Friday, January 22, 2016


(நாகர்கோவில் அருகில் பார்வதிபுரத்தில் 24.9.1937 அன்று பிறந்தவர்,பாரதி மணி. தில்லியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த பிறகு இப்போது சென்னையில் வசிப்பவர். 64 ஆண்டுக் காலமாகஆயிரக் கணக்கான மேடை நாடகங்களில் நடித்து வருபவர். பாரதியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, 1982 முதல் இவர்பாரதி மணி என அழைக்கப்படுகிறார். தற்செயலாக, ‘பாரதி‘ திரைப்படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடித்தவர். அப்படத்தில் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டேவுக்குத் தமிழ் உச்சரிப்பு, வெளிப்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தவர். இலண்டன் நாடகப் பள்ளியில் Voice Culture எனப்படும் குரல் வளப் பயிற்சி பெற்றவர்.
பாரதி தவிர, ரஜினிகாந்த் நடித்த பாபா படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.ஊருக்கு நூறு பேர், நண்பா நண்பா, ஒருத்தி, றெக்கை எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்துள்ள 40 படங்களில் 14 படங்கள் ஏதோ ஒரு வகையில் விருது பெற்ற படங்களாகவே அமைந்துவிட்டன. அதனால் நண்பர்கள் வேடிக்கையாக, மணி ஒரு காட்சியில் வந்தாலும் போதும்; படத்திற்கு விருது நிச்சயம் என்று கூறுவதுண்டு.
பாரத் எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், பிர்லா நிறுவனம், மான் (M.A.N.) எனப் பல நிறுவனங்களில் பல்வேறு உயர் பதவிகள் வகித்துள்ளார். தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்குப்பயணித்தவர்; க.நா.சு.வின் மாப்பிள்ளை. தமிழ் சிஃபியில் எழுத முன்வந்திருக்கும் பாரதி மணியை வரவேற்கிறோம். செப்டம்பர் 5ஆம் தேதி, அன்னை தெரசாவின் நினைவு நாள்; இந்தத் தருணத்தில் இந்தக் கட்டுரை வெளியாவது, கூடுதல் பொருத்தம் உடையது.
– அண்ணாகண்ணன், ஆசிரியர்) 
சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொள்ள சேலம் போயிருந்தேன். லோக்கல் கேபிள் டி.வி.யில் ஒரு நேர்காணல் பதிவு செய்தனர். அதில் ஒரு கேள்வி: ‘நீங்கள் படவுலகில் பல நட்சத்திரங்களுடன் பழகியிருக்கிறீர்களே, அதைப் பற்றிச் சொல்லுங்கள்’. அதற்கு என் பதில்: ‘நட்சத்திரங்களை விடுங்கள். நான் சூரியனோடு பக்கத்தில் இரண்டரை மணி நேரம் இருந்திருக்கிறேன், அதுவும் ஆகாயத்தில்’. இது நான் யோசித்துச் சொன்ன புத்திசாலித்தனமான பதில் அல்ல. உண்மையிலேயே ஒரு சூரியனுடன் பயணம் செய்திருக்கிறேன்.
எழுபது எண்பதுகளில், நான் தில்லியில் இருந்தபோது என் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முக்கியமாக பங்களாதேஷ் போகவேண்டிய அவசியம் இருந்தது. சில மாதங்களில் மூன்று முறைகூட போய் வரவேண்டிய சூழ்நிலை. வாரமிருமுறை மட்டும் தாய் எயர்லைன்ஸ் தில்லி – டாக்கா டைரக்ட் ஃபி்ளைட். மற்ற நாட்களில் கொல்கத்தா போய் அங்கிருந்து பங்களாதேஷ் பிமான் பிடிக்க வேண்டும்.
1980-ம் ஆண்டு அதிகாலை தில்லி குளிரில்6.30 மணி கொல்கத்தா விமானத்தைப் பிடிக்கப் பாதுகாப்புச் சோதனை முடிந்து காத்திருந்தேன். வளவளவென்ற பேச்சுகள் திடீரென்று நின்று ஓர் அமைதி. திரும்பிப் பார்த்தால் அன்னை தெரசா இரு பணிப்பெண்[ஸிஸ்டர்]களுடன் வருகிறார். எல்லோரும் எழுந்து நின்றோம். காலியாக இருந்த என் எதிர் நாற்காலியில் அமர்ந்தார். இதற்கிடையில், விமான நிலைய அதிகாரி ஓடிவந்து வி.ஐ.பி லௌஞ்சுக்குப் போகலாமென்றார். கண்ணை மூடி கையசைத்து அதெல்லாம் தேவையில்லை என்பதுபோல் சைகை காட்டினார்.
இருமுறை கெஞ்சியும் பிடிவாதமாக மறுத்துவிட்டார். தோளில் சாந்திநிகேதன் டைப் ஜோல்னாப்பை மட்டும். அந்தச் சூரியனை பக்கத்திலிருந்து அப்போது தான் பார்க்கிறேன். முந்தைய நாள் மாலையில் அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதை நம் குடியரசுத் தலைவர் வழங்கும் நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் பார்த்திருந்தேன். எல்லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, அவர் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். தூய்மையான வெள்ளைச் சேலை நீல பார்டரில். முந்தானையில் வங்காளிப் பெண்களைப் போல் முடிந்துகொண்ட சாவிக் கொத்து. திபெத்தியப் பெண்களைப் போல் அழுத்தமான முகச் சுருக்கங்கள். ஆங்கிலத்தில் காக்கையின்கால் என்பார்கள். வளைந்த முதுகு. சற்றே உள்வளைந்த கால் கட்டை விரல்கள் கோலாப்புரி செருப்புக்கு வெளியே தெரிந்தன. அன்பும் நேசமும் இழையோடும் பார்வை. உலகிலேயே மிகவும் அழகான பெண்மணி!
விமானம் தயாரென்ற அறிவிப்பு வந்ததும், வழக்கமான சந்தை இரைச்சல், அவசரம் இல்லாமல் ஒருவித மரியாதையுடன் அவரவர் கைப்பைகளுடன் விமானத்தை நோக்கிப் புறப்பட்டோம். விமானத்திலிருந்த எல்லா ஆங்கில தினசரிகளும் அன்னையின் விருதுச் செய்தியை எட்டுப் பத்தியில் அறிவித்தன. விமானப் பணிப்பெண் அவரை என் பக்கமாக அழைத்துவந்தார். என்ன ஆச்சரியம்! அவருக்கு என் பக்கத்திலிருந்த ஜன்னல் இருக்கை. மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம். இரண்டரை மணி நேரம் உலகத்துக்கே அன்னையான அந்த மாதரசியின் பக்கத்தில் அமரும் பேறு! எழுந்து நின்று அவர் உள்ளே போக வழி விட்டேன். பயணத்தின்போது அநாவசியமாகப் பேசி அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
‘குட் மார்னிங் மதர்’ என்று மட்டும் சொன்னேன். விமானம் ஆகாயத்தில் பயணித்ததும் அரைமணி நேரம் கண்ணை மூடிக்கொண்டார். கண் விழித்ததும். அவருடன் வந்திருந்த ‘சகோதரிகள்’, மதர், மதர் எல்லா பத்திரிகைகளிலும் விருதுச் செய்தி போட்டோவுடன் வந்திருக்கிறது என்று காட்டினார்கள். அவர் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை! என்னைப் போன்ற அற்பங்களுக்குத்தான் நம் படம் பத்திரிகையில் வந்தால் மகிழ்ச்சி, பெருமை!
பணிப்பெண் கொண்டு வந்த காலைச்சிற்றுண்டியை மறுத்துவிட்டார். சுமார் ஒருமணி நேரம் கழித்து என்னைப் பற்றி விசாரித்தார். பங்களாதேஷ் போவதாகச் சொன்னதும், டாக்காவிலும் குல்னாவிலும் அவர்கள் நிறுவனம் இருப்பதாகவும் அங்கே போயிருப்பதாகவும் சொன்னார். இதற்கிடையில் கையில் காமிராவுடன் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். ஒரே க்ளிக் மயம். நான் சட்டாம்பிள்ளை போல இது மதருக்கு தொந்தரவு என்று சொல்லி எல்லோரையும் அவரவர் இருக்கைகளுக்குப் போகச் சொன்னேன்.
நான் சொல்வதை யார் கேட்டார்கள், இவர்கள் கேட்பதற்கு? அந்தக் காலத்தில் விமானத்துக்குள் தற்போதைய கெடுபிடி கிடையாது. சிலர் என்னிடம் காமிராவைக் கொடுத்து அவர்கள் என் சீட்டில் அமர்ந்து அன்னையுடன் போட்டோ எடுக்கச் சொன்னார்கள். நான் என் காமிராவைì கொண்டுபோகவில்லை. அதனால் நான் ஃபோட்டோ எடுத்தவரிடம் என்னையும் மதரையும் படம் பிடிக்கச் சொன்னேன். என் விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்து போட்டோ தயாரானதும் எனக்கு ஒரு பிரதி அனுப்பச் சொன்னேன். அவசியம் அனுப்புவதாகச் சொன்னார்.
கொஞ்ச நேரத்தில் விமானம் தரையிறங்குவதால் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. அவர் பெல்ட் அணிந்துகொண்டே, ஸன், உனக்கு ஏதாவது தரவேண்டுமே என்று அவரது ஜோல்னாப்பையைத் துழாவி, ஒரு சிறு பைபிள் புத்தகமும், ஜபமாலையும் [ரோஸரி] எடுத்துக் கொடுத்தார். நான் மதர், ‘இதில் உங்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுங்களேன்’ என்றதற்கு ‘ஷ்யூர்’ என்று சொல்லி ‘டு மை டியரெஸ்ட் ஸன் மணி‘ என்று எழுதி, என்னிடம் தேதி என்னவென்று கேட்டு, ‘வித் லவ், தெரசா‘ என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். காலைத் தொட்டு வணங்கியதற்கு, ‘காட் பிளெஸ் யூ‘ என ஆசீர்வதித்தார். அந்த பைபிளையும் ஜபமாலையையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.
எனக்கு அன்னை தெரசாவிடம் ஒரு தீராத மனக் குறையுண்டு. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தவருக்கு தன் மரண நேரத்தை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. ஆம், அன்னை இறந்த நாளில் தான் இளவரசி டயானாவும் பாரீசில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். எல்லா ஊடகங்களும் காமிராவைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னால் போய்விட்டன. எல்லா மலர் வளையங்களும் டயானாவுக்கே வைக்கப்பட்டன. அன்னையின் மரணம் ‘Mother Theresa also died‘ என்ற அளவில் இரண்டாம் பட்சமாகப் போய்விட்டது. இந்த விளம்பர யுகத்தில், இறக்கும்போதும் சரியான நேரம் பார்க்க வேண்டியிருக்கிறது!
மூன்று வாரங்களுக்குப் பிறகு குருச்சரண் பாட்டியா என்பவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வெளிநாடு போய்விட்டதால் தாமதத்திற்கு மன்னிப்புக் கோரி, நானும் அன்னை தெரசாவும் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார். இந்த உலகத்தில் நல்லவர்கள் நிறையவே இருக்கிறார்கள்!
பாரதி மணி (Bharati Mani)
(அமுதசுரபி டிசம்பர் 2007 இதழில் வெளியானது)

0 comments:

Post a Comment