Monday, February 1, 2016


We cannot change our memories, but we can change their meaning and the power they have over us" - David Seamands

சிலரின் அறிமுகங்கள் முதல் சந்திப்பிலே நெருக்கம் கொண்டுவிடுகின்றன. அப்படி அறிமுகமானவர் தான் டெல்லி மணி. அப்போது அவர் பாரதி மணியாக அவதாரம் எடுக்கவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக சுபமங்களா  நாடகவிழாவின் போது க.நா.சு.வின் மருமகன் என்று கோமல் சுவாமிநாதன் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

வெளிப்படையான பேச்சும், எப்போதும் முகத்தில் ததும்பி நிற்கும் சிரிப்பும், பைப் பிடிக்கும் கம்பீரமும் மனத்தடைகள் அற்ற உரிமை கொள்ளலும் அவரிடம் நெருக்கம் கொள்ள வைத்தன. நவீன நாடகம், இந்திரா பார்த்தசாரதி, அல்காஸி என்று அன்றையப் பேச்சு நீண்டது. பாரதி மணியின் சிறப்பு நாமாக கேட்காமல் எதைப்பற்றியும் அவர் ஒரு போதும் பேசுவதில்லை. ஆனால் அவர் பேசத்துவங்கினால் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உருவம் நம் கண்முன்னே வளரத்துவங்கி விஸ்வ ரூபம் கொண்டுவிடும். நவீன நாடகம், அரசியல், சினிமா. இசை, இலக்கியம், பயணம் என்று எவ்வளவு அனுபவம், எத்தனை மனிதர்களை அறிந்திருக்கிறார். எப்படி இந்த மனிதன் இத்தனை அமைதியாக இருக்கிறார் என்று வியக்க வைக்கும்.

தன்னை பகடி செய்து கொள்வதும், தனது அனுபவங்களை தன்னிலிருந்து பிரித்து விமர்சனம் செய்வதும் உயர்ந்த கலைஞர்களுக்கே சாத்தியமானது. அது பாரதி மணியிடமிருக்கிறது. சிரிப்பும், கேலியும், பகிர்ந்து கொள்ளப்படாத உள்ளார்ந்த துக்கமும், நினைவுகளை துல்லியமாக வெளிப்படுத்தும் நுட்பமும் அவரிடம் எப்போதுமிருப்பவை. மிகத் தாமதமாக அவர் எழுத்தாளராகியிருக்கிறார். இதையும் ஒரு விபத்து என்று சொல்லியே அவர் சிரிக்கிறார். உண்மையில் அவரது மனதில் உள்ளதில் ஒரு கைப்பிடியளவு கூட அவர் இன்னும் எழுதவில்லை.

பெரும்பான்மையினருக்கு அனுபவம் நேர்கிறது. சிலர் மட்டுமே அனுபவத்தை உருவாக்குபவர்கள். அதை தேடி அலைபவர்கள், நேர்கொண்டு அதன் சுகதுக்கங்களோடு தன்னை கரைத்து கொள்கின்றவர்கள். பாரதி மணி அப்படி ஒருபக்கம் டெல்லி சுடுகாட்டு மனிதராக வாழ்ந்திருக்கிறார் இன்னொரு பக்கம் டெல்லி சுல்தான் போல லண்டனில் பிரதமர் மொரார்ஜிக்கு பக்கத்து அறைவாசியாகவும் இருந்திருக்கிறார்.

டெல்லி நினைவுகளால் பீடிக்கபட்ட நகரம். அந்த நகரின் ஏதோவொரு வீதியின் பனிபடர்ந்த பின்னிரவில் நீங்கள் ஷாஜகானையோ, ஔரங்கசீப்பையோ கூட வீதியோரம் குளிர்காய்ந்தபடி காண முடியும். காரணம் அடங்க மறுத்த நினைவுகள் அந்த நகரில் பகலிரவாக அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த ஊரில் வசித்தும் ஒரு மனிதன் எழுத்தாளன் ஆகவில்லை என்றால் அவனது புலன்கள் பழுதடைந்து விட்டிருக்கிறது என்றே அர்த்தம்.

பாரதிமணி வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர். நல்ல இசை, புத்தகம், சூடான காபி, நண்பர்கள், உலக சினிமா, நீண்ட தனிமை என்று அவரது வாழும் முறை அவர் விரும்பி உருவாக்கி கொண்டது. எல்லா அனுபவங்களையும் போலவே அவருக்கு தான் ஒரு எழுத்தாளர் ஆனதும் ஒரு அனுபவமே. ஆனால் வாசகர்களுக்கு அவை வெறும் அனுபவம் மட்டுமில்லை. வாழ்க்கையை அருகில் சென்று தோழமையுடன் கைகுலுக்கவும், அதன் விசித்திரங்களை கண்டு நகைக்கவும், வலிகள், வேதனைகளை எதிர்கொண்டு முன்செல்லவும் கற்றுத்தரும் பாடங்கள்.

தன்னை பெரிது படுத்திக் கொள்ளாமல் இருப்பதையே இயற்கை தன் ஒவ்வொரு துளியிலும் கற்றுத் தருகிறது. மலைகள் ஒரு போதும் சப்தமிடுவதில்லை. நம் குரலைத் தான் எதிரொலிக்கின்றன. தன்னை அறிந்த மனிதர்களும் ஒருவகையில் அப்படியே. பாரதிமணி அவர்களில் ஒருவர். இப்படி எவராவது தன்னைப் பாராட்டுவதை கூட அவர் பரிகாசமே செய்யக்கூடும். அது தான் அவரை இத்தனை அழகாக எழுத வைக்கிறது...........

--எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.


.                           ****              *****                              ****

0 comments:

Post a Comment