வாழ்க்கைப்பயணத்தில் யந்திரகதியில் என்ன தான் படித்து
பட்டம் பெற்று வேலையேற்று வாழ்ந்து முடித்துக்கொண்டிருந்தாலும், சற்றும்
எதிர்பாராத இடத்தில், நேரத்தில், பள்ளியில் நம் கூடப்படித்த ஒரு இளம்
நண்பனைச்சந்திக்க நேர்ந்தால் நாம் அடையும் மகிழ்ச்சியும் உள்ளக்கிளர்ச்சியும்
அலாதியானது. அத்தகைய ஒரு மானசீக அதிர்வுக்கு நான் ஆளான தருணம், மணியை
இந்தியத்தலைநகரில் Gandhi Peace Foundation-ல் வைத்து பல
ஆண்டுகளுக்கு முன் சந்தித்த நேரம்.
கரடுமுரடான என் இலக்கியப்பாதையில் என்னால் மறக்கமுடியாத
ஒரு சிலரில் முக்கியமானவர் க.நா.சு. எழுதியவர் யார் என்று தெரியாமல், எழுத்தைச்
சுவைப்பதில் ஈடுபட்டிருந்த என் இளமைக்கால வாசிப்பு அனுபவத்தில் முத்திரை பதித்த
படைப்பு அசுர கணம். பிறகு இந்நாவலைப்படைத்த க.நா.சு.வுடன் நெருங்கிப் பழக
நேர்ந்தது பற்றியெல்லாம் முன்பெங்கோ நான் குறிப்பிட்டுவிட்டதாக ஞாபகம். எனவே
அவையெல்லாம் இங்கே வேண்டாம். அறுபதுகளில், ஆலுவாயில் வைத்து நடந்த அனைத்திந்திய
எழுத்தாளர் மாநாட்டின் போது நகுலன் கூட போயிருந்தபோது, அங்கே சந்தித்த மெளனி,
சி.சு.செல்லப்பா இவர்களுடன் க.நா.சு.வையும் கண்டேன். க.நா.சு.வின் கூட வந்திருந்த
அவர் ஒரே மகள் ஜமுனாவையும் பார்க்கவும் பழகவும் முடிந்தது. அப்போது அவளுக்கு
திருமணமாகவில்லை. பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு, Authors’ Guild of
India கூட்டத்திற்காக நான் தில்லிக்கு தொடர்ந்து போக நேர்ந்தது.
ஜனவரி-பெப்ருவரியிலும் குளிரின் ஆதிக்கம் விலகாத தில்லியில் நடக்கும்
இந்தக்கூட்டத்தை விட க.நா.சு. அங்கே இருக்கிறார் என்பது தான் தமிழ் எழுத்தாளர்கள்
எங்கள் பலரை கவர்ந்த அம்சம்.
அப்படி, இந்தக்கூட்டத்தில் பங்கெடுக்க தில்லி
போயிருந்தபோது, Gandhi Peace Foundation-ல் வந்து என்னைச்
சந்தித்தார் மணி. என் பள்ளித்தோழன் தான் க.நா.சு.வின் மாப்பிள்ளை – மகள் ஜமுனாவின் கணவன் --என்பதை அறிந்ததும் என்
மகிழ்ச்சி பல மடங்கானது. அவர் காரிலேயே வீட்டுக்கு கூட்டிச்சென்றார். மணியின்
திருமணத்திற்குப்பிறகு, க.நா.சு. தம்பதியர் இவர் வீட்டிலேயே இருந்தார்கள்.
க.நா.சு.வுடன் இலக்கிய விவாதம் செய்வதோடு, மணிக்கும் எனக்கும் நாங்கள் படித்த சாலை
அரசாங்க உயர்நிலைப்பள்ளி, அது அமைந்திருந்த பசுமையான கிள்ளியாற்றங்கரை, அந்த
ஆற்றங்கரையிலேயே இருக்கும் – தற்போது வலிய சாலை என
அறியப்படும் – பழம்பெருமை வாய்ந்த காந்தளூர் சாலை, அன்றைய
எங்கள் சக மாணவர்கள் நீலகண்டன், பாபு, மீனாட்சிசுந்தரம், ராம்ராஜ், வீணை
வெங்கட்ராமன் இப்படி எத்தனை பேசினாலும் தீராத பல விஷயங்கள் இருந்தன. பிறகு நான்
தில்லி போகும்போதெல்லாம் இந்த முடியாத பேச்சு தொடர்ந்தது. பலதடவை அவர் மனைவி
மகளுடன் திருவனந்தபுரத்தில் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
தில்லியில் தமிழ் நாடகங்களில் அவர் பங்களிப்பு முக்கியம்
வாய்ந்ததாக பலர் சொல்லி அறிந்திருக்கிறேனே தவிர பார்த்து மகிழும் வாய்ப்பு
கிட்டவில்லை. ஆனால் பாரதியின் அப்பாவாக அவர் தத்ரூபமாக நடித்த பாரதி
படத்தையும், வேறு சில படங்களையும் பார்த்து அவர் திறமையை தெரிந்துகொண்டேன்.
பள்ளிப்பருவத்தில் அரும்பிய எங்கள் களங்கமற்ற சிநேகம்
எழுபதைத்தாண்டிவிட்ட இன்றும் அப்படியே நீடிக்கிறது என்பது தான் விசேஷம்.
தமிழ்நாட்டின் தலைநகருக்கு அடிக்கடி வருபவனல்ல நான். அப்படியும் நான் வந்து பங்கெடுக்கும்
கூட்டங்களுக்கு தவறாது வந்து, சந்தித்துப்பேசியும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு
கொண்டும் எங்கள் அறுபது வருட நட்பை அணையாமல் காத்து வருகிறார் என் இனிய நண்பர்
பாரதி மணி...............
--எழுத்தாளர் நீல. பத்மநாபன்.
**** ***** ****
0 comments:
Post a Comment