பாரதி மணியை நான் முதலில் தில்லியில் சந்தித்தபோது, அவர் க.நா.சு.வின்
மாப்பிள்ளையென்று தான் அறிமுகப்படுத்தப்பட்டார். பிறகு தில்லியில் அவர் நடித்த
நாடகங்கள் சிலவற்றைப் பார்க்க நேரிட்டபோது, அவரது அபாரமான நடிப்புத்திறமையைக்
கண்டு வியப்பு ஏற்பட்டது. க.நா.சு.வின் பெயருக்குப்பின்னால் ஒளியவேண்டிய அவசியமில்லாத தனிப்பட்ட ஆளுமை
கொண்டவர் என்று நினைத்தேன். அவரது தனித்துவமும் திறமையும் அவருடன் நெருங்கிப்பழகிய
தில்லி வட்டத்து நண்பர்கள் அறிவார்கள்.
மிக எளிமையாகப் பழகக்கூடியவர். ரசனையுடன் சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவர்.
தில்லியில் பல பெரிய மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். நான் இந்தியா
டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியையாக சென்னையில் பணியாற்றியபோது, மணி சென்னைக்குக்
குடிபெயர்ந்துவிட்டதாக எனக்குத் தெரியவந்தது. சென்னையில் அவரது திறமைக்கு நிறைய
வாய்ப்பு இருந்தது. சென்னையில் அர்த்தமுள்ள நவீன மேடை நாடகம் போட்டு யாரும்
பிழைக்கமுடியாத நிலையில், சினிமாவிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் சில
உருப்படியான வேடங்களை அவரால் ஏற்று நடிக்கமுடிந்திருக்கிறது.
எழுத்தாளர்களெல்லாம் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது.
அதுபோல நல்ல நடிகர்கள் நல்ல எழுத்தாளர்களாக இருப்பார்கள் என்று
எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால் பாரதி மணி அதைப் பொய்யாக்கி வருகிறார். சமீபகாலமாக
அவர் சிறுபத்திரிகைகளில் எழுதிவரும் பத்திகள் அவருக்கிருக்கும் மிக இயல்பான
எழுத்தாற்றலையும் வெளிப்படுத்துகின்றன. மிக நுணுக்கமான காமிரா பார்வை அவருடையது.
அவரது நினைவாற்றலும், அவற்றை ரசனையுடன் அசைபோடுவதும், மிகத்துல்லியமாகக் காட்சிகளை
யதார்த்தமாக விவரிப்பதும் படிப்பவரை ஆச்சரியப்படுத்துவதோடு பரவசப்படுத்தவும் செய்கிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும் தெற்கில் இருக்கும் தமிழர்கள் அறியாத ஒரு விஷயம் நிச்சயம்
இருக்கும். இதுவே அவரது ஆளுமையின் தனித்துவம்..........
--எழுத்தாளர் வாஸந்தி.
**** ***** ****
0 comments:
Post a Comment