Saturday, January 30, 2016

A.Muttu
இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதி திரைப்படம் வெளியானபோது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் நான் அதைப் பார்த்தேன். படத்தில் கதை சொல்லப்பட்டவிதம், பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டேயின் தோற்றப் பொருத்தம், செல்லம்மாவாக நடித்த தேவயானியின் அடக்கமான நடிப்பு, இளையராஜாவின் இசை எல்லாமே பாராட்டும்படியாக அமைந்திருந்தன.  பாரதியின் தகப்பனாராக நடித்தவர் மிக சொற்ப நேரமே திரையில் வந்து போன ஒரு புதுமுகமாக இருந்தார். அவருடைய நடிப்பு இயற்கையாகவும் அலட்டல் இல்லாமலும் இருந்தது. தமிழ் சினிமாவில் வரும் அப்பாக்களுக்கு ஒரு முகம் இருக்கும். அது இங்கே இல்லை. ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டின் கண்டிப்பான தகப்பனாரை எங்கள் கண்முன்னே நிறுத்தினார். படம் முடிந்தபோது அந்த நடிகரைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன். ஒருவருக்குமே  தெரியவில்லை. மன அடுக்கின் அடியில் போய் மறந்துவிட்ட பல விசயங்களில் இதுவும் ஒன்றாகியது.

 இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாரதி மணி என்ற பெயரில் ஒருவர் உயிர்மை யில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் யாரென்று எனக்கு தெரியாது. கட்டுரையை பாராட்டி அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அவர் பதில் எழுதினார். இப்படித்தான் மின்னஞ்சல் மூலம் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே நாங்கள் சிநேகமானோம். (இன்னும் நான் அவரை சந்தித்ததில்லை.) அப்பொழுது அவர்  பாரதி படத்தில் பாரதிக்கு அப்பாவாக தான் நடித்த விசயத்தை குறிப்பிட்டார். நான் ஆச்சரியப்பட்டேன். அத்துடன் என் மனதில் ஓர் எண்ணம் ஓடியது. 'நிழல்கள் ரவி' 'ஜெமினி கணேசன்' என்று பெயர் சூட்டுவதுபோல இவரும் பாரதி படத்தில் நடித்ததால் தன் பெயரை 'பாரதி மணி' என்று மாற்றியிருப்பாரோ என்று நினைத்தேன். அந்த நினைப்பும் தவறு என்பது எனக்கு பின்னால் தெரியவந்தது.

 ஒரு நாள் அவரிடமிருந்து வந்த கடிதத்தில் போகிற போக்கில் க.நா.சு.வின் மகளை தான் மணமுடித்த விசயத்தை அவர் எழுதினார். அப்பொழுது எனக்கு உடனே மூளையில் தோன்றிய ஒரு கேள்வியை கேட்டேன். 'க.நா.சு.விடம் நிறைய புத்தகங்கள் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு என்ன நடந்ததென்று உங்களுக்கு தெரியுமா?'  இதிலே ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் கேள்வியை நான் கேட்குமுன்னரே பாரதி மணி அந்தப் புத்தகங்களைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதி 'உயிர்மைக்கு' ஏற்கனவே அனுப்பியிருந்தார். ஆகவே அவரும் வியப்படைந்தார், ஆனால் எனக்கு பதில் சொல்லவில்லை. 'அடுத்த உயிர்மையை படித்துப் பாருங்கள்' என்று மட்டுமே கூறினார்.  

இப்படி எங்கள் நட்பு கடிதம் மூலம் வளர்ந்தது. அவர் எழுதும் கடிதங்களில் தவறாமல்  ஒரு வாசகம் காணப்படும். 'நான் ஒரு மோசமான நடிகன் என்றுதான் நினைத்திருந்தேன். இப்பொழுது நான் ஒரு மோசமான எழுத்தாளனும் கூட என்று நிரூபிப்பதற்கு அரும்பாடுபட்டு வருகிறேன். நான் அதற்கு ஒவ்வொரு முறையும் விதம் விதமான பதில்கள் எழுதுவேன். அவை அடிப்படையில்  இப்படி பொருள்கொண்டதாக இருக்கும். 'தயவு செய்து நீங்கள் உங்களை ஓர் எழுத்தாளனாக மாற்ற வேண்டாம். மூளையிலிருந்து ஒரு எண்ணத்தை பேப்பரில் பதியும்போது ஓர் எழுத்தாளன் அதை பல இடங்களில் மாற்றிவிடுகிறான். எழுதியபிறகு அதை மினுக்குகிறான்; புடம் போடுகிறான்; ஒவ்வொரு வார்த்தையும் சீர்தூக்கிப் பார்த்து செம்மையாக்குகிறான்; திருத்துகிறான்; திருப்பி எழுதுகிறான். ஆனால் உங்களுடைய எழுத்து அப்படியில்லை. You are not yet corrupted as a writer. நீங்கள் சிந்திப்பது உங்கள் மூளையில் இருந்து நேராக பேப்பரில் இறங்குகிறது. இயற்கையான எழுத்து. எளிமையிலும் எளிமை. அதுதான் சிறப்பு. தயவுசெய்து அதை மாற்ற முயற்சிக்க வேண்டாம். என்ன செய்தாலும் உங்கள் எழுத்தை மேம்படுத்தவேண்டாம்.என்று எழுதுவேன். இப்படி அவர் புலம்புவதும் நான் தேற்றுவதும் பலமுறை நடந்தது.

சமீபத்தில் அவர் எழுதி நான் படித்தது மகாநதி திரைப்படத்தில் முன்னர் எப்போதும் தொடாத உச்சத்தை தொட்ட நடிகர் பூர்ணம் விசுவநாதனுடைய மறைவு குறித்து உயிர்மையில்அவர் எழுதிய பதிவு. சுஜாதா எழுதும் நாடகத்தில் ஒரு பாத்திரத்தை பூர்ணம் ஏற்று சென்னையில் நடிப்பார். அதே பாத்திரத்தை பாரதி மணி டில்லியில் நடிப்பார். இவர்கள் மூவரும் நல்ல  நண்பர்களாய் இருந்திருக்கிறார்கள். பூர்ணத்தின் அஞ்சலிக் குறிப்பை முடிக்கும்போது பாரதி மணி எழுதிய வரிகள் மறக்கமுடியாதவை. பூர்ணத்தின் ஆவி மேலுலகம் சென்றதும், கண்ணில் படும் முதல் தேவதையிடம் இப்படிக் கேட்குமாம்: 'அம்மா, பரதேவதே!  சுஜாதா எங்கே இருக்கார்?'

அவர் எழுதிய அத்தனை கட்டுரைகளிலும் எனக்குப் பிடித்தது டில்லியின் நிகம்போத் சுடுகாடு பற்றி  எழுதிய கட்டுரை. ஒரு சுடுகாட்டைப் பற்றி ஒருவர் என்ன அதிகம் எழுதிவிடமுடியும்? ஆனால் பாரதி மணி அந்த கட்டுரையை சிறந்த இலக்கியமாக்கியிருந்தார். தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஒரு சிறுகதையை படிக்கும் ஆர்வத்துடன் கட்டுரையை படித்து அனுபவிக்க முடிந்தது. இப்படியான எழுத்து எல்லோருக்கும் சாதாரணமாக அமைந்துவிடுவதில்லை. நாடக நிகழ்வுபோல எழுத்தும் ஒரு வெளிப்பாட்டுக் கலைதான்.

பாரதி மணி 18 கட்டுரைகள் கொண்ட தன்னுடைய தொகுப்பை 'என்னுடைய முதலும் கடைசியுமான ஒரே புத்தகம்' என்று குறிப்பிடுகிறார். 71 வயதில் ஒருவர் தன்னுடைய முதல் புத்தகத்தை எழுதி வெளியிடுவது அவருக்கு அபத்தமாகப் பட்டிருக்கலாம். நோர்மன் மக்லீன் என்ற அமெரிக்க பேராசிரியர் தன்னுடைய முதல் புத்தகமான A river runs through it நாவலை எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 74.அவர் எழுத்துக்கு பாராட்டுகளும் புகழ்மாலைகளும் பரிசுகளும்  குவிந்தன. சமீபத்தில் ஃபிராங்க் மக்கோர்ட் என்ற எழுத்தாளர் Angela's Ashes என்ற நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது அவருக்கு வயது 67. அந்த நூலுக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்தது. ஆகவே வயது பொருட்டில்லை. கிரிக்கட் விளையாட்டில் நல்ல பந்து வீச்சாளன் நீண்டதூரத்துக்கு ஓடிவந்துதான் பந்தை வீசுவான். நீண்ட தூரம் பயணித்து வந்த பாரதி மணியின் படைப்பும் நல்லதாகவே இருக்கும். ஆகவே 'ஒரே புத்தகம்' என்று வாசகர்கள் கருதாமல் முதல் புத்தகம் என்று  நினைத்தே இதை படிக்கவேண்டும். பாரதி மணியின்  வார்த்தைகளையே கடன் வாங்கி நான் சொல்வதானால் 'நேரான விரலில் வராத நெய் வளைந்த விரலில் வரும்.' அனுபவத்தில் பழுத்து வளைந்த ஒரு மனதுக்குத்தான் சில விசயங்கள் சொல்வதற்கு சாத்தியமாகும். காட்டாறு ஒன்று 
தனக்கென்று வகுத்த பாதையில் பெருகி கடகடவென்று உருண்டு ஓடுவதுபோல அவருக்கு
எழுத்து வருகிறது. பாரதி மணி அதை தன் போக்கிற்கு விடவேண்டும்;  தடைபோடக்கூடாது.


ஒரு முறை தோல்ஸ்தோய் செக்கோவிடம் 'நீ சேக்ஸ்பியரிலும் பார்க்க மோசமாக எழுதுகிறாய்' என்று சொன்னார். அதைக் கேட்ட செக்கோவுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. வீட்டுக்கு திரும்பும் வழியெல்லாம் அதையே நினைத்துக்கொண்டு குதிரையை சவுக்கினால் செல்லமாக அடித்தபடி பிரயாணம் செய்தாராம். இன்று யாராவது என்னிடம் 'நீங்கள் பாரதி மணியிலும் பார்க்க மோசமாக எழுதுகிறீர்கள்' என்று சொன்னால் நானும் கண்ணில் படும் முதல் குதிரையின் மீதேறி சவுக்கினால் செல்லமாக தட்டியபடி நீண்ட நேரம் பயணம் செய்யத் தயாராயிருக்கிறேன்!........... 

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.
அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்துநடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
என்னைப்பற்றி – About Me
A.Muttuஇலங்கையில், கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டர்ட் மனெஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்து,2000 ஆண்டில்ஓய்வுபெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில்எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல் என எழுதியிருக்கிறேன்.
இதுவரை வெளிவந்த நூல்கள் :
1. அக்கா – 1964
2. திகடசக்கரம் – 1995
3. வம்சவிருத்தி – 1996
4. வடக்குவீதி – 1998
5. மகாராஜாவின் ரயில்வண்டி – 2001
6. அ.முத்துலிங்கம் கதைகள் – 2004
7. அங்கே இப்ப என்ன நேரம் ? – 2005
8. வியத்தலும் இலமே – 2006
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – 2006
10. பூமியின் பாதி வயது – 2007
11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – 2008
12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் – ஒலிப்புத்தகம் – 2008
13. Inauspicious Times – 2008
14. அமெரிக்கக்காரி – 2009
15. அமெரிக்க உளவாளி – 2010

0 comments:

Post a Comment