Thursday, January 21, 2016

புத்தாண்டு வாழ்த்துகள்!

எல்லா வருடங்களைப்போலவே இந்த வருடமும் ஓடிப்போய்விட்டது. கடந்த வருடங்களைப்போல சில கசப்பு, பலபல இனிப்பான தருணங்களையும் தந்திருக்கிறது.சோதனைகளென்ன என்று திரும்பிப்பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் எதுவுமே தென்படவில்லை.
சின்னச்சின்ன சாதனைகளைச்சொல்லுவதானால், ‘அசட்டுத்தனமான ஹீரோ/ஹீரோயின் தாத்தாவாக நடிக்கமாட்டேன்!’ என்ற இருவருட பிடிவாதத்திலிருந்து விலகி, ‘நம்ம பசங்க’ எஸ்.பி. மோகன் இயக்கும் ‘பஞ்சு மிட்டாய்’. பனீந்திரனின் ‘ஆயா வடை சுட்ட கதை!’ திரைப்படங்களிலும், ஓரிரு குறும்படங்களிலும் தலையைக்காட்டினேன். திருப்தியாகவே இருந்தது.முக்கியமாக அம்ஜத் மணிமேகலை போன்ற நல்ல நண்பர்களுடன் இணைந்து, நாடகத்துக்காக ’சென்னை அரங்கம்’ என்ற அமைப்பை பிள்ளையார் சுழியிலிருந்து தொடங்கி, முதல் நாடகமாக சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகத்தை ஸ்பான்சர்கள் எதுவுமில்லாமல் கைக்காசு போட்டு, கலைத்தாய்க்கு சேவை செய்ய முடிந்தது!!
யதார்த்தா பென்னேஸ்வரன் போன்ற இளைஞர்களிடம் அடிக்கடி நான் சொல்லும் ”நீ கைக்காசு செலவழித்து நாடகத்தாய்க்கு சேவை செய்யுனு யாரும் அழல்லே. பேசாமெ இரு! என்கிற என் பொன்மொழி என்னிடமே பலிக்கவில்லை! ஆனால் நாடகத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பும், பாராட்டு மழைகளும், என்னை மனம் குளிரச்செய்தன! மேடைக்கு புதியவர்களான என் மாணவர்களை தயாரித்து நடிக்கச்செய்தது உண்மையிலேயே மனதுக்கு நிறைவும், உற்சாகமும் அளித்தது! யாருமே சோடை போகவில்லை! I can legitimately take the full credit as the Director of Kadavul Vandhirundhaar!’I have no regrets in 2013.வரப்போகும் 2014-ம் ஆண்டை எட்டிப்பார்க்கும்போதும் சந்தோஷமே மிஞ்சுகிறது.
நான் இதுவரை எழுதிய எல்லாக்கட்டுரைகள், முகநூலில் அவ்வப்போது கிறுக்கியவை எல்லாமாக ப. இளம்பரிதியால் முழுமையாக, அழகாகத்தொகுக்கப்பட்டு, வரும் சென்னை புத்தகக்கண்காட்சியில், ‘நிற்பதுவே…நடப்பதுவே…. பறப்பதுவே….’ என் ஒரே புத்தகமாக உங்கள் கைக்கு எட்டவிருக்கிறது! வம்சிக்கும் ஷைலஜாவுக்கும் என் நன்றி!வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதி ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகம் திருவண்ணாமலை எஸ்.கே.பி. திறந்தவெளி அரங்கில் மேடையேறவிருக்கிறது!நான் ‘யாண்டு பலவாக நரையுடன் ஆகுதல் யாங்காகியர் என வினவுதிராயின்’ என் குடும்பத்தாரும், அகண்டு பரந்த என் நண்பர்கள் குழாமும் தான் காரணம்!இப்படியே சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப்போகிறேனே!
எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
God bless you!
பாரதி மணி
31.12.2013.

0 comments:

Post a Comment