Monday, February 1, 2016

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் முதன்முறையாக நான் டெல்லி சென்றிருந்தபோது, எஸ்.கே.எஸ். மணியின் அறிமுகம் கிடைத்தது. அவர் க.நா.சு.வின் மாப்பிள்ளை என்பது எனக்குத்தெரியும். நான் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி என்பதை அறிந்து மிகவும் நெருக்கமானார். நம்பியை அவருக்கு நன்றாகத்தெரியும். எழுபதுகளில் கிருஷ்ணன் நம்பியைப் பார்க்க பூதப்பாண்டி வந்திருக்கிறார்.

அதன்பிறகு பல வருடங்களுக்கு எங்களுக்குள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. பாரதி மணியாக சென்னை வாசம் மேற்கொண்டு சாலிக்கிராமம் பகுதியில் வசிக்க ஆரம்பித்தபிறகு, அருகிலிருந்த எனக்கு அவரை சந்தித்துப்பேசும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘வாரும், ஓய்!’ என்பார்.

இருவரும் நாகர்கோவில்வாசிகள் என்பதில் எங்களுக்கு சில செளகரியங்கள் இருந்தன. அப்பகுதியைப்பற்றிய பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. மேலெழுந்த பார்வையில் சிலர் அவரை ஒரு சீரியஸான ஆசாமியாகப் பார்க்கத்தோன்றும் தோற்றம். ஆனால் அவரிடம் அபாரமான நகைச்சுவை உணர்வு இருப்பதை கண்டுகொள்ள முடிந்தது.

ஏராளமான வி.ஐ.பி.க்களை அவர் தெரிந்துவைத்திருந்தார். உயிர்மை ‘நினைவில் அசையும் திரைகள்’ கட்டுரைகளில் வெளிவந்த அனேக விஷயங்கள் நாங்கள் ஏற்கனவே பேசிக் கொண்டவைகள் தாம். ஒருமுறை எனது கட்டுரை ஒன்றைப்படித்து விட்டு, ‘தொடர்ந்து எழுதும், ஓய்’ என்றார்.

அவரிடமிருந்த அனுபவங்களை பத்திரிகையில் பதிவு செய்ய நானும் அவரைத்தூண்டியதாக நினைவு. அதன்படி செய்து அவர் வெற்றி பெற்றிருக்கிறார். உயிர்மையில் அவர் பதிவு செய்தது அவர் அறிந்து வைத்திருப்பதில் வெறும் பத்து விழுக்காடுகள் தான் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

மணிக்கு சுவையான உணவுப்பண்டங்களில் அதிலும் பாரம்பரிய உணவு வகைகளில் அலாதிப்பிரியம் உண்டு. எது எது எப்படி எப்படி இருக்கவேண்டுமென்பதையெல்லாம் துல்லியமாக அவர் விவரிப்பதை கேட்கவே சுவையாக இருக்கும். சமையல் கலையிலும் வல்லவரான அவரது கைமணம் அலாதியானது. பலதடவை சாப்பிட்டுப்பார்த்த எனக்குத்தெரியும். அவர் கர்நாடக இசையில் ஒரு பைத்தியம்.

பொதுவாகவே எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. இருந்த சிலரும் நண்பர்களைப்போல் நடித்துவிட்டு போய்விட்டார்கள். பாரதி மணி திரையிலும் நாடகமேடையிலும் மட்டுமே நடிக்கத்தெரிந்தவர். எனக்கு இப்போது நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் இருவரில் பாரதி மணிக்கு முக்கிய இடம் உண்டு. து போதாதா?.............

--நண்பர் கிருஷ்ணன் வெங்கடாசலம்.

                  ****                                  *****                           ****

0 comments:

Post a Comment