Friday, October 6, 2017


புள்ளிகள் கோடுகள் கோலங்கள்—பாரதி மணி  இப்புத்தகம் ஒரு தொகுப்புகளின் தொகுப்புபாரதிமணியின் கட்டுரைகள், பதிவுகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், உரைகள், கடிதங்கள், மதிப்புரைகள் ஆகிய அனைத்தையும் வகைவாரியாகத் தொகுத்து அவற்றை ஒரே தொகுப்பு நூலாக வம்சி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

பார்வதிபுரம் மணி அல்லது தில்லி மணி அல்லது S.K.S.மணியாக இருந்தவர் பாரதி (2000) திரைப்படத்தில் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயராக நடித்துப் பரவலாக அடையாளம் காணப்பட்டதால் அத்திரைப்படப்பெயரை முன்பெயராக இணைத்து 'பாரதி'மணி ஆகியிருக்கிறார். 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி போன்றபெயர்கள் காலப்போக்கில் தங்கள் ஒற்றைமேற்கோள்குறிகளை இழந்து அவர்களின் இயற்பெயர்களாகவே ஆகிவிட்டதைப்போல 'பாரதி'மணியும் சிலவருடங்களில் பாரதிமணி ஆகிவிட்டார். ஒருவருக்கு அறுபது வயதுக்குமேல் புதிதாக ஒருபட்டப்பெயர் கிடைப்பதும் அது இயற்பெயரோடு ஒன்றிவிடுவதும் ஓர் ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் 1956ல் தக்ஷிணபாரத நாடகசபாவைத் தொடங்கி அதில் நடிக்கவும் தொடங்கி சுமார் இரண்டாயிரம் நாடகங்கள் போட்டு நடித்தவருக்கு, லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் குரல்பயிற்சியில் டிப்ளோமா பெற்றவருக்கு ஒரு சினிமாவின் சிறுவேடம்தான் இன்றைய முகவரி ஆகியிருக்கிறது. சினிமாவின் வீச்சு அப்படி என்று ஆப்டிமிஸ்டிக்காக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்தன்னையொரு incorrigible optimist ஆக அறிவித்துக்கொள்ளும், 77 வயது நிறைந்த, டெல்லியில் ஐம்பது வருடங்களைக் கழித்த, க.நா.சு.வின் மாப்பிள்ளையான, இந்த மனிதரைப்போல. நாடக நடிப்பு பெயரைக் கொடுக்காவிட்டால் என்ன? வாழ்க்கைத் துணையையே இவருக்கு அமைத்துத்தந்திருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' நாடகத்தில் 1970ல் இவருடன் சேர்ந்துநடித்த க.நா.சு.வின் மகள் ஜமுனாவைத்தான் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்.அனுபவக் கட்டுரைகளை வரலாறாகச் சுவைபட எழுதத்தேவையான நினைவாற்றலையும், ரசனையையும், பாசாங்கின்மையையும் - தன் பதினெட்டாவது வயதில் (1955) நாகர்கோவிலிலிருந்து வேலைக்காக தில்லிசென்ற - இவரது எழுத்துக்களில் உடனடியாக எவரும் கண்டுகொண்டுவிடமுடியும். அந்தகாலத்தில் டில்லியிலிருந்து சென்னை வரும் ஜனதா எக்ஸ்பிரஸ் பயணத்தை எழுதவருபவர், 'எப்போது சென்னை சேருமென்பது அப்போதைய ரயில்வேமந்திரி ஜக்ஜீவன்ராமுக்கே தெரியாது. வழியில் எந்த பிளாட்பாரத்தைப் பார்த்தாலுன் உடனே நிற்கவேண்டுமென்ற தனியாத ஆசை அதற்குண்டு' என்றெழுதியிருப்பது ஒரு சோறு. 'லஞ்ச ஊழலில் பிடிபட்ட மாஜிமந்திரி சுக்ராம் தன் டைரியில் LKA-50L என்று எழுதிவைத்திருந்ததற்கு, அத்வானி என்ற தன் மாடு 50 லிட்டர் பால் கறந்ததைத்தான் டைரியில் எழுதி வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுக்கிறார். CBIயும் ஏற்றுக்கொள்கிறது' என்றெழுதியிருப்பது இன்னொரு சோறு. பாசாங்கின்மைக்குத் தனியாக உதாரணம் ஏதும் தேவையில்லை; தொலைபேசியை பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் விழித்த தருணத்திலிருந்து தன் மது, புகைப்பழக்கங்களை விரிவாகப் பேசுவதிலிருந்து, எவ்வளவு புகழ்பெற்ற ஆளுமைகளைப்பற்றியும்  நினைத்ததைச் சொல்லிவிடுவதுவரை அனைத்தையும் வாசகர்முன் வெளிப்படையாக வைத்துவிடுகிறார்.

ராமச்சந்திரகுஹாவின் 'காந்திக்குப்பின் இந்தியா'வில் ஐனூற்றுக்குமேற்பட்ட சின்னதும் பெரிதுமான சமஸ்தானங்களை எப்படியெல்லாம் பாடுபட்டு சர்தார் படேல் தலைமையில் ஒன்றிணைந்த இந்தியாவாக்க முயற்சிகள் நடந்தன என்பது விரிவாக எழுதப்பட்டிருக்கும். அதை வாசிக்கும் ஒருவருக்கு, இந்தியா என்ற தேசத்தைக்கட்டியமைக்கும் பார்வையிலிருந்து, திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்தியாவிற்சேராமலிருக்க சர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர் (சமஸ்தான திவான்) தன் நாவன்மையாலும் செல்வாக்காலும் செய்த தடைகள் ஒரு வில்லன் தோற்றத்தை உருவாக்கும். அந்த வில்லனை இன்னொரு கோணத்திலிருந்து பாரதிமணியின் 'நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்' கட்டுரையில் காணமுடிகிறது. சர்.சி.பி.யின் சிறப்பும், தரப்பும் அக்கட்டுரையின் ஒருபகுதியாக சுருக்கமாக வருகிறது. வரலாற்றில் குணம் நாடிக் குற்றமும் நாடும் பொறுப்பு அவ்வகையில் வாசகருக்கே விடப்படுகிறது.

பாரதிமணியினும் ஏழெட்டுவயது மூத்த இந்திரா பார்த்தசாரதி, கிட்டத்தட்ட சமவயதுள்ள வெங்கட் சாமிநாதன், அவரைவிடப் பத்துவயது குறைந்த நாஞ்சில் நாடன், நாஞ்சிலைவிடப் பதினைந்துவயது குறைந்த ஜெயமோகன், ஜெயமோகனைக்காட்டிலும் பத்துவயது குறைந்த சுகா என்று பாரதிமணியை நெருக்கமாக அறிந்த பலதலைமுறைகளும் சொல்லிவைத்தாற்போல் ஒரேகுரலில்,  'நீங்க எழுதியதைவிட எழுதாததுதான் அதிகம்' என்றும் 'நீங்க எல்லாத்தையும் எழுதணும்' என்றும் தனித்தனியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதிமணிக்குத் தத்தம் எழுத்துக்களில் வேண்டுகோள் விடுக்குமளவுக்கு இவரிடம் எழுத அப்படி என்ன இருக்கக்கூடுமென்ற கேள்விக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவராக இருந்தபோது 1956ல் நடந்த ஒரு...... விருந்துமுடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், 'why this prolonged cold war between Sivaji Ganesan and MGR?' என்று அவர்கேட்ட முதல்கேள்வியும், அதைத்தொடர்ந்துவந்த 'ஜெமினிகணேசன்-சாவித்திரி திருமணத்திற்கு முதல்மனைவி சம்மதம் இருந்ததா?', 'சரோஜாதேவிக்கும் இன்ன நடிகருக்கும் என்ன தகராறு?', 'அந்த ஹிந்தி நடிகை இப்போதெல்லாம் அதிகமாகக் குடிக்கிறாராமே?' போன்ற கிசுகிசு கேள்விகளும் நம் குடியரசுத்தலைவர் வாயிலிருந்து வந்ததை எங்களால் ஜீரணிக்கமுடியவில்லை.... அவரைப்பார்க்கும்போது என் மனதுக்குள் இருந்த பிம்பம் இந்தியாவின் சமகால வேதாந்தியின் impeccable English ஆளுமையும், என் தந்தையிடம் பார்த்த ஐந்து வால்யூம் Indian Philosophy - By Dr.S.Radhakrishnan புத்தகங்களும்தான். தந்தையிடம் இதைப்பற்றிச்சொன்னபோது, 'அவாளும் மனுஷாதானேடா. நமக்கிருக்கிற ஆசாபாசங்கள் எல்லாம் அவாளுக்கும் உண்டு' என்பதுதான் அவர் பதில்" என்ற பத்தியை ஒரு கட்டுரையில் படித்ததும் கொஞ்சமாகவும், 'எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள் அல்லர்..... எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான் ஆனால் எல்லா சிங்குகளும் சர்தார்ஜிகள் அல்லர்' என்று கூர்மையாகத் தொடங்கி மேன்மேலும் விளக்கிச்சென்று கிட்டத்தட்ட சர்தார்ஜிகளின் இனவரைவியல் கட்டுரையாகவே 'சிங் இஸ் கிங்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த இன்னொரு கட்டுரையைப் படித்ததும் முழுமையாகவும் பதில் கிடைத்தது. இதுதான் என் முதலும் கடைசியுமான புத்தகம் என்று சொல்பவரிடம் அவர்கள் எல்லாத்தையும் எழுதச்சொல்லி வற்புறுத்துவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

கேள்வி ஞானத்திலேயே நூறு ராகங்கள்வரை கண்டுபிடிக்குமளவுக்கு இவர்சிறுவயதிலேயே பெற்றிருந்த ரசிப்புத்திறனும், பின்னாட்களில் தில்லி கர்நாடக சங்கீத சபாவுக்குச் செயலராக இருந்தபோது கிடைத்த தமிழ்நாட்டின்அநேக முதல்தரக் கர்நாடகசங்கீதக் கலைஞர்களின் நெருக்கமான நட்பும் இவரை எழுதச்செய்திருக்கும் 'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி' கட்டுரை சங்கீத ரசிகர்கள் தவறவிடக்கூடாதது. வருடாவருடம் கிருஷ்ணகான சபா ஏற்பாடுசெய்யும் நாதஸ்வர விழாவில் தவறாமல் கலந்துகொண்டு இன்னொரு ராஜரத்தினமோ, அருணாச்சலமோ தென்படுவார்களா என்று தேடுவது ஏதோ பொழுதுபோகாமல் சங்கீதம் கேட்பவரல்ல இவர் என்பதைச்சொல்கிறது. சுப்புடுவின் நிர்தாட்சண்யமான இசைவிமர்சனங்களை அனைவரும் அறிவோம். ஆனால் அவர் தான் பார்த்தேயிராத ஒரு நாடகத்திற்கு தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாகக் காட்டமான விமர்சனம் எழுதி அது ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையிலும் வெளியானதை 'சுப்புடு சில நினைவுகள்' கட்டுரையில் அறியமுடிகிறது. நாடகம் சுப்புடுவின் எதிர்முகாமினரால் - இதில்தான் மணி இருக்கிறார் - முதலில் திட்டமிடப்பட்டுப் பிறகு கடைசிநேரத்தில் கைவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது தெரியாததால் நடந்திராத நாடகத்தை அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்த சுப்புடு கையுங்களவுமாக மாட்டிக்கொண்டுவிட்டார். இவருடனான நட்பாலோ என்னவோ 'Mani's acting was the only redeeming factor' என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தாராம் விமர்சனத்தை!

மணியின் கதையா? மணியான கட்டுரைகளா? என்று பிரித்தறியமுடியாத விதத்தில் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகம் ஒரு வாசகனுக்கு அளிக்கும் மதிப்புகூட்டல் மூன்று தளங்களிலானவை;

முதலாவது தன்னிலிருந்து விலக்கிவைத்துப் பார்த்துப் போற்றவோ, தூற்றவோ மட்டுமே என்று இயல்பாகவே முடிவுகட்டப்பட்டுவிட்ட வரலாற்றுப்பிரபலங்களின், வார்க்கப்பட்ட பிம்பங்களுக்கு இன்னொரு பரிமாணத்தைக்கூட்டி முப்பரிமாணத்தில் நம்மிடையே இன்னுமொரு மனிதனாக உலவச்செய்வது. இந்தியத் தத்துவமும், இந்திய சினிமா நட்சத்திர கிசுகிசுவும் ஒரே மனிதரிடத்தில் mutually exclusive ஆக இருக்கமுடியும்; ஒன்றையொன்று பாதிக்கவேண்டிய அவசியமில்லை என்பதை இன்றைய தலைமுறைக்குக்காட்டுவது அவசியம். சாதனையாளர்களும் சில தனித்திறமைகள் கைவரப்பெற்ற சராசரிமனிதர்களே என்பதை உள்ளூற உணர்வதுதான் சராசரிகள் சாதிக்கத்துணிய முதற்படி என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டாவது, டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்று ஒரு தகவலுடன் மட்டுமே முக்காலேமூணுவீசத் தமிழர்களுக்கு வாழ்வில் டெல்லியின் பரிச்சயம் முடிந்துபோய்விடக்கூடிய நிலையில், அங்கே அரைநூற்றாண்டு வாழ்ந்த ஒரு தமிழரின் அனுபவங்களை விரிவாகவும் நுணுக்கமான தகவல்களுடனும் வாசிப்பது அந்நகரைக்குறித்து - அங்கு செல்லாதவருக்கும் - உண்மைக்கு மிகஅருகில் மனச்சித்திரங்களை உருவாக்குவது. மண்ணும் மனிதர்களும்தான் எந்தவகை எழுத்தின் சாராம்சமும் என்பதால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் பாரதிமணிக்கு எதையும் மேம்போக்காகச் சொல்லும் பழக்கமே கிடையாது என்பதால் தில்லிக்காரர்கள் வணக்கம் செலுத்துவது, ஏப்பம்விடுவது முதல் மரணத்தை அதன் சடங்குகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதுவரை நுண்தகவல்களுடன் - தமிழ்நாட்டின் பழக்கங்களுடன் ஒப்பிட்டும் - எழுதியிருப்பது பெருஞ்சிறப்பு. தமிழர்கள் இந்திப் பெயர்கள் உச்சரிப்பில் செய்யும் பிழைகளையும் இடம்கிடைக்கும் போதெல்லாம் லல்லு அல்ல லாலு, இர்பான் பதான் அல்ல பட்டான், சட்டீஸ்கர் அல்ல சத்தீஸ்கட், சுனில் மிட்டல் அல்ல மித்தல் என்று நூல்நெடுக பொறுப்பாக சொல்லிக்கொண்டே வருவதைப்போல் அதிகம்பேருக்குச் சொல்லத்தோன்றாது.

மூன்றாவது, ஒரு சாதாரண மனிதனின் சொற்கள் சந்தேகமின்றி அப்படியே ஏற்கப்படுவதை வாசகர் காண்பது. சொல்லப்படும் நிகழச்சிகள் கிசுகிசுக்களாக அல்லாமல் வரலாற்றுப் பதிவுகளாகப் பார்க்கப்படுவதன் ஆதாரப்புள்ளி இதில்தான் இருக்கிறது. அடுத்தடுத்து விடிந்து வெகு எளிதாகக் கடந்துபோய்விடக்கூடிய வாழ்நாட்களின் சாதாரணமான சம்பவங்கள் வழியாகத்தான் மெல்லமெல்ல, அறிந்தவர்களின் நட்பின் நம்பிக்கைக்கு ஒருவர் பாத்திரமாகமுடிகிறது. நீண்டநெடிய பொறுப்பான அவ்வேலையின் இறுதியில் கிடைக்கும் பரிசு, எழுதும் ஒரு சொல்லும் உதாசீனப்படுத்தப்படாமல் ஏற்கப்படுவதுதான்; தனிப்பட்ட முறையில்  அறிந்தவர்களால் மட்டுமல்லாமல் வாசிப்பவர்கள் அத்தனைபேராலும். தோழர் நல்லகண்ணுவை திருநெல்வேலி ஜங்ஷனில் சந்தித்தபோது உரையாடிவிட்டு ரயிலில் ஏறப்போனப்பொது தோழர் சாதாரண ஸ்லீப்பரிலும், தான் ஏ.சி.யிலும் பயணம் செய்வதை யோசித்துக்கொண்டே குற்றவுணர்ச்சியில் ஒரு ராத்திரி தூக்கமிழந்த மனிதரின் வார்த்தைகளை நம்புவதற்கு என்ன கஷ்டம்?

மணியுடன் நாதஸ்வர இசையைத் துணைக்கு வைத்துக்கொண்டு மதுவருந்துவதேகூட இலக்கிய அனுபவம்தான் என்று இலக்கியப்பிரபலங்களால் வழங்கப்படும் சான்றிதழ்களைத்தவிர நேரடியாக எழுத்திலிருந்தே வாசகரை நெகிழச்செய்யும் அனுபவங்களும் நூலில் உண்டு. உதாரணமாகக் குடியரசுதினக் கொண்டாட்டங்களின் நிறைவைக்குறிக்கும் வகையில் ஜனவரி 29ம் தேதி மாலை ஆறுமணிக்கு, வருடாவருடம் முப்படைகளின் பாண்டுவாத்தியக் குழுக்களும் இணையும் பிரம்மாண்டமான Beating Retreat நிகழ்ச்சியைப் பற்றி அறிமுகப்படுத்தி இவரெழுதியிருக்கும் விதத்தில் அதைப்பார்க்காமலேயே நெஞ்சு தேசப்பெருமிதத்தில் விம்மிப்புடைக்க ஆரம்பித்தது உண்மை. இலக்கிய அனுபவம் மெல்ல தேசப்பெருமித உணர்வாக மாறும் தருணமாக அது இருந்தது. பிறகு அந்நிகழ்ச்சியின் இந்த வருடக்காணொளியையும் - முதன்முறையாக - இணையத்தில் பார்த்து பிரமித்தேன்.

கொஞ்சமும் சந்தேகத்திற்கிடமின்றி வரலாற்று மதிப்பு மிகுந்ததொரு எழுத்து, தொகுப்பு.

(புள்ளிகள் கோடுகள் கோலங்கள், பாரதி மணி, வம்சி புக்ஸ், பக். 560, விலை  ரூ.550)


   
- சிவானந்தம் நீலகண்டன்

0 comments:

Post a Comment