Monday, February 1, 2016

அருந்ததி ராய் எழுதி ப்ரதீப் கிருஷன் இயக்கிய The Electric Moon என்ற ஆங்கிலப்படத்தை பதினைந்து ஆண்டுகளுக்குமுன் பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தபோது, மனதில் நின்ற பாத்திரங்களில் சில நிமிடங்களே வரும் ஒரு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ஒன்று. பாரதி மணி நடித்திருந்தார். படம் முடிந்தவுடன், கிரெடிட்ஸில் S.K.S. Mani என்று குறிப்பிடப்பட்டிருந்த்தைக் கவனித்தேன். பல வருடங்கள் கழித்து, ‘பாரதிபட்த்தில் தோன்றி அவர் புகழடைந்தபின், அவரை சந்தித்தபோது தான் அதைப்பற்றி தெரிந்துகொண்டேன். அதன் பின்னர் ஜெயபாரதி இயக்கிய நண்பா…….நண்பா!படத்தில் கிறிஸ்தவ பாதிரியார் வேடம் தாங்கி, அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். கல்லறைத்தோட்டத்தில் ஒரு காட்சி. தன் உயிர்த்தோழன் லாரன்ஸின் அடக்கம் முடிந்தபின், வந்தவர்களெல்லாம் போனபிறகு, கதாநாயகன் ஜோஸப்பும் பாதிரியாரும் மட்டும் இருக்கிறார்கள். வாழ்தல் சாதல் பற்றிய ஒரு அடிப்படைக்கேள்வியை எழுப்புகிறார் கதாநாயகன். ‘நேற்று இருந்தான், இன்று போய்விட்டான், இதற்கெல்லாம் என்ன அர்த்தம் ஃபாதர்………?என்று அழுதுகொண்டே கேட்கிறார். நாம் எல்லோரும் கேட்கும் கேள்வியும் அது தானே! பாதிரிக்கும் விடை தெரியாதே! பதில் சொல்லமுடியாத கேள்வியை எதிர்கொள்ளும் வேதனையில் அருட்தந்தையும் கண்ணீர் சிந்துகின்றார். இந்த உச்சக்கட்டக்காட்சியில், பாரதி மணியின் நடிப்பு நம் மனதைப்பிழிகின்றது. ‘விடை தெரியாத புதிர் இதுஎன்பதை தம் முகபாவத்தின் மூலம் காட்டுகின்றார். தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய, மோடித்தனமான (stylized) நடிப்பைத்தவிர்த்து, தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தனித்தன்மையைக் கொடுக்கின்றார். தனது ஆளுமையை விட்டுவிலகி, பாத்திரத்தின் ஆளுமையை வெளிப்படுத்துவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார். இது துல்லியமாக வெளிப்படுவது அம்ஷன் குமார் இயக்கிய ஒருத்தியில் தென் தமிழ்நாட்டுக்கிராமமொன்றில் வாழும் ஓர் இதயமுள்ள ஊர்ப்பெரியவராக கீதாரியாக பாரதி மணி தோன்றுகிறார். கரிசல் காட்டுத்தமிழை அழுத்தமாக உச்சரித்து, அதற்கு உயிரூட்டுகிறார்.

இவரது நடிப்பு வளர்ந்த்து நாடகமேடையில் என்றாலும், இந்த இரு ஊடகங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்த களைஞன் என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கின்றார் மணி. அமெரிக்க சினிமாவில் உப பாத்திரங்களில் நடித்தே திரைவரலாற்றில் இடம் பிடித்தவர்கள் சிலர் உண்டு. எட்வர்டு ஜி. ராபின்ஸன் (நினைவிருக்கிறதா Mackenna’s Gold? ),  மார்ட்டின் பால்சாம் ( Psycho-வில் துப்பறிபவராக) போன்றவர்கள், பாரதி மணியைத் திரையில் காணும்போதெல்லாம், இந்த இருவர் ஞாபகம் எனக்கு தவறாமல் வருவதுண்டு!........................

--சு. தியடோர் பாஸ்கரன்.


                         ******                                                 ******                                                                                                                                                                                ******

0 comments:

Post a Comment