எந்த எதிர்பார்ப்பையும் உத்தேசிக்காமலேயே
சிலரின் பேச்சு, பழக்க வழக்கங்கள் நமக்குப் பிடித்துப்போய்விடுகின்றன. அப்படி
பிடித்துப்போனவர்களில் ஒருவர் பாரதி மணி என்பதை என்னால் எந்த இடத்தில் நின்றும்
உரத்துக்கூறமுடியும். எண்பதுகளில் நான் டெல்லி சென்றிருந்த ஒரு தருணத்தில், அங்கு
நடைபெற்ற கணையாழி வாசகர் வட்டக் கூட்டத்தில், இந்தப் பெரியவரையும் நான்
பார்த்திருந்தது நினைவில் வந்துபோகிறது. அவ்வளவே! ஆயின், 1992 முற்பகுதியில், நிஜ
நாடக இயக்கத்தின் 14-ம் ஆண்டு நாடகவிழாவின்போது, சி.சு. செல்லப்பாவின் முறைப்பெண்
நாடகம் நிகழ்த்த டெல்லியிலிருந்து மதுரை வந்திருந்த ‘யதார்த்தா’
நாடகக்குழுவின் இளைஞர்களில் ஒருவராகத்தான் – நாடகக்கலைஞராகத்தான் – க.நா.சு. மருமகனான இந்த முதியவரை முதலில் சந்தித்துப் பேசியது நினைவில்
தங்கிப்போயிருக்கிறது.
சி.சு. செல்லப்பா முரண்டு பிடித்தவர்; அவர்
நாடகமாயிருந்தால் கூட, நாடகத்திற்கு அழைத்தாலும் நிச்சயம் வரமாட்டார் என்கிற
பிரும்ம சொப்பனத்தை உடைத்தெறிந்துவிட்டு, அவரை முறைப்பெண் நாடகம் பார்க்க
நான் அழைத்துவந்தது கண்டு அதிசயப்பட்டவர்களில் இவரும் ஒருவர்! சி.சு. செல்லப்பா
என்கிற இலக்கிய ஆளுமை நாடகத்தைப்பார்த்துவிட்டு நாடகத்தில் நடித்த மூவரையும் –
இவரையும், இவர் மனைவி மகளையும் – மனந்திறந்து பாராட்டினார்.
இவரிடம் எனக்கென்ன பிடித்திருக்கிறது? உயிர்மை
பத்திரிகையில் இவரெழுதிய சில கட்டுரைகளைப்படித்திருக்கிறேன். இவர்
முகங்காட்டிய சில படங்களைப்பார்த்திருக்கிறேன். அதையும் தாண்டி, இவரை ‘பழகுவதற்கு
இனியவர்’ பட்டியலில் என் மனதுக்குள் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இளைஞர்களுடன்
இடைவெளியில்லாது தன் வயதொத்தவர்களாய்க் கலந்து பழகும் இவரின் அதீதம், நாஞ்சில்
குசும்பாய் வந்து விழும் வார்த்தைகள் பவனிவரும் அழகு, விகற்பம் பாராட்டாத அன்பு, மனதில்
பட்டதை மனம் நோகாமல் பட்டென்று கொட்டிவிடுகிற ஆற்றல் இவையெல்லாம் இவர் பற்றிய
சித்திரங்களாய் என்னிடம் பதிந்து போயிருப்பவை! வாழ்க்கையில் நம்மையறியாமலேயே
வாரிச்சுருட்டிக் கொள்ளத்துடிக்கும் எளிமைக்கும், எள்ளல் சுவைக்கும், மனம்
புண்படாத நகைச்சுவைக்கும் தளகர்த்தர் இவர் என்பதை இவரிடம் பேசிப்பழகும் சில
வினாடிகள் இலகுவில் காட்டிக்கொடுத்துவிடும். பாரதி மணி நல்லவர் –
பழகுவதற்கு இனியவர். இதை விடவும் இவரை உண்மையாகப்பாராட்ட எளிய பதங்கள்
இல்லை!..............
--மதுரை நிஜ நாடக இயக்கம் மு. இராமசுவாமி.
**** ***** ****
0 comments:
Post a Comment