முதன் முறையாக இந்த நாடகத்தில் நடித்த மணிக்கும் ஜமுனாவுக்கும் உடனே திருமணம் நடந்தது. சில வருடங்களுக்குப் பிறகு, லண்டனில் ‘மழை’ நாடகத்தில் நடித்த பாலேந்திரனுக்கும், நிர்மலாவாக நடித்த பெண்ணுக்கும் திருமணமாயிற்று. அமெரிக்காவிலும் இதே நாடகத்தில் நடித்த இரு வரும் தம்பதிகளாயினர். இதனால் அறியப் படுவது யாதெனில் கல்யாணமாகாத பெண் கள் ஒரு தடவை ‘மழை’ நாடகத்தில் நடித்தால், அவர்களுக்கு விவாகப்ராப்தி உடனே சித்திக்கும்!’ என்று சொல்லியிருந்தார்.
இந்தியாவில் சாகித்ய அகாடெமி விருதும், சங்கீத நாடக அகாடெமி விருதும் பெற்ற ஒரே எழுத்தாளர் இ.பா. தான். அவர் கையெழுத்து கோழி கிண்டினது போல் படிக்க சிரமமாக இருக்கும். சில சமயங்களில், ‘மணி! என்ன எழுதியிருக்கேன், படிச்சு சொல்லுங்க’ என்று என்னிடம் காட்டுவார். அப்போது நான், ‘சார், நீங்க எழுதியிருப்பது ஏதோ மாடர்ன் ஆர்ட் மாதிரி இருக்கு.  இதை லலித் கலா அகாடெமிக்கு அனுப்பினால், இந்த வருஷம் விருது உங்களுக்குத்தான்! இந்தியாவிலேயே மூன்று அகாடெமி விருதுகளும் பெற்றவர் இ.பா. என்ற பெருமை எங்களுக்கெல்லாம் கிடைக்கும்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். இ.பா. எழுதிய ‘ராமானுஜர்’ நாடகத்துக்கு கே.கே. பிர்லா ட்ரஸ்ட் உருவாக்கிய  ‘சரஸ்வதி ஸ்ம்மான்’ விருது கிடைத்தது. இவ்வருடம் அவருக்குக் கிடைத்த ‘பத்மஸ்ரீ‘ விருதைப் பற்றி யாராவது குறிப்பிட்டால், கூச்சத்துடன் நெளிவார்!
இ.பா.விடம் என்னை ஈர்த்த இன்னொரு விஷயம், அவருக்கு ஆங்கில இலக்கியத் தில் இருக்கும் ஆளுமை. அவர் ஆங்கிலத்தில் பேசினால், மிகச்சரியான வார்த்தைகள் அங்கங்கே வந்து விழும். பலர் பேசுவது போல ‘I cannot be able to…’ ரகமாக இருக்காது. இப்போதிருக்கும் தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்தைச் சரியாகக் கையாளும் புலமை அவருக்குண்டு. சுஜாதாவுக்கும் அது இருந்தது. எழுத்தாளர்களில் எத்தனை பேர் இன்றுBritish Council- க்கும்,  American Library-க்கும் போய் தங்களைப் புதுப்பித்துக்கொள்கி றார்கள்? சென்னைக்கு வந்த புதிதில் இவர் பேச்சு ஆங்கிலத்தில் நினைத்து தமிழில் பேசுவதைப்போல இருந்ததுண்டு, க.நா.சு. வைப்போல. ஓரிரு வருடங்களில், இவ ருக்குத் தமிழ் மேடைப்பேச்சு கைவசமாகி விட்டது. அவர் நல்ல மூடில் பேச ஆரம்பித்து முடிக்கும்போது, கைதட்டல்கள் ஒரு சடங்காக இல்லாமல், அவர் இருக் கையில் சென்று அமரும் வரை தொடரும்!
அதேபோல, இ.பா.வின் ஆழ்வார்களைப் பற்றிய புரிதலும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் குறித்த அறிதலும் ஒருசில கட்டுரைகள் வாயிலாகவே வெளி வந்துள்ளன. அவருக்கு டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்ததே ஆழ்வார்களும் பிரபந்தமும்தான்! என்னைக் கேட்டால், நாரத கான சபா செயலர் கிருஷ்ணசுவாமி இ.பா.வை வைத்து தன் அரங்கில் ‘ஆழ்வார்களின் தமிழ் இலக்கியச்சுவை’ என்று பத்து நாள் இலக்கியப் பிரசங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். “ஸ்ரீயப்பதியான எம்பெருமான் சாட்சாத் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்” என்று தொடங்கும் உபன்யாசங்களுக்குப் பதிலாக, ஆழ்வார்களையும், திவ்வியப் பிரபந்தத்தையும் தமிழ் இலக்கிய நோக்கில் நமக்கு அறிமுகப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அது அமையும்!
தில்லியில் இ.பா.வும் கணையாழி கஸ் தூரிரங்கனும் நெருங்கிய நண்பர்கள். இ.பா. வின் டிபன்ஸ் காலனி விலாசம்தான் சில காலம் கணையாழியின் முகவரியாக இருந்தது. இணையாசிரியராக இருந்த இ.பா.வுக் கும் சென்னையில் இருந்த அசோகமித்திரனுக்கும் அவ்வப்போது ஊடல்கள் உரசல் கள் ஏற்பட்டதுண்டு. இப்போது இருவரும் நெருங்கிய நண்பர்கள். இலக்கியச் சிந் தனை ப. லட்சுமணனும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் இ.பா.வின் நெடுநாள் நண்பர்கள்.
உயிர்மை’ பதிப்பகம் என் முதலும் கடைசியுமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தை வெளியிட்டபோது, இ.பா.விடம் ஒரு முன்னுரை எழுதித்தர கேட்டுக்கொண்டேன். அதில் பொய்யான புகழாரங்களாகச் சொரிந்து என்னைத் திக்கு முக்காட வைத்துவிட்டார். அதிலிருந்து சில வரிகள். ‘ஆனால் இது மட்டும் என்னால் சொல்லமுடியும். மழை அப்போது மணி மூலம் மேடையேறாதிருந்தால், நான் தொடர்ந்து நாடகம் எழுதியிருப்பேனா என்பது சந்தேகந்தான். அது மேடையேறு வதற்கு முழுக்காரணமாக இருந்தவர் மணிதான் ‘……’ மணி தேர்ந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந் ததுதான் என்னை மிகவும் கவர்ந்தது. தில்லிக்கு வரும் சென்னை இசைக் கலைஞர்களில், மிகவும் பிரபலமானவர்களை மணி வீட்டில்தான் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் மணியின் குடும்பத்துடன் ஓர் ஆத்மார்த்த உறவு இருந்ததையும் என்னால் உணர முடிந்தது. மணியினால் செய்து முடிக்கமுடியாத காரியம் எதுவுமில்லை என்பது போன்ற ஓர் அபிப்பிராயம் அவருடைய நண்பர் வட்டாரத்துக்கு எப்பொழுதுமே உண்டு. ‘மணியா? அவரிடம் சொன்னால் ஒரு வெள்ளை யானையையே உங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து கட்டிவிடுவார்’ என்று சொல்வார்கள். தில்லியில் அவரால் பயன் அடையாத தென்னிந்தியக் கலாச்சாரக் குழு எதுவுமில்லை. ‘முடியாது என்பது என் அகராதியில் கிடையாது’ என்று நெப்போலியன் சொல்வாராம். இது நண்பர் மணியைப் பொறுத்தவரையில் மிகவும் பொருந்தும்.’ முன்னுரையை இப்படி முடித்திருந்தார்: ‘அவருடைய எழுத்தாற்றல் சமீபத்தில்தான் எனக்குத் தெரிய வந்தது. ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை. இதுவரையில் அவர் ஏன் எழுதாமலிருந்தார் என்பதுதான் என் ஆச்சரியம்!’
எவ்வளவு பெரிய வார்த்தைகள்? உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன். யார் தயவும் இல்லாமலே இ.பா. நாடகாசிரியர் ஆகியிருப்பார். அவரால் எங்கள் DBNS குழுவுக்கும் எனக்கும் நவீன தமிழ் நாடக இயக்கங்களின் முன்னோடி என்ற சிறப்பு 1970-லேயேகிடைத்தது. அது அவர் எனக்கு அளித்த பெருமை. எழுபதுகளின் தொடக்கத்தில் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் நச்சரித்து நச்சரித்து எழுதச் சொன்ன முதல் நாடகம் ‘மழை’. பிறகு ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ‘ஔரங்க சீப்’ போன்ற நாடகங்களை அப்போதே தில்லியில் பல தடவை வெற்றிகரமாக மேடையேற்றி, அவைகளில் நடித்த பெருமை எனக்குண்டு.
இ.பா. நாடகங்களில் ‘காலயந்திரங்கள்’ நாடகத்தை நான் போட்டதில்லை. அதில் வரும் மஹாதேவன் பாத்திரம் எனக்குப் பிடித்தது. அழகாக, மிகைப்படுத்தாமல், Subtle-ஆக செய்யவேண்டிய கதாபாத்திரம். சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ யாராவது இந்த நாடகத்தைப்போட முன் வந்தால், கைச்செலவு செய்துகொண்டு போய், காலணா வாங்காமல் மஹாதேவன் பாத்திரத்தை நடித்துவிட்டு வர நான் தயார்! இ.பா.வே சொல்லியிருக்கிறார்: “என் நாடகங்களில் அவர் எந்தப் பாத்திரமாக நடித்தாரோ, அந்தப் பாத்திரத்தைப் பற்றி நான் எப்பொழுதெல்லாம் நினைக்கின் றேனோ அப்பொழுதெல்லாம் மணிதான் என் கண் முன் வந்து நிற்பார். வேறு பலர் அந்த நாடகப் பாத்திரத்தில் பிறகு நடித்திருந்தாலும், மணிதான் என் கண்முன் வந்து நிற்கிறார்.” மஹாதேவனாகவும் நடித்து இ.பா.வைப் பயமுறுத்தலாமே!  சரி, கட்டுரை நீண்டுகொண்டே போகிறது. இவரைப்பற்றிச் சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
எனக்கு ஓர் ஆசை: இ.பா. நூறு விழாவிலும் அவரை மேடையில் இதே துடிப்புடன் பார்க்கவேண்டும்!
–பாரதி மணி (Bharati Mani)

0 comments:

Post a Comment