Friday, January 22, 2016

24 செப்டம்பர் 2011
தில்லிக்கு இன்று காலையில் வந்து பாயசம், வடையோடு நன்றாக சாப்பிட்டுவிட்டு, கணினியைத்திறந்தால், ஒரே வாழ்த்து மழை! வாழ்த்து சொன்ன எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் ஆசிகளும்! அடுத்தவருடம் எனக்கு 75 வயதாகும். அப்போது ஊருக்கு ஊர்  குறைந்தபட்சம் 20 அடி பானராவது வைத்து ‘பாரதி மணி – 75’ விழாவை பெரிய்ய்ய அளவில் கொண்டாடி, என்னையும் அழைத்து, ‘தகுந்த’ விதத்தில் பாராட்டவேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  இதெல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமென்பதில்லை. என்னைப்பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். முன்னாள் முதல்வருக்கு அடுத்தபடியாக, எனக்கும் பாராட்டுவிழாக்கள் அலுக்கவே அலுக்காதென்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!!!
அன்புடன், பாரதி மணி
Bharati Mani கண்கள் குளமாகின்றன. என்னே பாசம் என் மேல்? இப்போது தான் ஒரு நண்பர் தொடர்புகொண்டு என் ஸ்விஸ் பாங்க் அக்கெளண்ட் நம்பர் கேட்கிறார்! என் குடும்பத்தின் மேல் உங்களுக்கெல்லாம் எத்தனை பாசம்?
கூச்சப்படாமல் நம்பர் கேளுங்கள். தருகிறேன். என் கடன் பணி செய்து ‘கிடைப்பதே’!
Bharati Mani கண்கள் குளமாகி….இப்போது ஏரியாகிவிட்டன! செளதியிலிருந்தும் துபாயிலிருந்தும் என் பாங்க் அக்கெளண்ட் நம்பர் கேட்டு வரும் போன் காலும், எஸ்.எம்.எஸ்.களும் என்னை தடுமாறச் செய்கின்றன!
மக்கள் விருப்பத்திற்கிணங்க, எமது பொதுக்குழு கூடி யாரெல்லாம் நம்பர் வேண்டுகிறார்களோ அவர்கள் கிருஷ்ண பிரபுவிடம் தொடர்பு கொண்டு, ரூபாய் பத்தாயிரம் மட்டுமே கட்டி ரசீது பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த ரசீதின் பின்புறம் என் ரகசிய எண் தரப்பட்டிருக்கும்.
இதற்கிடையில், வரும் இடைத்தேர்தலில், ஒரு தேசிய கட்சி என்னை ஒரு வேட்பாளராக்க முடிவு செய்திருக்கிறதென்ற செய்தி என் காதில் நாராசமாக விழுகிறது!
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று மீண்டும் இருமுறை கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!
Bharati Mani மீண்டும் கண்கள் பனிக்கின்றன.
நான் இன்று காலை தில்லி வந்த செய்தி எப்படியோ தேசிய பெரிய ‘அம்மா’வுக்குத்தெரிந்து, அவர் தன் விசேஷப்பிரதிநிதியை என் வீட்டுக்கு சற்றுமுன் அனுப்பிவைத்தார்.
தமிழக இடைத்தேர்தலில் நான் போட்டியிடவேண்டுமென்றும், தமிழகத்தில் 2014-ல்ராமராஜர்’ ஆட்சியைக்கொண்டுவரவேண்டுமென்றும், இங்கே பித்தளையாய்ப்போனவர்களை மீண்டும் ’தங்க’க்கம்பியாக மாற்றி, ‘இந்தியமூர்த்தி பவனை, வேஷ்டிச்சண்டை, பூசலற்ற சமாதானப்பூங்காவாக மாற்றவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். நான் தில்லியிலிருந்தபோது, எமெர்ஜென்ஸி காலத்தில் கட்சிக்கு செய்த உதவிகள் மறக்கப்பட வில்லையென்றும், என்னை கட்சி தமிழ்நாட்டின் விடிவெள்ளியாக கருதுகிறதென்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒரே ஒரு பிரச்னை நான் 75 வயதில் ‘இளமைத்தோற்றம்’ கொண்டிருப்பதாகவும், எண்பதுக்கு மேலிருந்தால், தலைவர்களின் சராசரி வயதுக்கு நன்றாக இருக்குமென அபிப்ராயம் கொள்வதாகவும், ஆனால் கையில் தடியிருப்பதால் பாஸ்மார்க் போடுவதாகவும் சொன்னார்.
அரசியலில் 24 மணிநேரம் கூட முக்கியமானது தான்!!
உடன் பிறக்காதவர்களுக்கும் நன்றி….வணக்கம்!

0 comments:

Post a Comment