தன்னைவிட உயரமான ஒரு ஜிப்பா அணிந்து பைப் பிடித்துக் கொண்டு, திரைப்படங்களில் வரும் பணக்கார, இங்கிலீஷ் பேசுகிற அப்பாக்கள் போலத் தோற்றமளிக்கிற ஒரு மனிதரை பல திரைப்பட விழாக்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குத் தெரியாது அவர்தான் பாரதி மணி என்று. 'உயிர்மை' இதழில் இவர் எழுதி வந்த பத்திகளைத் தொடர்ந்து படிக்கும்பொழுதுதான் இவரைப் பற்றி என் மனதில் அதுவரை இருந்த சித்திரம் மறைந்து வேறுருக் கொண்டது. 'உயிர்மை'யைப் பிரித்தாலே நான் படிக்கும் முதல் எழுத்தாக இவர் எழுத்து இருந்தது.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை, கர்நாடக, மேற்கத்திய சங்கீதத்தில் அபார ஞானம், நாடகத்தில் பிரேமை, நல்ல சினிமாவில் ஆர்வம், சமையற்கலையில் தேர்ந்த ரசனை என்று பாரதி மணி அவர்களிடம் உள்ள எத்தனையோ சிறப்புகளில் என்னைக் கவர்ந்தது அவரது எளிமையும், அட்டகாசமான நகைச்சுவையுணர்வும்தான். எல்லோரும் பொறாமைப்படுமளவுக்கு ஏராளமான உயர்ந்த மனிதர்களின் அறிமுகமும், அதன் மூலம் கிடைத்த உசத்தியான பல அனுபவங்களும் உள்ள பாரதி மணி அவர்கள் இதுவரை எழுத்தில் சொன்னது சொச்சம். இன்னும் இருக்கிறது அவரிடம் ஒன்றரை வண்டிக்கு சரக்கு...!
0 comments:
Post a Comment