க.நா.சு. தமிழின் இலக்கிய வரலாற்றில் பிரும்மரிஷி
பிரதிஷ்டை பெற்றவர். அவரது புதல்வியை மணந்தவர், திருவனந்தபுரத்துக் காரர் எனும்
அறிமுகத்துடன் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இங்கே எனது சாலை
வட்டார வியாபாரஸ்தலத்தில் வந்து படியேறினார் இப்போதைய பாரதி மணி. எங்கள் பேச்சு
அப்போது அவர் படித்து முடித்திருந்த எனது நாவல் கிருஷ்ணப்பருந்து பற்றியே
இருந்ததாக ஞாபகம். அதன்பிறகு திருவனந்தபுரம் வரும்போதெல்லாம், நான் கடையில் இல்லாத
சமயமாகப் பார்க்க வருவார்.
சமீபத்தில் பாரதி மணி உயிர்மை, தீராநதி போன்ற
இதழ்களில் எழுதி வெளிவந்த கட்டுரைகளைப் படிக்க வாய்ப்புக்கிடைத்தது. ராஜீவ்
காந்தி, அன்னை தெரசா, சங்கீத விமர்சகர் சுப்புடு, ரோஜாவின் ராஜாவான நேரு, அருந்ததி
ராய் இவர்களைப் பற்றியெல்லாம் நகல் தரிசனம் போல கட்டுரைமணிகளுக்குப்புறம்பாக,
நாதஸ்வரம் பற்றி, பங்களாதேஷ் தமிழர்கள் பற்றியெல்லாம் விரிவாக, ஆழமாக,
அர்த்தஞானமுடன் எழுத்துமணிகள்......நிறைவில் நெகிழ்ந்துபோனதற்கு இன்னும் முக்கிய
காரணமொன்றுண்டு......அது:
இங்கே திருவனந்தபுரத்தில் –
நான் வாழ்ந்து முட்டையிட்ட தமிழ் உலகின் – திருவிதாங்கூர்
ராஜவம்ச ஆட்சியின் மகத்வ வித்தாரங்கள், பத்மநாபர் ஆலய முறைஜப, லக்ஷ தீபோத்ஸவம்
பற்றியெல்லாம் -- ஏதோ நானே எழுதியது போல – இந்த பாரதி மணி,
‘நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்’ எனும் தலைப்பில்
கட்டுரைச்சித்திரம் தீட்டியதைப் பார்த்தபோது, அறுபதிற்கும் மேல் ஆண்டுகள்
நகர்ந்துவிட்ட சுந்தர சொப்பனங்கள் எல்லாம் அலை வீசி குளிர் நினைவுகளாக மனதில்
புளகம் கொண்டன. அவரது சிறுவயது திருவனந்தபுரம் நினைவுகளை எப்படி அசை
போட்டிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.
புத்தகங்கள் படித்த அறிவின் பிரதிபலிப்புகளாக கட்டுரை
தீட்டிவிடலாம். ஆனால் பட்டறிவின் இழைகளை நேர்த்திச்சித்திரங்களாக எழுத்தில்
அடுக்குவது நிபுணத்துவ ஞானத்தால் மட்டுமே சாத்தியமானது. பாரதி மணி இந்த
நினைவுக்கட்டுரைகளை அழகிய இலக்கிய மணிமாலைகளாக கோர்த்துத்தந்துள்ளார். பாரதி மணி
ஒரு பூ மரம். அவரது இந்த இலக்கியப்பணி இன்னும் இன்னும் பூத்துக்குலுங்க என்
வாழ்த்துக்கள்...........
--எழுத்தாளர் ஆ. மாதவன்.
**** ***** ****
RSS Feed
Twitter
4:56 PM
பாரதி மணி
Posted in
0 comments:
Post a Comment