Monday, February 1, 2016

பெரியார்  படத்தின் இயக்குநர் திரு. ஞான. ராஜசேகரன் அடிக்கடி என்னைப்பற்றி சொல்லுவார்:’சார், நீங்க எல்லாத்தையுமே திரு. எம்.ஜி.ஆர். சிவாஜி இவர்களின் படத்தின் Point of View-விலேயே பார்க்கிறீர்கள்’ என்று. அது உண்மை தான். நான் தீவிர சினிமா ரசிகனாக மாறிய காலகட்டங்கள் அவை.

அப்படித்தான் திரு. பாரதி மணி அவர்களை குருக்ஷேத்திரம் படத்தின் படப்பிடிப்பில், பட இயக்குநர் திரு. ஜெயபாரதி அறிமுகப்படுத்தி வைத்தபோது -- ஆனந்தஜோதி திரைப்படத்தில் திரு. எம்.ஜி.ஆர். பெயர் ஆனந்த். ஆனால் ‘மணி பாரதி’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுவார் அது ஏனோ ஞாபகம் வந்தது. பாரதி மணி பைப் (Pipe) பிடிக்கும்போது, எனக்கு கெளரவம் படத்தில் சிவாஜி பைப் பிடித்த ஞாபகம் வந்துவிடும். பாரதி மணி அவர்களை முதலில் சந்தித்தபோது, எனக்கு ஒருசேர  திரு. எம்.ஜி.ஆர்., சிவாஜியின் ஞாபகம் வருவதை தவிர்க்க இயலவில்லை. இது பாரதி மணிக்கு அட்வைஸ்: மணிரத்னம் ஸ்டைலில் சொல்வதானால், ‘மணி சார், இதை நிறுத்தணும் ....... உடனே நிறுத்தணும்.... இப்பவே நிறுத்தணும் நீங்க பைப் பிடிக்கறத.... ஏன்னா இது எவ்வளவு கெடுதல்னு உங்களுக்கே தெரியும்!’

பிரபலமான நடிகனுக்கு எப்போதுமே ஒரு வசதி உண்டு. ஆர்வமும், திறந்த மனதும் இருந்தால், அறிவுசார் விஷயங்களை நோக்கி இவன் போகவேண்டாம். விஷயங்கள் இவனைத்தேடி வரும் தேவை திறந்த மனது. அதிகமாக படிக்கும் பழக்கமில்லாத எனக்கு நண்பர்கள் அனுப்பும் புத்தகங்களையும், கட்டுரைகளையும் வேறு வழியில்லாமல் படிக்கும்போது கூட பல விஷயங்களை கற்றுக்கொள்ளமுடிகிறது.

பாரதி மணி அவர்களின் கட்டுரைகளில், அவர் தில்லித்தெருக்களில் திரு. அண்ணா அவர்களுடன் நடந்ததைப் படித்தபோது, நானும் அவர்களுடன் கூட நடந்த அனுபவம். திரு. ராஜீவ் காந்திக்கு சுங்கப்பரிசோதனை நடந்த போது, நானும் மணி சாருடன் இருந்த அனுபவம். நேருஜி, இந்திரா காந்தி அம்மையார், ஷேக் முஜீபுர் ரஹ்மான் பற்றிய கட்டுரைகளிலும் நானும் கூட இருந்த அனுபவங்கள். நடிப்பின் ஆர்வத்தை திரு.சிவாஜியின் படங்கள் தூண்டியதைப்போல, படிப்பில் ஆர்வத்தை பாரதி மணியின் எழுத்துக்கள் தூண்டின. அதன் பிறகுதான் நான் உயிர்மைக்கு சந்தா கட்டி படிக்க ஆரம்பித்தேன்.

ஓர் உயிர்மை  கட்டுரையில், ‘இவ்வருட சிறந்த நடிகர் விருது (National Award)  இந்த முறை பாரபட்சமில்லாமல் தேர்வு இருந்தால், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு  போன்ற படங்களில் சிறப்பாக நடித்த என் நண்பர் சத்யராஜுக்கு தான் கிடைக்கவேண்டும்’ என்று பாரதி மணி எழுதியிருந்த விஷயம் எனக்கு இவர் மூலமாக தெரியவில்லை. அந்தக் கட்டுரையை படித்த எடிட்டர் திரு. லெனின் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். இது பாரதி மணியின் தன்னடக்கத்துக்கும், சுயவிளம்பரம் தேடாத பரந்த மனதுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. பொதுவாக யாராவது யாரையாவது பற்றி சிறப்பாக எழுதினாலோ, தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு இவர்களே உடனே தெரிவிப்பது தான் சினிமா உலகில் வழக்கம்!

ஒரு நடிகன் relaxed-ஆக வசனங்களுக்கிடையில் தேவையான இடைவெளிவிட்டு, நிதானமாக தெளிவாக பேசுவது எளிதல்ல. முப்பது வருடங்களுக்கும் மேலாக நடித்துக்கொண்டிருக்கும் எனக்கு இதன் சிரமமும் அருமையும் தெரியும். நம்மையும் அறியாமல் வேக வேகமாக வசனங்களைப் பேசிவிடுவோம். பாரதி மணியிடம் இருக்கும் easy and comfortable body language,  measured and relaxed dialogue modulation இதையெல்லாம், குருக்ஷேத்திரம் படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்தபோது அனுபவித்து ரசித்திருக்கிறேன். என்ன இருந்தாலும் தில்லி National School of Drama-வில் கற்றுத்தேர்ந்தவரல்லவா! படப்பிடிப்பு இடைவேளைகளின் போது இவருடன் பேசிக்கொண்டிருப்பது ஒரு தனி அனுபவம்.

என்னைப்போன்ற வழுக்கைத்தலையர்களுக்கு ஒரு பஞ்ச் டயலாக் யோசித்து வைத்திருந்தேன். அது: ‘நாங்களெல்லாம் தலைக்கு மேலே (முடி) இருக்கிறத நம்பி வாழறவங்க இல்லே....தலைக்கு உள்ளே இருக்கிறத நம்பி வாழறவங்க”. ஆனால் திரு. பாரதி மணி அவர்களுக்கு தலைக்கு மேலேயும் சிறப்பாக இருக்கிறது......தலைக்கு உள்ளேயும் சிறப்பாக இருக்கிறது!

திரு. பாரதி மணி தில்லியில் இருந்த காலத்தில் என்னால் தில்லி போகமுடியவில்லையே என்ற ஏக்கம் அவருடைய கட்டுரைகளைப்படித்தபோது மனதில் எழுவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை.

இவர் நிகம்போத் சுடுகாட்டில் இறந்தவர்களுக்கு ஆற்றிய பணிகள், இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் ஆற்றிய பணிகளை விடவும் சிறப்பானது..............

--நடிகர் சத்யராஜ்.


                           ****                               *****                       ****

0 comments:

Post a Comment