’ஆமா!….தயிர்வடையிலெ பெரிசா என்ன இருக்கு? தயிர்லெ தாளிச்சுக்கொட்டி வடையை போட்டா ஆச்சு!’ என்று சொல்பவர்களும் மேலே படிக்கலாம்! சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் அப்படித்தான் தயிர்வடை கிடைக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமானது.
இதற்காக மெதுவடை செய்ய சோம்பற்படுபவர்களும், அதில் ஓட்டை எப்படி போடுவது என்பது தெரியாதவர்களும் நல்ல ஹோட்டலில் தேவையான வடைகளை வாங்கிக் கொள்ளலாம்! ஒரு விஷயம்…. மெதுவடையில் வெங்காயம் கிஞ்சித்தும் இருக்கக்கூடாது.!
தயிர் புளிக்காத கெட்டித்தயிராக இருக்கவேண்டும். நாலரைப்பால் எல்லாம் உதவாதுFull Cream Milk-ல் உறைகுத்திய புளிக்காத தயிர் தான் வேண்டும். தயிரில் கஞ்சத்தனம் கூடாது! கால்மூடி தேங்காயை ஒரு சின்ன பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் ‘வழுமூண’ அரைத்து அந்த விழுதை தேவையான உப்போடு தயிரில் கலக்கவும். (இதை சென்னையில் யாரும் செய்வதில்லை!) அதிகமாக கைபட்டு தயிரை மோராக்கி விடக்கூடாது!
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் …. என் கை தேங்காயெண்ணெய் தான் எடுக்கும் — விட்டு, காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை, ஒரு மெல்லிசு பச்சைமிளகாய், இஞ்சி பொடியாக அரிந்தது, இவைகளை இதே வரிசையில் போட்டு இதையும் தயிருடன் மெதுவாக கலக்கவும்.
வடைகளை கைபொறுக்கும் வெந்நீரில் அரைநிமிடம் ஊறவைத்து அவை உடையாமல் மெதுவாகப்பிழிந்து தயிர் கலவையில் ஒவ்வொன்றாக சேர்க்கவும். ஒரு ஸ்பூனால் தயிரை எடுத்து, வடைகள் முழுகும்படி ஸ்நானம் செய்விக்கவும். ஃப்ரிஜில் அரைமணி நேரத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும்.
இதற்குமேல் உங்கள் கற்பனைப்படி, கேரட் துருவல், கொத்துமல்லி, காராபூந்தி சேர்த்து விருந்தினருக்கு கொடுத்தால், தேவாம்ருதம் தான்! இன்று எனக்கு மிச்சமிருந்தது….. ஒன்றே ஒன்று தான்! அதுவும் நண்பர் “ஸார்! இது உங்களுக்கு இருக்கட்டும்!” என்று விட்டுக்கொடுத்தது!
படத்தைப்பார்த்தால் கறிவேப்பிலை அதிகமாகத்தெரியும். விரும்பிச்சாப்பிடுவேன். கறிவேப்பிலைக்கு — சாம்பாரில், அவியலில், அடையில் பாதி வெந்தும் பாதி கல்லில் பொரிந்து, காராபூந்தியில் மொறுமொறுவென்று பொரித்தது — இப்படி தனித்தனி சுவையாக இருக்கும். இப்படி அதிகமாக கறிவேப்பிலை சாப்பிட்டதால் தான் எனக்கு ஆரோக்யமான தலைமுடி என்று என் தாயார் நம்பினார்!
0 comments:
Post a Comment