Tuesday, January 19, 2016

யது எண்பதை நெருங்கினாலே வரும்  பிரச்னைகள் அனேகம். சில உடல்ரீதியாக. நல்லவேளை…. எனக்கு அது இல்லை! பல மனம் சம்பந்தமானவை.  அதிலொன்று நெருங்கிய நண்பர்களை, ஆளுமைகளை  ஒவ்வொருவராக காலதேவனுக்கு தாரை வார்ப்பது! We can only watch it with impotent anger! நினைக்கவே கசப்பான அனுபவங்கள்.
நான் மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதி எழுதி இப்போது நான் ஒரு சரமக்கவிராயர் ஆகிவிட்டேன்! நேற்று டிஸ்கவரி-நவீன விருட்சம் நடத்திய வெ.சா. அஞ்சலிக்கூட்டத்தை ‘தலைமைப்புரோகிதராக’ இருந்து நடத்திவைத்தேன்.  இன்று ’உயிர்மை’ மனுஷ்ய புத்திரன் தொடர்புகொண்டு ‘வெ.சா.வுடன் நெருங்கிப்பழகியவர் நீங்கள். அடுத்த இதழுக்கு ஒரு அஞ்சலிக்கட்டுரை ஒன்று அனுப்புங்களேன்!’ என்று கேட்டிருக்கிறார். இப்போதெல்லாம் படிப்பதும் எழுதுவதும் பெரும்பாடாக இருக்கிறது.  I am afraid it’s mental menopause at this old age! மறைந்தவரின் நாட்டார் கலைகளில் ஈர்ப்பு, நக்கீரக்குணம், இலக்கிய ஆளுமை இவைபற்றி பலரும் எழுதிமுடித்து விட்டார்கள். எனக்கோ அவையெல்லாம் எழுத வராது. உங்க மனசிலே என்ன தோணுதோ அதை எழுதிக்கொடுங்கள்என்று சொல்லி மனுஷ்ய புத்திரன் போனை வைத்துவிட்டார்!
1956-லிருந்து கரோல்பாகில் அவரைப்பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. பெயர் தெரியாது! ஓர் அறிவுஜீவிக்கான அத்தனை அடையாளங்களும் உண்டு. வாராத தலைமுடி, வாயில் எப்போதும் ஒரு பீடி, காதி கிராமோத்யோக் கதர் ஜிப்பா, பைஜாமா!….போதாததற்கு ஒரு ஜோல்னாப்பை! மாலை வேளைகளில் நான் போகும் பெங்காளி சம்புமித்ரா, உத்பல் தத் IPTA நாடகங்கள், சத்யஜித் ரே படங்கள், ஜாத்ரா, எம்பஸிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் அயல்நாட்டு சினிமா,  வயதாகிக்கொண்டிருந்த ஓம்கார் நாத்  டாக்கூர், படேகுலாம் அலிகான் மற்றும் அல்லா ராக்கா-சாம்தாப்ரசாத் புடைசூழ ரவிசங்கர்-அலி அக்பர்கான் சிதார்-ஸரோத் ஜூகல்பந்தி இப்படி எங்கே போனாலும் அங்கே அவரையும் பார்க்கமுடியும்! நம்மைப்போல இன்னொரு பைத்தியம் போலிருக்கு! என்று நானும் நினைத்துக்கொள்வேன். 1972-ல் என் திருமணத்தின் போது தான் க.நா.சு. மூலமாக நெருக்கமான பழக்கம்! ”உம்மை அம்பத்தாறிலேயே கரோல்பாக் வைத்யநாதய்யர் மெஸ்ஸில் தினமும் பார்த்திருக்கிறேன். DLO-7727 Lambretta ஸ்கூட்டரில் வருவீர்.   அங்கே குடியிருந்த உம்ம ஃப்ரெண்டு ஒரு கர்நாடக இசைப்பைத்தியம். நீர்  உள்ளே போனவுடனேயே மதுரைமணி, காருகுறிச்சி, ஜி.என்.பி எல்லாம் காதிலே கேக்கும். நான் ரெண்டாவது மாடி அறையிலே ஒரு நண்பனோடெ வாடகைக்கு இருந்தேன்….. அம்பது ரூபாய். மாசம் முப்பதுநாள் ரெண்டுவேளை சாப்பாட்டுக்கு மொத்தமே நாப்பது ரூபாய்! நான் சந்தோஷமாக இருந்தகாலம்!” என்று பிறகு எப்போதோ ஒருநாள் என் ஜாதகத்தையே மாலைவேளையில் சொல்லியிருக்கிறார். ஒரு கட்டுரையில் நான் மணியோடு செலவழித்த எந்த மாலைவேளைகளிலும் மது இல்லாமல் இருந்ததில்லையென்று எழுதியிருந்தார். ஆனால் என்னைப்போல் வீட்டிலேயே ‘பார்’ வைத்துக்கொண்டு ‘தினமும் மூன்று லார்ஜ் பெக்” கணக்கெல்லாம் கிடையாது. சராசரியாக ஒருமாதத்தில் இரண்டுமூன்று முறை தான். அதுவும் மனைவி சரோஜாவுக்குத்தெரியாமல்! கடைசிவரை தான் குடிப்பது தன் மனைவிக்குத்தெரியாது என்று பிடிவாதமாக நம்பினார்! மது அருந்தும்போது அவர் குரல் உயர்ந்ததே இல்லை! அவருக்கு விலையுயர்ந்த ஷிவாஸ் ரீகலும் ரூ.12-க்குகிடைக்கும் ஆர்மி XXX Rum பாட்டிலும் ஒன்று தான். போதை ஏறவேண்டும். He knew how to hold his Glass! தில்லியில் சென்னையிலிருந்துவரும் எழுத்தாளர்களுக்கான பார்ட்டிகளில் பின்பகுதி அவர்களுக்கிடையே குடித்துவிட்டு எழும் சண்டைகளைத் தீர்த்து வைப்பதிலேயே எங்கள் நேரம் போய்விடும்!
அவரோடு கனாட்ப்ளேஸ் பார்களுக்குப்போனது அபூர்வம். நாலைந்துமுறை நான் மெம்பராக இருந்த வஸந்த்விஹார் க்ளப் போயிருக்கிறோம். மற்றபடி மாதத்துக்கு ஓரிருமுறை என் வீட்டில் அல்லது யதார்த்தா பென்னேஸ்வரன்/டாக்டர் செ.ரவீந்திரன்/சுரேஷ் சுப்ரமணியம் வீடுகளில் தான் எங்கள் மண்டகப்படி நடக்கும்! குடித்துவிட்டு தன் வீட்டுக்குப்போவதை அவர் விரும்புவதில்லை. ராத்தங்கல் என்வீட்டிலோ பென்னேஸ்வரன் வீட்டிலோ தான்! ஒருநாள் கூட குடித்து மயக்கமானது அவர் சரித்திரத்தில் இல்லை! பேசுவதெல்லாம் இலக்கிய ஆளுமைகளைப்பற்றியோ சமீபத்தில் நடந்த சர்ச்சைகள் பற்றியோ தான் இருக்கும். பொழுதுபோவதே தெரியாது. மூன்று ரவுண்டு முடிந்துவிடும்!
தில்லியில் அரசு உளவுத்துறை Intelligence Bureau (I.B)-யில் ஸ்டெனோகிராபராகச்சேர்ந்து இயக்குநரின் அந்தரங்கச்செயலாளராக பதவி வகித்தார். அதனால் பலருடன் தனிப்பட்டமுறையில் பழகுவதற்கு அரசாங்கத்தடை இருந்தது. தான் வேலைசெய்யும் நிறுவனத்தின் பெயரை தவிர்த்துவிடுவார். அழுத்திக்கேட்டால் ஹோம் மினிஸ்ட்ரி என்று பொதுவாக பதில் வரும். ‘பாரதி’ இயக்குநர் ஞான. ராஜசேகரன் IAS ஆவதற்கு முந்தி தில்லியில் இவர் ஆபீசில் தான் வேலை பார்த்தார். ஓரிரு வருடங்கள் வெ.சா.வின் ராமகிருஷ்ணபுரம் வீட்டில் தான் தங்கியிருந்தார்.
வெளியுலகத்துக்கு விமர்சனப்புலியாக இருந்தவர் வீட்டில் மனைவி சரோஜாவுக்கு ரொம்பவும் பயந்தவராகத்தான் இருந்தார். அல்லது பயந்தவராக அனுபவித்து நடித்தார்! அவர் வீட்டுக்குப்போகும்போது மனைவியின் கெடுபிடிகளைப்பார்த்து ஸ்வாமின்னு! நீர் வெளிலே தான் புலி….வீட்டிலே எலி தான்! என்பேன் சரோஜாம்மா சந்தோஷத்தோடு சிரிப்பார்! வீடு திரும்பும் வெ.சா மாடிப்படி ஏறும்போது கீழ்வீட்டு காலேஜ் போகும் பெண்ணிடம் நின்று பேசிவிட்டு வீட்டுக்குள் வந்தால், அந்தம்மாவின் முதல் கேள்விகீழ்வீட்டு கவிதாவோடெ ஏழுநிமிஷம் என்ன பேசினேள்?’ என்பதாகத்தான் இருக்கும். இவரும் கோபப்படாமல் டெல்லி யூனிவெர்சிட்டி ஸ்ட்ரைக்கை பத்தி சொல்லிண்டுருந்தா!” என்று பொறுமையாக பதில் சொல்வார்! அவருக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது.
நான் தில்லியில் சுமாரான வசதிகளோடு வாழ்ந்தேனென்று நண்பர்கள் நினைக்கலாம். ஆனால் எனக்கு தில்லிவாழ்வில் இருமுறை பணமுடை ஏற்பட்டது. முதலாவதாக1972-ல் என் திருமணத்தின்போது.
பிறகு 1992-ல் இரண்டாவது முறையாக. வீடு, வசதிகள் எல்லாம் இருந்தும், நான் செய்த கணிப்புத்தவறுகளால் Cash Liquidity அடிபட்டது. சாமிநாதன் ரிட்டயரான சமயம். ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது “ஆபீஸ்லெருந்து வந்த பணம் இருக்குய்யா. வீடு வாங்கும்போது தான் தேவைப்படும். ஆனா நெறைய வட்டி கேப்பேன்!” என்றார். அடுத்தமுறை சந்திக்கும்போது அவராகவே பாக்கெட்டிலிருந்து ஒரு செக் எடுத்து கையில் கொடுத்தார். ஒரு லட்சத்துக்கான செக். முந்தியவாரத் தேதி போட்டது. “வாழ்க்கையிலே முதத்தரம் ஒரு லட்சத்துக்கு செக் எழுதியிருக்கேன்!” என்று சொல்லி சிரித்தார். நிலைமை சரியாகி பணத்தை திருப்பிக்கொடுத்தபோது, “ஈட்டிக்காரனுக்கு குடுக்கறமாதிரி நெறய்ய வட்டி குடுத்திருக்கீர். திருப்பித்தரமாட்டேன்” என்று சொல்லி வாங்கிக்கொண்டார். இதுவரை யாருக்கும் இந்த விஷயம் தெரியாது…..அவர் மனைவி சரோஜா உட்பட! இப்படி எந்த அலட்டல், தண்டோராவும் இல்லாமல் பலருக்கும் உதவிகள் செய்திருக்கிறார். சில இடங்களில் ஏமாந்தும் இருக்கிறார்.
அவர் தில்லியில் முதல்தடவை வீடு வாங்க நினைத்தபோது யாரையும் கலந்தாலோசிக்காமல் ஒரு DDA இருஅறைகள் கொண்ட வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். தில்லியில் எல்லாமே Power of Attorney முறையில் தான் வாங்கமுடியும். விஷயமறிந்த நான், “அந்த ஏரியாவில் ஏழு, எட்டு லட்சம் தான்யா ரேட். பதினொண்ணரை ரொம்ப ஜாஸ்தி. அதுவும் இது இரண்டாவது மாடி!” என்றேன். ”ப்ராபர்ட்டி டீலருக்கு அட்வான்ஸ் ரெண்டுலட்சம் குடுத்தாச்சு. இனிமே ஒண்ணும் செய்யமுடியாது. வாக்கு மாறப்டாது!” நான் ‘எல்லாம் மாறலாம். அவனுக்கு சாமிநாதன் இல்லேனா இன்னொரு ராமசாமி! ஏமாற நிறையப்பேர் இருக்கா!’ அந்த அக்ரிமெண்ட் காப்பி ஒண்ணு தாரும். அதிலே வழி இருக்கும்’ என்று படித்துப்பார்த்தேன். அதில் வீட்டுப் Possession ஆறு மாதத்திற்குள் தரவேண்டும் என்று ஒரு ஷரத்து இருந்தது. அதில் ஏற்கனவே நாலு மாதங்கள் முடிந்திருந்தன. தில்லியின் ஹளசிங் போர்டு ஆனDDA எந்தக்காலத்திலும் இதை நிறைவேற்றியதில்லை. அறிவித்த தேதிக்கு ஒரு வருடம் கழித்துத்தான் அலாட்மென்ட் லெட்டரே வரும்! இந்த இடைவெளியில் அதே ஏரியாவில் இரண்டு பால்கனி கொண்ட முதல்மாடி வீடு ஒன்றை ஒரு ‘நல்ல’ ஏஜெண்ட் மூலம் எட்டரை லட்சத்துக்கு ஏற்பாடு செய்து இரண்டு லட்சம் அட்வான்சும் கொடுத்துவிட்டேன். முதல் ஏஜெண்டிடம் ஆறு மாதத்தில் வீடு தரவில்லையென்பதை காரணம் காட்டி முதலில் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயையும் திருப்பி வாங்கிவிட்டேன். அவனுக்கு இந்த சுப்பன் இல்லாவிட்டால் இன்னொரு குப்பன்! எந்தத்தகராறும் செய்யாமல் பணத்தை திருப்பிவிட்டான்! அதிலிருந்து நான் அவர் புதுவீட்டுக்குப்போகும்போது சரோஜா அம்மாவின் உபசரிப்பு இருமடங்காகியது. போய் உட்கார்ந்தவுடன் ஒரு காபி! பிறகு டிபனுடன் இன்னொரு காபி! வெ.சா.வுக்கு “மணியோடெ சமத்தை பாருங்கோ!” என்று ஒரு சின்ன இடி!
தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு சமீபகாலத்தில் ஹிந்துத்வா சாயமும், பிராம்மணீயப்பூணூலும் அணிவிக்கப்பட்டன. ஆனால் க.நா.சு. போலவே அவரும் எப்போதோ பூணூலைக்கழட்டி எறிந்தவர்.  இருந்தும் பார்ப்பனீய முத்திரை கடைசிவரை குத்தப்பட்டது. அவரை முதன்முதலாக பூணூலுடன் பார்த்தது 2000-ல்சென்னை ஹிந்தி பிரச்சார் சபாவில் நடந்த அவர் மகன் கணேஷ் திருமணத்தின்போது தான்.  பூணூல், பஞ்சகச்சம், அங்கவஸ்திரத்துடன் வரவேற்றவரை, என்ன…..அய்யிரே! என்று கேலி செய்தேன். வைதீகக்காரியங்கள் முடிந்ததும், இந்த வேஷத்தை கலைச்சுட்டு வரேன்யா….சாப்பிடப்போவோம் என்று வழக்கமான ஜிப்பா, வேட்டிக்கு மாறினார். அந்தத்திருமணத்தில் பல இலக்கிய ஆளுமைகளைப் பார்க்க முடிந்தது.
பல கருத்துக்களை காலப்போக்கில் மாற்றிக்கொண்டாரென்பது தெரியும்.  சில விஷயங்களில் Old Age mellows down peopleஎன்பதற்கு மாறாக அவரது முந்தையநாள் கணிப்புக்களை மாற்ற சிரமமாக இருந்தது.  ஆரம்பகாலத்தில் அவருக்கும் தி.க.சி அய்யாவுக்குமிடையே நடந்த வாதப்பிரதிவாதங்கள், இலக்கியச்சண்டைகள் நமக்கெல்லாம் தெரியும். 2010-ல் நான் தி.க.சி.யைப்பார்க்க நெல்லை போயிருந்தபோது, வெ.சா. பற்றி நிறைய பேசினார். அதில் எள்ளளவும் பழைய வீரியமோ, காழ்ப்புணர்வோ இல்லை. “அய்யா!  வெ.சா.  மனைவி போனதுக்கப்புறம் ஒடஞ்சு போயிருப்பாரு.  தனியாத்தானே இருக்காரு?……ஒரு மன ஆறுதலுக்கு திருநவேலிக்கு பத்துநாள் வரச்சொல்லுங்க. பேசிக்கிட்டிருப்போம்.  நீங்க சொன்னா கேப்பாரு!….வரச்சொல்லும்யா!’ என்று கனிவோடு சொன்னார். சென்னை திரும்பியபிறகு நான் பெங்களூரிலிருந்த சாமிநாதனுக்கு போன் பண்ணி இந்த விஷயத்தைச்சொன்னேன். நான் சொன்னதில் ஒருவார்த்தை கூட அவர் நம்பவில்லை! “நன்னா பொய் சொல்றீர்யா….தி.க.சியாவது …….. என்னை கூப்டறதாவது!” அரைமணிநேரம் வியர்த்தமாக வாதாடிக்கொண்டிருந்தேன். பிறகு நண்பர் சுகாவுக்கு போன் பண்ணிக்கேட்டிருக்கிறார். சுகாவும் என்னைப்போலவே “நான் போகும்போதெல்லாம் உங்களைப்பற்றி கேட்பாரு. ஒரு நடை போய்ட்டு வாங்க. அவருக்கு சந்தோஷமா இருக்கும்!” என்றதும் தான் வெ.சா.வுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.  ”தி.க.சி வீட்டிலே WC  இருக்கா? …. என்னாலெ ஒக்காந்து போகமுடியாது!” ஒரு வாரப்பயணத்திட்டம் போட்டோம். பெங்களூரிலிருந்து வெ.சா. சென்னை வந்து, நானும் சுகாவும் அவருடன் சேர்ந்து ரயிலில்  திருநெல்வேலிக்குப்போவதாகவும் அங்கே தி.க.சி., கலாப்ரியா, வண்ணநிலவன், வண்ணதாசன் இவர்களோடு ஒருவாரம் பேசிப்பேசியே பொழுதைக்கழிப்பதாகவும் திட்டம். ஆனால் இந்தப்பிராமணன் எங்களுக்கெல்லாம் கடுக்காய் கொடுத்துவிட்டு, இன்னொரு நண்பருடன் (ஓவியர் சீனிவாசன்) காரில் போய் தி.க.சி.யை பார்த்துவிட்டு வந்துவிட்டார்! பிறகு நான் இதைப்பற்றி அவரிடம் கேட்கவேயில்லை.
நேற்று நடந்த வெ.சா. நினைவஞ்சலிக்கூட்டத்தில் அவரைப்பற்றிய ஒரு குறும்படம் போட்டார்கள். அதில் ஒருவர் “வெ.சா.வுக்கு ஆழ்ந்த வாசிப்பு கிடையாது. எல்லாமே மேலோட்டமாகத்தானிருக்கும். அதனால் தான் தி.ஜா.வை தலையில் வைத்துக்கொண்டாடினார்” என்று சொன்னார். இந்திரா பார்த்தசாரதி “சாமிநாதனின் எழுத்து கொஞ்சம் ஆழமானது தான்……..ஆனால் இலக்கியத்தரமுடையதென்று சொல்லிவிடமுடியாது!” என்று பேட்டி கொடுத்திருந்தார். ’’பாலையும் வாழையும்புத்தகத்தில் ஏழெட்டு இடங்களில் என் பெயர் அடிபடும். இ.பா.வை தாக்குவதற்கு நான் ஒரு குண்டாந்தடியாக பயன்பட்டிருக்கிறேன். “எல்லா எழுத்தாளர்களுக்கும் — புதுமைப்பித்தன், க.நா.சு., செல்லப்பா உட்பட —- நாடகம் எழுதிப்பார்க்கவேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் மேடையேற்ற ஆட்களில்லாததால் ஓரிரு நாடகங்களோடு நிறுத்திக்கொண்டார்கள். ஜானகிராமனுக்கு எஸ்.வி. சகஸ்ரநாமம் இருந்தார். இ.பா.வை ‘உங்களால் நாடகம் எழுதமுடியுமென்று நம்பவைத்து ஒருவருடம் அவரை நச்சரித்து “மழை” நாடகத்தை கேட்டு வாங்கி, அதை இருமாதங்களில் வெற்றிகரமாக மேடையேற்றும் ஆர்வமும் துணிவும் எஸ்.கே.எஸ், மணிக்கு இருந்தது. தன் முதல்நாடகமே தில்லியில் முப்பது தடவைக்குமேல் மேடையேறி சிறந்த நாடகத்துக்கான பரிசும் பெற்றதால், இ.பா. தொடர்ந்து ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ஒளரங்கசீப், நந்தன் கதை’ என்று எழுத ஆரம்பித்தார். இந்திரா பார்த்தசாரதி ஒரு நாடக ஆசிரியரானதற்கு முக்கியக்காரணம் மணி தான்ஆனால் அதை வெளியில் சொல்லத்தயங்குகிறார். என்னிடம் ‘சுஜாதா ’மழையை ஏன் நாடகமா எழுதினீங்க?…..ஒரு நாவலாக்கியிருக்கலாமே!’ என்று கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார்!” என்று எழுதியிருந்தார்.  நல்லவேளை!…..இதுவரை இ.பா. என்மீது காட்டும் அன்பும் பாசமும் இதனால் சற்றும் குறையவில்லை!
மற்ற நண்பர்களை விட இவரிடம் எனக்கு ஏற்பட்ட தில்லி அரசியல் ‘அரண்மனை ரகசியங்கள்’, எமர்ஜென்சிக்காலம், சஞ்சய் காந்தி நட்பு, அதிகார உள்வட்ட அரசியல் போன்ற விஷயங்களை அதிகம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். என் கட்டுரைகளைப்படித்துவிட்டு, ‘ஏன்யா ’அதை’ப்பற்றி எழுதலே?…..’இதை’ப்பற்றி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே!’ என்று அபிப்ராயம் சொல்வார். சுப்புடு பற்றிய என் கட்டுரையைப்படித்தவர்களுக்கு அது கொஞ்சம் காரமாகப்பட்டது. அவரைப்பற்றி அதிகம் தெரிந்த வெ.சா. என்னிடம் ‘ஓய்! ‘அந்த’ விஷயம் பற்றியும் கோடி காட்டியிருக்கலாமே!’ என்று வேறு பலவிஷயங்களைக்குறிப்பிட்டார். அதற்கு நான் ‘இப்பவே நிறைய எழுதிட்டேன். பாவம் போனவரைப்பத்தி இதுவே அதிகம்னு நெனைக்கிறேன்!’ என்று பதிலளித்தேன்.
வெ.சா. ஒரு கட்டுரையில் என்னைப்பற்றி இப்படி குறிப்பிட்டிருந்தார்:: “மணியின் சினேக வட்டம் விஸ்தாரமானது. அனுபவ உலகமும் மிக விஸ்தாரமானது. இவ்வளவு விஸ்தாரமானதா என்பதை, சாதாரணமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அதைப் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்லி அவர் அலட்டிக் கொள்வதில்லை. வியப்பூட்டும் அளவுக்கு விஸ்தாரமானது. அதை இப்போது அவர் எழுதிவருவதிலிருந்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவது,…… மனுஷன் அளக்கறார்’ என்று தோன்றும். இல்லை…இல்லவே இல்லை! அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் அதிகம் உண்டு. சொல்லாமல் விட்டதற்கு அந்தந்த சந்தர்ப்பங்களில் தனித்த காரணங்கள் இருக்கலாம். “வேண்டாம், இவரைப் பற்றிய இந்த விஷயங்களைச் சொல்லி, அவர் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பெயரைக் கெடுக்க வேண்டாம்” என்ற ஸ்வதர்மம் காரணமாக இருக்கலாம். “இந்த சம்பவத்தைப் பற்றி இந்த இடத்தில் இப்போது சொல்லவேண்டாம்” என்ற இடம் பொருள் ஏவல் காரணமாக இருக்கலாம். அவரிடம் சொல்வதற்கு நிறையவே இருக்கும். சங்கீத உலகம் பற்றிச் சொல்வதற்கும் நிறைய அவரிடம் உண்டு. அங்கும் அவரது சினேக வட்டம் மிகப்பரந்தது. சாதாரணமாக இது பற்றியெல்லாம் சொல்லி அவர் அலட்டிக் கொள்வதில்லை. அதுவும் ஒரு வகை ரசனை தான்.”
இதுவரை வெ.சா. எனக்கு பத்துத்தடவைகளுக்கு மேல் போன் செய்ததில்லை. நான் தான் அவரை ஆயிரம்தடவைகளுக்கு மேல் போன் ’செய்து வம்புக்கிழுத்திருக்கிறேன். ‘யோவ்! எப்பவும் நான் தான் போன் பண்ணணும். ராங் நம்பராகவாவது ஒருதடவை கூப்பிடுமேய்யா’ என்றால் சிரித்து மழுப்பிவிடுவார். ஒவ்வொரு தடவையும் அரைமணி நேரத்துக்குமேல் பேசுவோம். மனைவி சரோஜாவின் மறைவு அவரை வெகுவாக பாதித்தது. தனியாக ஒரு வெந்நீர் கூட வைக்கத்தெரியாதவர் வாழ்நாள் முழுவதும் தன் தினசரித்தேவைகள மனைவியின் சேவைகளிலும் அரவணைப்பிலுமே பெற்று வளர்ந்தவர். “எப்படீய்யா தனியா சமைச்சிண்டு மேனேஜ் பண்றீர்!” என்கிற பிரமிப்பு அவருக்கு எப்போதும் உண்டு.
அவர் என்னிடம் கேலிபேசி என்னைக்கிண்டலடிக்க பல விஷயங்கள் வைத்திருந்தார். அதில் ஒன்று: நாடகத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அசட்டுத்தனமான வியாபாரப்படங்களில் ஹீரோ தாத்தா, ஹீரோயின் தாத்தா, முதலமைச்சர் இப்படி தலையைக்காட்டுவது! அதிலும் ‘பாபா’ படத்தில் ரஜினியுடன் நடித்ததும், முதலமைச்சராக வந்ததும்  அவரது கோபத்தை எப்போதும் கிளறும்.  நக்கலாக ஏதாவது சொல்வார். நானும் பதிலுக்கு யோவ்! அவன் தான்யா என்னை மரியாதையா ‘ஐயா….ஐயா’னு எப்பவும் கூப்பிடுவான்.பாபா’ படம் சரியாப்போகலைனாலும் கேட்டதுக்கு மேலே இரண்டுமடங்கு சன்மானம் கிடைச்சுது. நடிகர்களில் ஒரு நல்ல மனுஷன்!” என்று சொல்வேன்.
நாளைய தமிழிலக்கிய உலகம் வெ.சாவை எப்படி தன் நினைவில் நிறுத்தி வைத்துக்கொள்ளப்போவதென்று தெரியவில்லை. He was the most misunderstood person in Tamil literary World! நான்கு கண்பார்வையற்றோர் (குருடர்கள்) யானை பார்த்த கதை தானோ?
ம்ம்ம்ம்……இன்னொரு நல்ல நண்பரையும் கரை சேர்த்துவிட்டேன்!
–உயிர்மை 2015 நவம்பர் இதழில் வெளி வந்தது.

0 comments:

Post a Comment