நூறு வருடங்களுக்கு முந்தி காபி க்ளப் இருந்ததாவென்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்:
காபி க்ளப் கலாச்சாரம் நூறு வருடங்களுக்கும் முற்பட்டது. எனக்குத்தெரிந்த வகையில், வேறு வாழ்வாதாரம் இல்லாத, நன்றாக சமைக்கத்தெரிந்த ஏழை பிராமணக்குடும்பத்தினர் இதை ஒரு தொழிலாக தன் சிறிய வீட்டில் திண்ணைக்கு வெளியில் இரண்டு பெஞ்ச்களைப்போட்டு வருபவர்களுக்கு சுடச்சுட இட்லியும் தேங்காய்ச்சட்னியும் சுவையோடு கொடுத்தார்கள்.வியாபாரம் பச்சைபிடித்ததும், இன்னும் ரெண்டு பென்ச் உள்ளுத்திண்ணையில்! எனக்குத்தெரிந்து ஒரு திருவிதாங்கூர் சக்கரத்துக்கு (ரஃப்லி அரையணா) பத்து இட்லிகள். எதிர்பாராத விருந்தினர்கள் மற்றும் வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு, ‘டேய்…நேத்திக்கு மாவரைக்கலைடா…கிச்சாவாத்துக்குப் போய் ஒரணாவுக்கு இட்லி வாங்கிண்டுவா!’ என்பதில் தொடங்கியிருக்கவேண்டும்.
அடுத்து மாதவிலக்கான கிராமத்துப்பெண்கள் இவரது முக்கிய கஸ்டமர்கள். மாதம் 27 நாட்கள் பூராக்குடும்பத்தின் வயிறு வாடாமல் மூன்று வேளையும் பொங்கிப்போட்ட ‘மகராசி’ அந்த 3 நாட்கள் நாதியில்லாது கொட்டிலில் முடங்கிக்கிடப்பாள். (அந்தக்காலத்தில் கிராமத்துப்பெண்களை ’அந்த மூன்று நாட்களில் என்னென்ன பாடு படுத்தியிருக்கிறோம்? யாருக்கும் தேவையில்லாத ஜென்மம்!) ‘பார்ரா….விசாலத்தாத்துக்குப்போய் ஒரணாவுக்கு வாங்கிண்டு வா…..அஞ்சு இட்லி வெக்கச்சொல்லு… நெறைய சட்னியும்!’ சிறுவனாக அந்த ஐந்தாவது இட்லியை சட்னியுடன் ரசித்துச்சாப்பிட்ட ருசி இன்னும் என் நாக்கில் இருக்கிறது! இட்லிக்கு சாம்பாரெல்லாம் ரொம்ப பின்னால் வந்த நாகரீகம்!
ஹோட்டல் பிசினஸில் முட்டாளுக்குக்கூட நஷ்டம் வராது என்பார்கள். நூற்றுக்கு நூறு லாபம். ஒரணாவுக்கு நாலு இட்லி விற்றே அந்தக்குடும்பத்தின் நான்கு உயிர்கள் பிழைத்துவிடும்.அதனால் மக்கள் அதிகமாகப்புழங்கும் கடைவீதிகள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் வயிற்றுப்பிழைப்புக்காக – வண்டி ஓடினால் போதும் என்ற நிலையில் அனேக காபி க்ளப்கள் முளைத்தன!
***
பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஓர் உளுந்துவடை 40 பைசா……ஒரு கைபேசி அழைப்பு ரூ. 5!
இன்று உளுந்துவடை ரூ.5 …..கைபேசி அழைப்பு 40 பைசா!
விஞ்ஞானம் தோற்றது…..உளுந்துவடை ஜெயித்தது!
0 comments:
Post a Comment