Monday, February 1, 2016

மணி அவர்களை நான் இரண்டு வகையில் அறிவேன். ஒன்று நடிகராகவும் இன்னொன்று க.நா.சு.வின் மாப்பிள்ளையாகவும். முதலில் அவரை நடிகராகத்தான் அறிந்தேன். டில்லியின் நாடகக்காரர்களில் ஒருவராகவும் நாடகக்காரரான பென்னேஸ்வரரோடு சம்பந்தப்பட்டவராகவும் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் பெரும்பங்கு கொண்டவராகவும் அதில் நடித்தவராகவும் அறிவேன்.

அதற்கு முன்னதாகவே க.நா.சு.வின் மகளை சென்னையிலேயே அறிவேன். நான் மட்டுமல்ல, கவிஞர் சி.மணியும் நானும் அவர் சிறு பெண்ணாக நல்லதம்பி தெருவின் இரண்டாம் இலக்கமிட்ட வீட்டில் பாவாடை சட்டை அணிந்து சித்திரப்பாவையாக வாயில் கதவைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருப்பதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். அப்போது க.நா.சு எனக்கு பெரிய பழக்கமில்லை. அவ்வளவு சிறிய வயதில் அடையாளம் தெரிந்துகொண்ட 'பாப்பா' என்ற  செல்லப் பெயரைக் கொண்ட தன் மகளோடு க.நா.சு டில்லி போய்விட்டார். அதற்கு முன்பு அவர்கள் 30 வாலாஜா சாலைக்கு குடி வந்திருந்தார்கள். அங்கிருந்துதான் க.நா.சு டில்லிக்கு குடி பெயர்ந்துவிட்டார். அந்த காலகட்டத்தில் அவர் மகளை நான் கண்டதில்லை. பிறகு நாங்கள் க.நா.சுவின் 30, வாலாஜா சாலை வீட்டுக்கு குடிவந்தபோது க.நா.சுவின் குடும்பத்தோடு எங்களுக்கு மிக நன்றாக உறவுண்டாகிவிட்டது. அந்த உறவில் எனக்கு நன்கு அறிமுகமான க.நா.சுவின் பெண்ணும் டில்லி மணியும் நாடகத்தில் நடிப்பதால் உண்டான உறவில் காதலில் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. கட்டிடங்களில் உட்புறங்களை (Interior Designer) வடிவமைப்பில் வல்லவராக இருந்த க.நா.சுவின் மகள் நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார் என்பது எனக்கும் என் மனைவிக்கும் என் மனைவியின் பாட்டிக்கும் தெரியும். எங்கள் மகன்களும் அறிவார்கள். எனவே, எஸ்.கே.எஸ் மணியோடு உண்டான உறவில் ஓர் அன்னியத்தன்மை இல்லாமல் போய்விட்டது.

அவரை நடிகராக அறிந்ததின் தன்மை ஒரு தகவல் அளவிலேயே இருந்தது. டில்லியில் அவர் நடித்துக்கொண்டிருந்ததை நான் கண்டதில்லை. 1973-ல் முதல் முறையாக அவருடைய நாடகம் சென்னைக்கு வந்தபோது அதைப்போய்க் காணும் நலத்தில் நான் இல்லை. நான் வேலை செய்து கொண்டிருந்த டாஃபேயில் என்னைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடகத்துக்கு அழைத்தார்கள். இந்திரா பார்த்தசாரதியும் அழைத்தார். நான் வரமுடியாத நிலையில் இருப்பதாகச் சொன்னேன். அப்படி என்னய்யா அது வரமுடியாத நிலை என்றுகூட கிண்டல் செய்தார்கள். அப்போது நான் அவர் நடித்ததைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவரை முதல் முறையாக நடிகராக மேடையில் கண்டது அவர் சி.சு.செல்லப்பாவின் முறைப்பெண் நாடகத்தை சிற்றரங்கத்தில் மேடையேற்றியபோதுதான். அது அப்போது மிகவும் பிரபலமான நாடகமாக விமர்சனத்தைப் பெற்றிருந்தது. அவர் சிற்றரங்கத்தின் மேடையில் தோன்றியது இன்னமும் நினைவில் இருக்கிறது.

நான் டில்லிக்குப் போயிருந்தபோதெல்லாம் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் இரவு நேரங்களில். அவருடைய காரில் அவர் நாங்கள் கூடும் இடத்துக்கு வருவார். எப்போதும் அவருடைய காரில் 'சோடா மேக்கர்' இருக்கும். கையில் பாட்டிலுடன் வருவார். நாங்கள் நல்ல போதையில் இருப்போம். அவருடைய அளவு காரை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் நிதானமுள்ள அளவு.  அப்படிப்பட்டவர் இன்று மதுவின் வாசனை கூட அருகில் போகாதவராக மாறிவிட்டார்.

டில்லியில் நல்ல உத்யோகத்தில் இருந்தவர். நன்றாகச் சம்பாதித்தவர். டில்லியில் இரண்டு மூன்று வீடுகளுக்குச் சொந்தக்காரராக இருந்தவர். அவற்றை எல்லாம் விட்டுவிட்டு இன்று சென்னைக்குத் திரும்பிவிட்டார். அவருடைய இரண்டு பெண்களும் மிகவும் உயரிய நிலையில் இருக்கிறார்கள். அவரோ நடிப்பின்மேல் அபரிமிதமான காதல் கொண்டவராக சென்னையில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் தோன்றும் சினிமாக்களை நான் எப்படியாவது பார்த்துவிடுகிறேன். ஒழுங்காக தியேட்டருக்குப்போய் சினிமா பார்க்கும் பழக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே விட்டுவிட்ட நான் அவருடைய காட்சிகளை எப்படியாவது பார்த்துவிடுகிறேன். மிகவும் அற்புதமான குணசித்திர நடிகரான அவரை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த என் மருமகள் கேட்டாள் எஸ்.கே.எஸ் மணியுடன் தொடர்பு இருக்கிறதா என்று. அப்போது அவர் நடித்த ஒரு விளம்பரக் காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அவருடைய தோற்றம் அந்த காட்சியில் எவ்வளவு அழுத்தமாகப் பதிந்துள்ளது. நான் என் மருமகளுக்குச் சொன்னேன். இப்போதுகூட அவர் தொலைபேசியில் பேசினார் என்று. என்னுடைய ஆளுமையில் உள்ள பலவீனம் என் நினைவில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஒருவரிடம் அதை அப்படிப் புலப்படுத்தாததுதான். நட்போடு கூடிய அற்புதமான இயல்புகள் கொண்ட மணி அவர்கள் பெரிய குணச்சித்திரப் பாத்திரங்களில் பெரிய அளவில் வெளியில் தெரிய வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.


அவர் நிறைவோடு பூரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வலுவான மனிதர் என்பது என் மனதில் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது............

--கூத்துப்பட்டறை ந. முத்துசாமி.

0 comments:

Post a Comment